இலங்கை – அவுஸ்திரேலிய இருதரப்பு பேச்சுவார்த்தைகள் அடுத்த வாரம் ஆரம்பம்

இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான வெளிவிவகார அலுவலகத்தின் நான்காவது சுற்று இருதரப்புப் பேச்சுவார்த்தைகள், இரண்டாவது கடற்பிராந்திய மாநாடு மற்றும் மூன்றாவது வர்த்தக மற்றும் முதலீட்டு கூட்டு ஆணைக்குழுக்கூட்டம் என்பன அடுத்த வாரம் நடைபெறவுள்ளன.

இப்பேச்சுவார்த்தை மற்றும் கூட்டம் என்பன எதிர்வரும் செவ்வாய்க்கிழமையும் (11) புதன்கிழமையும் (12) கொழும்பில் அமைந்துள்ள வெளிவிவகார அமைச்சில் நடைபெறவுள்ளன.

இதற்கு அவுஸ்திரேலிய வெளிவிவகார மற்றும் வர்த்தகத் திணைக்களத்தின் உதவிச்செயலர் ஹரி கோவான், வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலர் யசோஸா குணசேகர மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான மேலதிக செயலாளர் ஷனிகா திஸாநாயக்க, வர்த்தகம் மற்றும் உணவுப்பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஏ.எம்.பி.எம்.பி அத்தபத்து ஆகியோர் தலைமைதாங்கவுள்ளனர்.

இப்பேச்சுவார்த்தைகள் மற்றும் கூட்டங்களின்போது இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்த மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட இருப்பதுடன், அரசியல், வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, சுற்றுலா, விவசாயம், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைசார்ந்த அக்கறைக்குரிய விடயங்கள் தொடர்பிலும் ஆராயப்படவுள்ளது.