மனித உரிமை ஆணைக்குழுவில் இலங்கை வாக்களித்த பல்வேறு விடயங்களை அரசாங்கம் செயற்படுத்தியுள்ளதாகவும் நெருக்கடியான சூழலிலும் கூட முக்கிய துறைகளில் முன்னேற்றத்தை எட்டியுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை 50ஆவது கூட்டத்தொடரில் நேற்று உரையாற்றுகையில் தெரிவித்துள்ளார்.
புலம்பெயர் சமூகத்துடனும், எமது நாட்டின் நல்வாழ்வுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் சிவில் சமூக அமைப்புக்களுடனும் இணைந்து செயற்படுவதில் இலங்கை திறந்த மனதுடன் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“நாடு எதிர்கொண்டுள்ள சிக்கல்களைத் தீர்க்க முற்பட்டு வருகிறோம். உள்நாட்டு செயன்முறைகள் மூலம் மோதலுக்குப் பிந்தைய ஒருங்கிணைப்பில் மேலும் உறுதியான முன்னேற்றத்தை நிரூபிப்பது கட்டாயமானதும், சவாலானதுமாகும். சமீபத்திய சவால்கள் மற்றும் தடைகள் இருந்தபோதிலும், சில முக்கிய துறைகளில் முன்னேற்றத்தை எட்டியுள்ளோம்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும்“கடந்த கூட்டத்தின் பின்னர், பயங்கரவாதத் தடைச் சட்டம் திருத்தப்படுமென மனித உரிமைப் பேரவையில் நான் உறுதியளித்தேன். பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான சட்டத்தை பாராளுமன்றத்தில் முன்வைத்து, அது நிறைவேற்றப்பட்டது.
இந்தத் திருத்தங்கள் தற்போதுள்ள சட்டத்தில் கணிசமான முன்னேற்றத்தையும், ஆழமான தாக்கத்தையும் ஏற்படுத்தும். இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் சுதந்திரங்களுக்கான காரணத்தை இது மேலும் அதிகரிக்கும். பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விசாரணைகளை மேற்கொள்வதில் உரிய நடைமுறையைப் பின்பற்றுமாறும், மிகவும் அவசியமான சந்தர்ப்பங்களில் மட்டுமே பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்துமாறும் சட்ட நடைமுறைப்படுத்தல் அதிகாரிகளுக்கு பொலிஸ் மாஅதிபர் அறிவுறுத்தியுள்ளார். பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த 22 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்துக்கான அலுவலகம் நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதில் அதன் பணிகளை முன்னெடுத்து வருகிறது.
காணாமல் போனோர் தொடர்பான அலுவலகமும் அதன் பணிகளை முன்னெடுத்து வருகிறது. இழப்பீடுகளுக்கான அலுவலகம், தற்போதைய பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும், ஆண்டுக்கான இழப்பீடுகளை வழங்குவதற்காக, அதன் ஆரம்ப ஒதுக்கீடான ரூபா. 759 மில்லியனுக்கும் மேலதிகமாக, ரூபா. 53 மில்லியனை ஒதுக்கியுள்ளது.
இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட 92% க்கும் அதிகமான தனியார் நிலங்கள் முறையான உரிமையாளர்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளன. உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பாக, சட்ட மாஅதிபர் உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்துள்ளதோடு அது தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.