பூகோள அரசியலின் பக்க விளைவுகளில் இருந்து இலங்கை தப்பிப்பிழைக்க முடியாது | வேல்ஸ் இல் இருந்து அருஸ்

178 Views

முழு இலங்கையும் ஒரு அகதி முகாமாக மாற்றம் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா. அவர் கூறுவதிலும் அர்த்தமுள்ளது, அதாவது உணவு உட்பட எல்லா பொருட்களுக்கும் ஏனைய நாடுகளின் உதவியை எதிர்பார்த்து நிற்கும் இலங்கை என்ற அகதி முகாமை இந்தியாவே பராமரித்து வருகின்றது.

உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள் மற்றும் எரிபொருட்களை தொடர்ந்து வழங்கிவரும் இந்தியா இதுவரையில் 3.5 பில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது. அதில் 600 மில்லியன் டொலர்களை மட்டுமே நன்கொடையாக வழங்கியுள்ளது. ஏனையவற்றை கடன் அடிப்படையில் வழங்கியுள்ளது, இந்தியாவின் இந்த நிதி உதவிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியாக அதன் பிரதம பொருளாதார ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரன் கடந்த வாரம் இலங்கைக்கு பயணம் ஒன்றையும் மேற்கொண்டிருந்தார்.

A1 பூகோள அரசியலின் பக்க விளைவுகளில் இருந்து இலங்கை தப்பிப்பிழைக்க முடியாது | வேல்ஸ் இல் இருந்து அருஸ்ஆனால் இந்த கடன்களுக்கான நிபந்தனைகள் என்பது இலங்கை அரசு இந்தியாவின் கோரிக்கைகளுக்கு இணங்கவேண்டும் என்பதே. அதன் முதல்கட்டமாக பலாலி விமானத்தளத்தில் இருந்தும், காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்தும் இந்தியாவுக்கான போக்குவரத்துக்கள் ஆரம்பிக்கவுள்ளதுடன், ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகமும் அதனூடாகவே எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ளன. அதற்காகவே 45 மில்லியன் டொலர்கள் செலவில் இந்தியா காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய முன்வந்தது.
2017 ஆம் ஆண்டு மோடியின் இலங்கை பயணத்துடன் ஆரம்பமாகிய இலங்கை மீதான இந்தியாவின் பிடி அமெரிக்க மற்றும் சீன நகர்வுகளால் தாமதமாகினாலும் தற்போதைய சூழலை நன்கு பயன்படுத்த இந்தியா தீர்மானித்துள்ளதாகவே தோன்றுகின்றது.

அதேசயம், அமெரிக்காவுக்கும் சீனாவுக்குமிடையிலான பூகோள அரசியல் எவ்வாறு ஈகுவடோர் நாட்டினை பொருளாதாரத்தில் வீழ்ச்சியடையச் செய்து அரசியல் நெருக்கடிகளை தோற்றுவித்ததோ அதேபோன்ற ஒரு நிலை தான் இலங்கையிலும் இந்த நாடுகளால் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இங்கு இந்தியா என்ற ஒரு பங்குதாரர் அதிகம்.
இலங்கையின் தற்போதைய நெருக்கடியை ஒரு அரசியல் நெருக்கடியாக மாற்றியதில் அமெரிக்காவின் பங்கு அளப்பெரியது. 480 மில்லியன் டொலர் மிலேனியம் சலஞ் உடன்பாட்டின் தோல்வியை வெற்றியாக்கும் வரை அமெரிக்கா இலங்கைக்கு உதவப்போவதில்லை. ஆனால் உதவுவதுபோல காண்பிப்பார்கள்.

கடந்த வாரம் அமெரிக்காவின் திறைசேரி அதிகாரிகள் இலங்கைக்கு பயணம் செய்த அதேசமயம், அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட ஹமில்ட்டன் றிசேவ் வங்கி இலங்கை செலுத்த தவறிய 250 மில்லியன் டொலர்கள் பெறுமதியான கடன்தொகையை வசூலிக்கும் பொருட்டு அமெரிக்க நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

A3 பூகோள அரசியலின் பக்க விளைவுகளில் இருந்து இலங்கை தப்பிப்பிழைக்க முடியாது | வேல்ஸ் இல் இருந்து அருஸ்

மறுவளமாக  5 மில்லியன் டொலர்களை உதவியாக வழங்கியுள்ளது அமெரிக்க தூதரகம். இலங்கைக்கு ஒரு மாதத்திற்கு தேவையான எரிபொருட்களை வாங்கவே 500 மில்லியன் டொலர்கள் தேவைப்படுகையில் அமெரிக்காவின் உதவி என்பது புறக்கணிக்கத்தக்கதாகவே உள்ளது. தனது அரசியல் படைத்துறை நலன்களை எட்டாது அமெரிக்கா பெருமெடுப்பிலான  உதவிகளை வழங்கப்போவதில்லை.

பசுபிக் கடற்பிராந்தியத்தில் உள்ள மன்ரா வான்படைத்தளத்தை அமெரிக்காவின் பாவனைக்கு வழங்க மறுத்ததால் ஈகுவடோருக்கு ஏற்பட்ட நிலை தான் மிலேனியம் சலஞ் என்ற உடன்பாடு மூலம் அமெரிக்கப் படையினரின் சுயாதீன நடமாட்டத்தை தடுத்த இலங்கைக்கும் ஏற்பட்டுள்ளது. ஈகுவடோரின் 55 பில்லியன் டொலர்கள் கடன்தொகையில் 20 விகிதத்தை தனதாக்கி உள்நுளைந்த சீனா இலங்கையின் 51 பில்லியன் டொலர்கள் கடன் தொகையில் 10 விகிதத்தை தனதாக்கியதால் பூகோள நெருக்கடி அதிகரித்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை (30) தனது 10 நாள் களப்பணியை முடித்துள்ள அனைத்துலக நாணயநிதியம் சில வாக்குறுதிகளை மட்டும் வழங்கியுள்ளது. புதிய முதலீட்டாளர்களுக்கான உத்தரவாதத்தை வழங்குவதாக தெரிவித்துள்ளது. ஆனால் இது வெறும் ஆறுதல் வார்த்தை தான் ஏனெனில் பொருளாதாரத்தால் வீழ்ச்சியடைந்த நாட்டில் தனியார் யாரும் சில வருடங்களுக்கு முதலீடுகளை மேற்கொள்ளமாட்டார்கள், மாறாக அதிகாரமிக்க நாடுகள் தமது அரசியல் மற்றும் பூகோள நலன்சார்ந்து முதலீடுகளை மேற்கொள்ளலாம்.

இலங்கை எதிர்பார்ப்பது அனைத்துலக நாணயநிதியத்தின் சிபார்சுளை அல்ல, அடுத்த மாதம் இலங்கை என்ற நாட்டை இயங்கவைக்க வேண்டும் என்றால் உடனடியாக 6 பில்லியன் டொலர்கள் இலங்கைக்கு தேவை. பொருட்களை வாங்க 5 பில்லியன் டொலர்கள், நாணயத்தை தக்கவைக்க ஒரு பில்லியன் டொலர்கள். அதனை தான் இலங்கை அனைத்துலக நாணயநிதியத்திடம் எதிர்பார்க்கின்றது. ஆனால் அமெரிக்காவின் நலன்களுக்கு இலங்கை இணங்காதவரையில் அனைத்துலக நாணயநிதியம் எந்த நகர்வையும் மேற்கொள்ளப்போவதில்லை.

போரின் போது தான் அனைத்துலக சமூகத்தை ஏமாற்றிக் காரியத்தை சாதித்தாக தற்போதும் நம்பும் இலங்கை அரசு மேற்குலகத்தை ஏமாற்ற ரஸ்யாவுடன் முரண்படுவதுபோலவும் தோற்றப்பாட்டை ஏற்படுத்தியிருந்தது. ரஸ்யாவை எதிர்ப்பவர்களுக்கு உக்ரைனுக்கு வழங்குவது போல பில்லியன் டொலர்களை அமெரிக்கா அள்ளிவழங்கும் என எதிர்பார்த்த இலங்கை அரசு ரஸ்யாவின் ஏரோபுளோட் விமானத்தையும் தடுத்து வைத்திருந்தது.
ஆனால் அதன் மூலம் ரஸ்யாவின் எதிர்ப்பும் கிளம்பியதே தவிர மேற்குலகத்திடம் எந்த மாற்றமும் தென்படவில்லை. அதற்கான காரணம் சீனா இந்தியா என ரஸ்ய ஆதரவு அயலவர்களை கொண்ட இடத்தில் இருந்துகொண்டு இலங்கை காண்பிக்கும் எதிர்ப்பு என்பது ஏமாற்றுத்தனம் என்பதை யாரும் இலகுவில் புரிந்துகொள்ள முடியும்.

அதேசயம் மீண்டும் ரஸ்யாவிடம் எண்ணைக்கு சென்ற இலங்கைக்கு அதிக வரவேற்பு கிடைக்கவில்லை. கடந்த வாரம் இலங்கையில் உள்ள ரஸ்ய தூதரக அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சுக்களின் போது எரிபொருட்களை கடனாக தரும்படி கேட்கப்பட்டது. ஆனால் பொருளாதாரத்தில் வீழ்ச்சியடைந்த நாட்டுடன் நாம் வர்த்தக உறவுகளை பேணுவதில்லை என்ற பதிலே ரஸ்ய தரப்பிடம் இருந்து கிடைத்தது.

இந்த நிலையில் தற்போது ரஸ்ய அதிபர் விளமிடீர் பூட்டினுடன் நேரிடையாக தொலைபேசியில் பேசுவதற்கு அனுமதிகேட்டு காத்திருக்கின்றார் இலங்கை அரச தலைவர். கடந்த வாரம் இடம்பெற்ற பிறிக்ஸ் மாநாட்டில் பூட்டின் கூறியதுபோல உலகம் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பாத ஒரு பிளவடைந்த நிலைக்கு சென்றுவிட்டது.

இந்த கூட்டணியில் இணையும் நாடுகள் ஒரு நிரந்தர முனைவாக்கத்திற்குள் தான் செல்லமுடியும். அவ்வாறு செல்வதாக இருந்தால் அதற்கான விலையை எதிர்த்தரப்புக்கு செலுத்தவேண்டும். அதனை எதிர்த்தரப்பு அங்கு வாழும் மக்களின் இனங்களின் இறைமையை முன்நிறுத்தி அடையவே முற்படுவார்கள். இலங்கையும் அதற்கு விதிவிலக்காக முடியாது.

Leave a Reply