தமிழர் தாயகத்தின் கரையோரப் பகுதிகளை கைப்பற்றும் சிங்கள அரசின் திட்டம்

ஈழத்தமிழினம் இன்று சிங்கள பௌத்த இனவாதத்தின் அடக்குமுறைக்குள் இலங்கைத் தீவிலும், புலம்பெயர்ந்து உலகெங்கும் பரந்து வாழும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். அன்று தமிழர் தாயகத்தின் எல்லைப் பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்களை ஆரம்பித்து, அதன் பின்னர் தமிழர் தாயகப் பகுதியினுள் தமிழர் தாயகத்தை துண்டாடும் நோக்கத்திலும், செயற்படுத்தப்பட்டன. அந்த வகையில் இன்று தமிழர் தாயகத்தின் கரையோரப் பகுதிகளையும் சிங்களமயப்படுத்தி தமிழர் தாயக எண்ணக்கருவை அழிக்கும் செயற்திட்டங்கள் திட்டமிடப்பட்டு செயற்படுத்தப்பட்டும் வருகின்றன. இச் செயற்திட்டங்கள் நிறைவேறும் போது, தமிழர்களின் வாழ்வு நிலை, வாழ்வு இயக்கங்கள் யாவும் கட்டுப்படுத்தப்பட்டு, தமிழர்கள் பலவீனமாகும் நிலை ஏற்படும்.

இதற்கென தமிழர் தாயகம் முற்றுமுழுவதுமாக இராணுவமயப்படுத்தப்பட்டு ஈழத்தமிழர்கள் மீது பல்வேறு அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளது சிங்கள பௌத்த இனவாதம். இதன் மூலம் தமிழர்களை பலவீனப்படுத்தும் சூழ்ச்சிச் செயற்பாடுகளையும் சிங்கள இனவாதம் ஆரம்பித்துள்ளது. அதிலொன்றுதான் தமிழர் தாயகத்தின் கடற்கரையோரப் பகுதிகளை சிங்களமயப்படுத்தும் சிங்களக் குடியேற்றத் திட்டங்களை செயற்படுத்தல் ஆகும்.

தமிழர் தாயகத்தின் கரையோரப் பகுதிகளை கைப்பற்ற நினைக்கும் சிங்கள அரசின் செயற்திட்ட இலக்குப் பகுதிகளாக மன்னார் மாவட்டத்தின் கரையோரப் பகுதியிலிருந்து கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி கரையோரப் பகுதிகளையும் கொண்டதாக திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் யாழ்ப்பாண மாவட்டத்தின் வடமராட்சி கிழக்குக் கடற்கரைப் பகுதியிலிருந்து, கிளிநொச்சி மாவட்டத்தின் சுண்டிக்குளம் பகுதி வரையும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் முல்லைத்தீவு மாவட்டத்தின் செம்மலையிலிருந்து கொக்கிளாய் வரையும் தொடர்ந்து, திருகோணமலை மாவட்டத்தின் தென்னமரவடியிலிருந்து குச்சவெளி வரையான கரையோரப் பகுதிகளும், திருகோணமலை நகரின் கரையோரப் பகுதிகளும் இத்திட்ட வடிவத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இத்திட்டங்கள் யாவும் தமிழர் தாயகத்தின் கரையோரப் பகுதிகளை சிங்களமயப்படுத்தப்படும் ஆரம்ப திட்டங்களாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்திட்டங்களின் தொடர்ச்சியாக அடுத்த கட்டமாக தமிழர் தாயகத்தினுள் மேற்கொள்ளப்பட்ட சிங்களக் குடியேற்றத் திட்டங்களை இக் கரையோர சிங்களக் குடியேற்றத் திட்டங்களுடன் இணைத்து செயற்படுத்தப்படும். இதன் தொடர்ச்சியாக மூன்றாம் கட்ட நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன. அதன்படி செயற்படுத்தப்பட்ட அனைத்து கரையோரப் பகுதியை ஆக்கிரமித்த சிங்களக் குடியேற்றத் திட்டங்களை ஒருங்கிணைத்து திட்ட செயற்பாடுகளை மேற்கொள்ளும் சூழ்ச்சிகளும் திட்டமிடப்பட்டுள்ளன. இத்திட்ட செயற்பாடுகளுக்கு வாய்ப்பாக பல்வேறுபட்ட சூழ்நிலைகள் தமிழர் தாயகத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. அவையாவன:

  • தமிழர் தாயகத்தின் கரையோரப் பகுதிகளில் இராணுவ, கடற்படை முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
  • மேலும் தமிழர் தாயகம் முழுவதும் இராணுவமயப்படுத்தப்பட்டு, தமழர்களின் போராட்ட எழுச்சிகள் யாவும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
  • தமிழர் தாயகத்தினதும், ஈழத்தமிழினத்தினதும் வரலாற்றை திரிக்கும் வகையில் ‘தொல்பொருள் ஆய்வுக் குழுக்களை’ சிங்கள பௌத்த துறவிகளையும், சிங்கள இராணுவ மற்றும் அரச அதிகாரிகளையும் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.
  • இதன் மூலம் தமிழர் தாயகத்தில் ஏற்கனவே உருவாக்கப்பட்ட சிங்களக் குடியேற்றங்கள் பலப்படுத்தப்படுவதோடு, புதிய வரலாறு சிங்களவர்கள் சார்பாக உருவாக்கப்பட்டு புதிய சிங்களக் குடியேற்றங்கள் ஏற்படுத்தப்படுகின்றது.
  • ‘விகிதாசாரத் தேர்தல் முறைமூலம்’ தமிழர்களின் பாராளுமன்ற பிரதிநிதிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு, தமிழர் தாயகத்திலிருந்து இலங்கைப் பாராளுமன்றத்திற்கு சிங்களவரும், சிங்கள இனவாதக் கட்சிகளின் பிரதிநிதிகளும் செல்லும் நிலை உருவாகியுள்ளது.

இதன் மூலம் சிறீலங்கா பாராளுமன்றத்தில் தமிழர்களின் உரிமைக் குரல்கள் பலவீனப்படுத்தப்பட்டுள்ளது.

இச் செயற்பாடுகளுக்கு சான்றாக பல்வேறு செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டதை ஈழத் தமிழினம் அறிந்து கொள்ள வேண்டும். அவற்றில் சிலவற்றை எடுத்துக் காட்ட வேண்டியுள்ளது. அவையாவன:

  • சிறீலங்கா அதிபர் கோத்தபயா ராஜபக்ச அவர்களால் உருவாக்கப்பட்ட ‘தொல்பொருள் ஆய்வுக் குழு’ செயற்பாடுகள் கிழக்கு மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
  • அண்மையில் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் குறைந்ததும், தமிழர் தாயக மாவட்டத்தில் சிங்கள இராணுவ அதிகாரிகள் தேர்தலில் போட்டியிட்டு, அவர்கள் கணிசமான வாக்குகளை பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
  • தமிழர் தாயகத்தின் குடித்தொகைப் பரம்பலில் தமிழர்களின் குடித்தொகை வீதம் குறைந்துள்ளதும், சிங்களவர்களின் குடித்தொகை வீதம் அதிகரித்திருப்பதும் சான்றாக அமைகின்றது.
  • தமிழர் தாயகத்தின் உட்பகுதிகள் உட்பட கரையோரப் பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களில் சிங்களமயப்படுத்தல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதும் எடுத்துக் காட்டுகின்றது.

இந்த நிலைமைகள் யாவும் சிங்கள பௌத்த இனவாதம் தமது ஆதிக்கத்திற்கான தனிவழியை தெரிவு செய்து விட்டதை உறுதிப்படுத்துகின்றது. சிங்கள இனவாதம் என்றும் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான எந்தத் தீர்வையும் முன்வைக்கப் போவதும் இல்லை. தரப்போவதும் இல்லை என்பதையே எடுத்துக் காட்டுகின்றது.

எனவே ஈழத் தமிழினம் தமது பலவீனங்களை விரட்ட வேண்டும். தமது பலத்தைத் திரட்ட வேண்டும். தமிழர் தாயகத்திலும், சர்வதேசத்திலும் வாழும் தமிழர்கள் தமிழ்த் தேசிய செயற்பாடுகளை ஒருங்கிணைத்து தமது சுயநிர்ணய உரிமையை வென்றெடுப்பது இன்றியமையாதது ஆகும்.

-அன்பன்-