ஒற்றுமை முயற்சிகள் தேர்தலை அடிப்படையாக கொண்டுள்ளது- சித்தார்த்தன்

627 Views

IMG20210716163217 01 1 ஒற்றுமை முயற்சிகள் தேர்தலை அடிப்படையாக கொண்டுள்ளது- சித்தார்த்தன்

ஒற்றுமை முயற்சிகள் தேர்தலை அடிப்படையாக கொண்டிருந்த காரணத்தி னாலேயே அவை பிரிவை நோக்கி செல்கின்றது என்று  பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்தார்.

வவுனியாவில் இடம் பெற்ற வீரமக்கள் தின நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

“அனைவரது அர்பணிப்புக்களும், உயிர் தியாகங்களும் வீண் போய் விடுமோ என்ற அச்சம் தமிழ் மக்கள் மத்தியில் இருக்கிறது. இன்று ஒரு பின்னடைவான நிலமைக்கு தமிழ் மக்கள் முகம் கொடுத்துள்ளனர். இதற்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் தமிழ் மக்கள் மத்தியில் இருக்கக் கூடிய ஒற்றுமையின்மை, மற்றும் தமிழ் கட்சிகள் பல கட்சிகளாக பிரிந்து நின்று மாறுபட்ட கருத்துக்களை தெரிவிக்கின்றமை, அரசுக்கு மிகவும் சாதகமாக அமைகின்றது.

கட்சிகள் ஒற்றுமையாக இருந்தால் இனம் ஒற்றுமையாக இருக்கும் என்ற அடிப்படையில் நாம் பல முயற்சிகளை எடுத்திருக்கின்றோம். அவைகள் மக்களின் விடுதலையை விரும்புகின்ற அல்லது நேசிக்கின்ற அடிப்படையில் எடுக்கப் பட்டவையாக கடந்த காலங்களில் இருக்க வில்லை. கூடுதலான ஒற்றுமை முயற்சிகள் தேர்தலை அடிப்படையாக கொண்டிருந்த காரணத்தினால் தான் அவை பிரிவை நோக்கி செல்கின்றது.

கூட்டமைப்பானது பலம் வாய்ந்த அமைப்பாக இருந்த நிலையில் தற்போது பலவீனமடைந்து வரும் நிலையை பார்க்கிறோம். அது பலவீனமடைகின்ற போது தமிழினமும் பலவீனமடைகின்றது. வடக்கு கிழக்கில் அரசுக்கு சார்பான 6 பேர் பாராளுமன்றில் அங்கம் வகிக்கின்றனர். இது ஒரு பின்னடைவை கொடுக்கக் கூடிய விடயமே. எனவே மக்கள் சரியாக உணர்ந்து கொள்ள வேண்டும். ஒற்றுமையான முயற்சியை அவர்கள் ஆதரிக்க வேண்டும். கட்சிகளும் மற்றையவர்களை அரவணைப்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

சில தவறுகள் காரணமாகவே கூட்டமைப்பில் இருந்து பலர் பிரிந்து சென்றனர். அவர்களை மீளவும் உள்வாங்குவதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். அந்த முயற்சிகளை தொடர்ந்து நாம் எடுக்கின்றோம். ஆனால் தமிழ் மக்கள் விடயத்தில் எமக்குத் தான் அதிகம் தெரியும் என்றவாறான அபிப்பிராயங்களை ஊடகங்கள் மூலமாக  கூறி குழப்பங்களை தொடர்ந்து வைத்திருக்கிறோம். இது ராஜபக்ச அரசுக்கு சாதகமாக அமைந்திருக்கின்றது.

மாகாண சபையை இயங்க வைக்க கூடாது என்ற ஒரு எண்ணப்பாடு அரசின் மத்தியில் இருக்கிறது. காலப் போக்கில் அதனை மறந்து விடும் நிலைமையினை உருவாக்கி அந்த முறைமையே இல்லாமல் ஆக்கும் முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.

மாகாண சபை மாத்திரமே தமிழ் மக்கள் மத்தியில் இருக்கக் கூடிய ஒரேயொரு சட்டவாக்கம். அதுவும் இல்லை என்றால் மீண்டும் பூச்சியத்தில் இருந்து ஆரம்பிக்கும் ஒரு நிலமை உண்டாகும். எனவே அதனை காப்பாற்றிக் கொண்டு அதற்கான தேர்தலை நடாத்துவதற்கான அழுத்தங்களை கொடுக்க வேண்டும். அங்கு இறுக்கமான ஒரு அரசை உருவாக்குவதன் மூலம் தான் அதனை காப்பாற்றுவதுடன் அதிலிருந்து படிப்படியாக மேலே செல்ல முடியும். அது தான் யதார்த்தமான விடயம்.

இதே வேளை 13வது திருத்தத்தை அமுல்படுத்த வேண்டும் என்பதில் இந்திய அரசு உறுதியாக இருக்கிறது. ஆயினும் தமிழ் மக்கள் ஒன்றுபட்டு அதனை உருவாக்கு வதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும் என்று அவர்கள் எமக்கு தெரிவிக்கின்றனர். ஒற்றுமையாக ஒரே கட்சியாக இருக்க வேண்டும் என்றில்லாமல், அடிப்படையிலே தமிழ் மக்களின் தேவை என்ன என்பதை உணர்ந்து சரியான நிலைப்பாட்டை நகர்த்துவதன் மூலம் தான் எமது மக்கள் தலை நிமிர்ந்து நிற்கும் நிலையை உருவாக்க முடியும்.

அதற்கு முயற்சிப்பதுடன் அதனை அடைவதன் மூலம் தான் இன்னுயிரை கொடுத்தவர்களின் ஆத்மா சாந்தியடையும்” என்றார்.

இலக்கு இந்த வார மின்னிதழ் 138

ilakku Weekly Epaper 138 July 11 2021 e1626027838912 ஒற்றுமை முயற்சிகள் தேர்தலை அடிப்படையாக கொண்டுள்ளது- சித்தார்த்தன்

Leave a Reply