தொற்று நோய் அபாயத்தை கட்டுப்படுத்தும் வேலை திட்டம் -மன்னாரில் விசேட கலந்துரையாடல்

மன்னார் மாவட்டத்தில் தொற்று நோய் அபாயத்தை கட்டுப்படுத்தும் வேலை திட்டம் குறித்து ஆராய சுகாதார அமைச்சின் விசேட குழுவொன்று மன்னார் விஜயம் செய்துள்ளது.

இதன்படி, அங்கு தொற்று நோய் அபாயத்தை கட்டுப்படுத்தும் வேலை திட்டம் தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.

நேற்று (புதன்கிழமை) மாலை மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இந்தக் கலந்துரையாடல் இடம் பெற்றது.

மன்னார் மாவட்டத்தில் அதிகரித்து காணப்படும் போதை பொருள் கடத்தல் மற்றும் இந்தியாவுடனான சட்ட ரீதியற்ற கடல் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு காரணங்களை முன்னிலைப்படுத்தி குறித்த தடுப்பு நடவடிக்கை ஆராயும் விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.

சுகாதார அமைச்சின் பொது சுகாதார சேவைகள் மேலதிக பணிப்பாளர் வைத்தியர் லஷ்மி சோம துங்க தலைமையில் உயர்மட்ட குழுவில் பாலியல் நோய் மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிகழ்ச்சி திட்டம் பணிப்பாளர் வைத்தியர் ரசாஞ்சலி கெட்டியாராட்சி, சுகாதார அமைச்சின் முன்னாள் காச நோய் தடுப்பு நிகழ்ச்சித் திட்ட பணிப்பாளர், தற்போது நிகழ்ச்சி திட்ட செயலாளர் மற்றும் மேற்பார்வை உத்தியோகத்தர் காந்தி ஆரிய ரத்ன ,மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி. வினோதன் உட்பட மன்னார் மாவட்ட தொற்றுநோய்த் தடுப்பு பிரிவு வைத்தியர்கள் மற்றும் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைக்கு இணைந்து பணியாற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் தலைவர் மற்றும் நிறுவனங்களில் மாவட்ட இணைப்பாளர்கள் இதில் கலந்து கொண்டிருந்தனர்.