போராட்டக்காரர்கள் மீதான தாக்குதலுக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம்

கொழும்பு காலி முகத்திடலில் எதிர்ப்பில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது அதிகாரிகளால் பலவந்தமாகவும், வன்முறையை தூண்டும் விதத்திலும் நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

காலி முகத்திடலுக்கு மக்கள் பிரவேசிப்பதை தடுக்கும் வகையில் நூற்றுக்கணக்கான பொலிஸாரும் இராணுவத்தினரும் வீதிகளை மறித்துள்ளதை காணக்கூடியதாக உள்ளதென சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த பகுதிக்குள் பிரவேசிப்பதற்கு முயற் சித்த சட்டத்தரணிகளும் தடுக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில் ரீதியில் தலையீடு செய்வதற்கு முயற்சித்த சட்டத்தரணிகளில் குறைந்தபட்சம் இருவர் மீது இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் “நிராயுதபாணிகளான பொதுமக்களை இலக்காகக்கொண்டு ஆயுதமேந்திய இராணுவத்தினர் முன்னெடுக்கும் இந்த நடவடிக்கைகள் உடன் நிறுத்தப்பட வேண்டும்.

சட்டவாட்சி மற்றும் மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு மதிப்பளிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது அரசாங்கம் உறுதியளிக்க வேண்டும்.

புதிய ஜனாதிபதி பதவியேற்று முதல் நாளிலேயே பொது மக்களின் எதிர்ப்பு நடவடிக்கையை ஒடுக்குவதற்கு ஆயுதமேந்திய படையினரை பயன்படுத்தியுள்ளமை நாட்டின் சமூக பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மைக்கு பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும்.

இந்த சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை நடத்துமாறும் தொடர்புடையவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த நடவடிக்கைக்கு கட்டளையிட்ட அனைவரும் அதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு” என்று  இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்  கூறியுள்ளது.

இதேவேளை, காலி முகத்திடலில் அமைதியான முறையில் எதிர்ப்பில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது அதிகாலை வேளையில் நடத்தப்பட்ட மிலேச்சதனமான தாக்குதலை கண்டிப்பதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.