மாகாண சபைத் தேர்தல் முறை குறித்து ஆராய விசேட செயற்குழு நியமனம்

மாகாண சபைத் தேர்தலை எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் நடத்த வேண்டும் என்று ஆராய்ந்து விதப்புரைகளை முன்வைப்பதற்கு 12 பேரை உள்ளடக்கிய வகையில் விசேட செயற்குழுவை நியமிக்கும் யோசனையை ஆளும் தரப்பின் பிரதம கொறடாவான நளிந்த ஜயதிஸ்ஸ சபைக்கு முன்வைத்தார்.

முழுமையாக அதிகாரமளிக்கப்பட்ட. இந்த செயற்குழு தமது முழுமையான அறிக்கையை 03 மாத காலத்துக்குள் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (6) நடைபெற்ற அமர்வின் போது  பிரேரணையை சமர்ப்பித்தார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

மாகாண சபைகள் தேர்தல்கள் எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்வதற்கும், அது தொடர்பான விதப்புரைகள் மற்றும் யோசனைகளை முன்வைப்பதற்குரிய விசேட செயற்குழுவை நியமிக்கும் பிரேரணையை முன்வைக்கிறேன்.

1988 ஆம்  ஆண்டின் 02 ஆம் இலக்க மாகாண சபைத் தேர்தல்கள் சட்டத்தை திருத்தம் செய்து தற்போது வழக்கில் உள்ள 2017 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க சட்டத்தின் ஊடாக அறிமுகப்படுத்தப்பட்ட கலப்பு தேர்தல் முறைமைக்கமைய தொகுதி,எல்லை நிர்ணய  முறைமை இதுவரையில் நிறைவுப்படுத்தாத காரணத்தால் சகல  மாகாண சபைகள் மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் இயங்குகிறது.

தேர்தல் முறைமை மற்றும் தேர்தல் சட்டத்தின் குறைகளை அவதானத்து அதற்குரிய திருத்தங்களை முன்வைக்க 2022 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் நியமிக்கப்பட்ட விசேட குழு 2017 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க திருத்தச் சட்டத்தின் ஊடாக அறிமுகப்படுத்தப்பட்ட கலப்பு தேர்தல் முறைமைக்கு அமைய எல்லை நிர்ணயம் செய்து அதன் பின்னர் சட்ட வரைவை தயாரிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதுவரையில் விகிதாசார தேர்தல் முறைமையின் தேர்தலை நடத்தலாம் என்று யோசனை முன்வைக்கப்பட்டது.

17 உறுப்பினர்களை கொண்ட இந்த குழுவில் 8 பேர் மாத்திரம் கைச்சாத்திட்டு அறிக்கையை 2023 ஆம் ஆண்டு காலப்பகுதியில் முன்வைத்தனர்.

2017 ஆம் ஆண்டுக்கு பின்னர் மாகாண சபைத் தேர்தல் குறித்து விசேட கவனம் செலுத்தப்படுகிறது. இதற்கமையாகவே தற்போது செயற்குழுவுக்கான யோசனை முன்வைக்கப்படுகிறது. இந்த குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை சபாநாயகர் பெயர் குறிப்பிட வேண்டும். குழுவின் உறுப்பினர் எண்ணிக்கை 12 விஞ்சிதல் ஆகாது.

எந்த நபரையும் குழுவுக்கு அழைக்கவும்,ஆவணம் கோரவும் அதிகாரமளிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற அமர்வு இல்லாத சந்தர்ப்பங்களிலும் கூட்டங்களை நடத்த முடியும். விதப்புரைகள் மற்றும் யோசனை தொடர்பான முழுமையான அறிக்கை மூன்று மாத காலத்துக்குள் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றார்.