நவம்பர் 3க்கு பின்னர் சிறிலங்கா ஈழத்தமிழர்களின் இறைமை நீக்க அரசியலை வேகப்படுத்துவதைத் தடுக்க வேண்டும். | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 415

ஈரான் மீது அமெரிக்கா குறுகிய காலத்தில் “குண்டுகளுக்குத் தாயான குண்டுகள்” என்று கூறப்படும் பலத்த எடையுள்ள குண்டுகளை வீசக்கூடும் என்கிற எதிர்பார்ப்பு உலகில் பலமாகவுள்ளது. 29.10.2026 இல் அமெரிக்கா போரை முடிக்குமாறு ஈரானுக்கு எழுத்துவடிவில் கடிதம் வழங்கியமை அமெரிக்கா பலத்த ஆயுதங்களைப் பயன்படுத்தி குறுகிய காலத்தில் பலத்த தாக்குதலை ஈரான் மேல் நிகழ்த்துவதற்கான முதற்கட்ட செயற்பாடாகச் சர்வதேச ஆய்வாளர்களால் விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்கா தான் மேற்கொள்ளக் கூடிய இராணுவ நடவடிக்கைகளுக்கு நியாயப்படுத்தல்களை இப்பொழுதே கசிய விடத் தொடங்கி விட்டது.
ஈரான் கடலடி எரிசக்தி வழங்கு குழாய்கள் உட்பட வர்த்தகப் போக்குவரத்துக்கான கப்பல்கள் வரை அனைத்துலக வர்த்தகத்தை நாசப்படுத்தக் கூடிய வேலைகளைச் செய்வார்கள் என்பதே அமெரிக்காவின் பரப்புரையாகவுள்ளது. ஒன்றைத் திருப்பித் திருப்பிச் சொன்னால் அது உண்மை போல மனதில் பதிவாகலாம் என்கிற கூற்றே இந்நேரத்தில் நினைவுக்கு வருகிறது.
எது எப்படியிருப்பினும் நவம்பர் 3-ம் நாளுக்குப் பின் தானே உலகின் அரசன் என்ற நிலையில் ட்ரம்ப் அவர்களும் தானே இஸ்ரேலின் ஒரே பாதுகாப்பாளர் என்ற நிலையில் நெத்தன்யாகூவும். மத்திய கிழக்கில் பலத்த ஆயுதப்பயன்பாடுகளை மேற்கொள்கையில் கடந்த 40 ஆண்டுகளாக அமெரிக்காவுடனும் இஸ்ரேல் உடனும் வாழ்ந்து பழகிய ஈரானியர்கள் தங்களைப் பாதுகாப்பதற்கான தந்திரோபாயங்களை கட்டமைத்திருப்பார்கள் என்பதும் உலகுக்குத் தெரியாத விடயமல்ல.
அதனால்தான் நவம்பர் 3க்குப்பின்னர் உலகின் புதிய அரசியல் ஒழுங்குமுறை என்பது வல்லாண்மைகளினதும் அதிகார மையங்களினதும் ஆயுதபல பிரயோக அடக்குமுறை ஒழுங்குமுறையாக மாறலாம் என்னும் அச்சம் உலக அரசியலில் பலமாகவுள்ளது.
இந்நிலையில் “பறக்க பறக்க வாழாதே வர வரக்கண்டு வாழ்” என்னும் குருஞானசம்பந்தரின் அழைப்புக் கேற்ப வருவதை எதிர்கொள்ள வல்ல இடர்முகாமைத்துவ மையங்கள் ஈழத்தமிழர் தாயகத்தில் புலம்பதிந்து வாழ் உலக இனமான ஈழத்தமிழினத்தால் துறைசார் நிபுணர்களின் மதியும் பொருள்வளமுள்ளோர் நிதியும் ஈழத்தமிழர் தேசியச் சிந்தனையாளர்களின் அறிவும் அனுபவமும் இணைந்த நிலையில் கட்டமைக்கப்பட வேண்டும் என்பதே இலக்கின் விருப்பு மட்டுமல்ல பணிவான வேண்டுகோளும் கூட.
இவ்விடயத்தில் வேகமான ஈழத்தமிழர் ஒருங்கிணைப்பு இல்லையேல் வான்வெளிப் போரும் காலநிலைச் சீர்கேடும் உலகின் உணவு மருந்து எரிசக்தி போக்குவரத்துக்களான கடற்பாதைகளைப் பாதுகாத்தல் என்ற நோக்கிலேயே வேகம் பெறும். இதனால் இந்துமாக்கடற்பாதையின் முக்கிய சந்தியாக மட்டுமல்ல சக்தியாகவும் உள்ள ஈழத்தமிழர் தாயகம் நிச்சயம் பலவிதமான பாதிப்புகளைச் சந்திக்க வேண்டி வரும்.
இதனைக் கவனத்தில் எடுத்து ஈழத்தமிழர்களுக்கான இடர்முகாமைத்துவ திட்டங்கள் அமைப்புக்கள் மையங்கள் உடனடியாகத் தொடங்கப்படல் வேண்டும். இல்லையென்றால் ஈழத்தமிழர்கள் மிகுந்த சோத னைகளைச் சந்திக்க வேண்டி வரும் என்பதும் இலக்கின் இவ்வாரக் கருத்தாக உள்ளது.
மேலும் இவ்வாறு உலக அரசியல் ஒழுங்குமுறை சிக்கல்களை அனுபவித்த நேரங்களில் எல்லாம் சிங்கள பௌத்த பேரினவாதம் சூழ்நிலையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி ஈழத்தமிழர்களின் இறைமை நீக்கம் தேசிய நீக்கத்தை வேகப்படுத்துவது சிங்கள அரசியல் வரலாறாகவுள்ளது. இதற்கு தேசிய மக்கள் சக்தி ஆட்சியாளர்களும் விதிவிலக்காக அமைய மாட்டார்கள்.
இந்நிலையை ஈழத்தமிழர்கள் எதிர் கொள்வது எப்படி என்ற கேள்விக்கு சேர்பியாவில் மாணவர்கள் ஏற்படுத்தியுள்ள அரசியல் மாற்றம் விடையாக அமைகிறது. ஈழத்தமிழர்களுக்கு அவர்களின் ஜென் Z அல்பா தலைமுறையினரை ஈழத்தமிழர்களை எவ்வாறு இன்றைய உலக சூழ்நிலையை எதிர்கொள்ளப் பயன்படுத்த வேண்டும் என்பதற்கான முன்னுதாரணமாக சேர்பிய மாணவர்கள் அமைகின்றனர் என்பது இலக்கின் கருத்தாகவுள்ளது.
இந்த வாரம் கடந்த வாரத்தில் நடந்த சேர்பியாவின் தேர்தலில் மாணவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்கள் 250 பேரடங்கிய பட்டியல் 53 வீத வாக்குகளைப் பெற்று கடந்த பதினான்கு ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அரசத்தலைவர் அலெக்கசான்டர் வூஜிச் கட்சிக்கு 40 வீதமான வாக்குகளே கிடைத்த நிலையில் அவருடைய ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்த செய்தியுடன் ஆரம்பமாகியது. சேர்பிய மாணவர்கள் சேர்பியாவின் நோவி சாட் (Novi Sad) நகரில் புனரமைக்கப்பட்ட ரயில் நிலையம் ஒன்றின் மேல் விதானம் திடீரென இடிந்து விழுந்ததால் 16 பயணிகள் மரணமடைந்தார்கள்.
இதற்கு அரசாங்கத்தின் ஊழலும் குரோனிசம் (Cronyism) என்னும் தகுதியானவர்களை அல்லாது தமக்கு விரும்பியவர்களை பணிக்கு அமர்த்துவதுமே காரணமென இவற்றை மாற்ற வேண்டுமென்றே மாணவர்கள் போராடத் தொடங்கினார்கள்.
இந்தப் போராட்டம் இந்த நிகழ்வை வைத்துக் கொண்டு சரி பிழை பேசி விதண்டாவாதம் செய்து தனியாட்களை குறை காணும் போக்கில் அமையாது ஒரு நிகழ்வு என்பது அந்நேரத்தில் உள்ள அமைப்பு முறையின் (System) விளைவு என்பதாக மாணவர்களால் பார்க்கப்பட்டது. இந்த முறைமையை மாற்ற இரண்டு வருடங்களாக மாணவர்களின் போராட்டம் குறைகாண் போராட்டமாக இல்லாது மாற்றத்தை உருவாக்கும் போராட்டமாக அந்த மாற்றத்தை உருவாக்கத் தகுந்தவர்களைக் தாங்களே கண்டறியும் தன்மையானதாகத் தொடர்ந்தது.
இந்த இரண்டு வருட காலத்தில் மாணவர்கள் தமக்குள் யார் தலைவர் என்கிற முறையில் செயற்படாது ஆளுங்கட்சியாக இருந்தவர்களுக்கு எதிரான மக்கள் எல்லோருடையவும் வாக்குகளை ஒன்று சேர்த்தல் என்பதனை மையமாகக் கொண்டு செயற்பட்டனர் என்பதனை ஈழத்தமிழர்கள் மனதிருத்த வேண்டுமென இலக்கு கேட்டுக்கொள்கிறது.
இதற்காக சமுதாயத்தின் சகல நிலைகளிலும் இருந்து மாணவர்கள் 250 வேட்பாளர்களை தெரிவு செய்தனர். மாணவர்கள் அழைத்தவர்கள் வேட்பாளர்களாக நிற்கத் தாங்களும் இசைந்தனர். மாணவர்களுக்குக் கிடைத்த இந்த ஆதரவே இந்த வெற்றிகரமான மாற்றத்துக்கான மூலகாரணமாகியது.
இந்த முன்னுதாரணங்களை எமது ஜென் Z அல்பா ஈழத்தமிழ் இளையவர்களும் பெரியவர்களும் நன்கு அவதானித்து எம்மிடையிலும் இத்தகைய தகுதியானவர்களை இளையவர்கள் இனங்காண்பதும் இனங்காணப்பட்டவர்கள் மாற்றத்துக்குத் தங்களைக் கருவியாக்குவதற்கான மனநிலையுடன் அர்ப்பணிப்புடன் செயற்படுவதுமான இரு வழித் தொடர்பு மூலமாகவே சேர்பியாவில் ஏற்பட்டமை போன்ற மாற்றத்தை ஈழத்திலும் ஏற்படுத்த இயலும் என்பதே இலக்கின் இவ்வாரக் கருத்தாக உள்ளது. தலைவர் யார் என்று செயற்படாது ஈழத்தமிழின பகைமைகளுக்கு எதிராகவுள்ள மக்கள் அனைவரையும் ஒருங்குசேர்த்தல் வழியாகவே இதனைச் சாதிக்கலாம் என்ற சேர்பிய மாணவர் போராட்ட வழிகாட்டலை ஈழத்தமிழர்கள் ஏற்றுச் செயற்பட வேண்டும் என்பது இலக்கின் பணிவான வேண்டுகோளாகவுள்ளது.
இன்று அக்டோபர் 31 வன்னியரசின் இறுதி அரசனான பண்டாரவன்னியனின் நினைவேந்தும் நாளாக வும் உள்ளது. பண்டார வன்னியனின் வரலாற்றை படிப்பவர்களுக்கு பிரித்தானியர்களுக்கு எதிரான அவரின் போராட்டத்தில் கண்டி அரசுடனான அவரின் நெருக்கமான செயற்பாடு இலங்கைத் தீவில் உள்ள இருதேச இனங்களும் இலங்கைத் தீவைப் பாதுகாப்பதில் இணைந்தே செயற்பட வேண்டும் என்கிற வரலாற்று உண்மையை வெளிப்படுத்துகிறது.
அதே வேளை வன்னியின் இறைமையின் தனித்துவத்தைப் பேணிய நிலையிலேயே பண்டார வன்னியனின் அனைத்துச் செயற்பாடுகளும் அமைந்ததையும் காணலாம். இதனை இன்றைய ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் மனதிருத்தி சிங்கள அரசியல்வாதிகளைத் தலைமையாக ஏற்காது சமத்துவமான இலங்கைத் தீவின் அரசியல்வாதிகளாக ஈழத்தமிழர்களின் இறைமையை முன்னிறுத்திய நிலையிலேயே எந்தத் தொடர்பையும் மேற்கொண்டால்தான் ஈழத்தமிழர்களின் இறைமையின் தனித்துவமும் அதன் வழியான தாயக தேசிய தன்னாட்சி உரிமைகளை மீள நிறுவுதலும் நடைமுறைச்சாத்தியமாகும் என்பதனை இலக்கு வலியுறுத்திக் கூற விரும்புகிறது.
இன்று பலஸ்தீனிய மக்களின் வாக்களிப்பு உரிமை மறுக்கப்பட்ட இஸ்ரேலிய தேர்தலில் யாருக்கும் அரசமைப்பதற்காக உரிய 61 ஆசனங்கள் கிடைக்காத நிலையில் அரபு – பலஸ்தீனிய கட்சி பெற்றுள்ள 19 ஆசனங்களை எதிர்க்கட்சி தனதாக்கினால் தான் அதனால் அதன் 48 உடன் 19 ஐச் சேர்த்து 67 ஆசனங்களைப் பெற்று நெத்தன்யாகூவின் 58 ஆசனங்களை விட 9 ஆசனங்களை மேலதிகமாகப் பெற்று அரசமைக்கலாம். எந்தச் சூழலிலும் பாதிப்புறும் மக்களின் ஒற்றுமைதான் அவர்களுக்கு பலமாக அமைகிறது என்பதை ஈழத்தமிழ் அரசியல்வாதிகளுக்கு உணர்த்துவதற்காகவே இதனைச் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
அத்துடன் பலஸ்தீனிய அதிகாரசபையின் முன்னாள் தலைவர் அப்பாஸ் தாங்கள் இஸ்ரேலிய வெற்றி பெற்ற யூதர்கள் உடன் அரசமைப்பது குறித்துப் பேசத்தயார் என அறிவித்து அரபு பலஸ்தீனிய கட்சியினர் எதிர்க்கட்சியுடன் இணைந்து நெத்தன்யாகூவை பதவியில் இருந்து அகற்ற வழியமைத்துக் கொடுத்துள்ளார் ஆனால் யூதர் என்னும் இனமதவெறித்தனம் உச்சமாக உள்ள இஸ்ரேலிய அரசியல்வாதிகள் போராடும் ஹமாஸை அழிப்பதுதான் தமது தலையாய நோக்கமாகக் கருதுகின்றார்களே தவிர இஸ்ரேலிய நாட்டையோ மக்களையோ கவனத்தில் எடுக்கத் தவறுகின்றார்கள். இத்தகைய போக்கே சிறிலங்காவினதும் என்பதனால் ஈழத்தமிழர்கள் தமக்குள் ஒன்றுபட்டு நிற்க வேண்டிய மாதமாக ஈழத்தமிழரின் மாவீரர் மாதமாக இந்த நவம்பர் மாதம் அமைகிறது என்பதையும் இலக்கு வலியுறுத்திக் கூற விரும்புகிறது.

Tamil News
வல்லாண்மைகளின் மூவொரு ஒருங்கிணைப்பு சிறுதேச இன இறைமைக்கு பேராபத்து | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 414

Ilakku Weekly ePaper 414 | இலக்கு-இதழ்-414 | சனி, 24 ஒக்ரோபர், 2026