இலங்கை-எரிபொருள் தட்டுப்பாடு: 20 நிரப்பு நிலையங்கள் மூடப்படும் அபாயம்

இலங்கையில் தற்போது நிலவும் சூழ்நிலையால் சுமார் 20 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட உள்ளதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் (FDA) தெரிவித்துள்ளது.

நாடு மிகவும் பாரதூரமான நிலைமையை எதிர்நோக்கி வருவதாகவும் விநியோகஸ்தர்கள் செயற்படுவதில் பாரிய பிரச்சினைகளை எதிர்கொள்வதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவரான டபிள்யூ.எஸ்.எஸ் பெர்னாண்டோ தெரிவித்தார்.

தற்போது ஹம்பாந்தோட்டை, மரதன்கடவல, கெக்கிராவ, கதிரான மற்றும் அக்குரஸ்ஸ ஆகிய ஐந்து எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் 24 மணி நேரமும் முழு பாதுகாப்பை வழங்குமாறு பாதுகாப்பு அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் இன்னும் அந்த பாதுகாப்பைப் பெறவில்லை என அவர் தெரிவித்தார்.

அத்துடன் நாட்டில் தற்போது 90,000 மெற்றிக் தொன் பெற்றோல் இருப்பு உள்ளதாகவும், அந்தக் கையிருப்பு சுமார் 20 நாட்களுக்கு போதுமானதாக இருக்கும் எனவும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனால் பொதுமக்கள் பெற்றோல் வாங்க வரிசையில் காத்திருக்க வேண்டாம் என கூட்டுத்தாபனம் கேட்டுக் கொண்டுள்ளது.

எனினும், டீசல் கையிருப்பு மிகவும் குறைவாக உள்ளதால், இந்த நாட்களில் பெற்றோல் நிலையங்களுக்கு டீசல் விநியோகம் மிகவும் குறைவாகவே உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை 40,000 மெற்றிக் தொன் டீசலை ஏற்றிக்கொண்டு எரிபொருள் தாங்கி ஒன்று மே 28 அல்லது 29 ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அதுவரை, தற்போதுள்ள இருப்புகள் அத்தியாவசியப் சேவைகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என  சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொழும்பிலிருந்து கிண்ணியா நோக்கி எரிபொருள் ஏற்றிச் சென்ற பௌசர் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகி, அதிலிருந்த 13,200 லீற்றர் பெற்றோல்  வீணாகியுள்ளது.

Tamil News