முல்லைத்தீவு – புலிபாய்ந்தகல் பகுதியில் அத்துமீறி வாடி அமைக்கும் சிங்கள மீனவர்கள்!

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் – புலிபாய்ந்தகல் பகுதியில் அமைந்துள்ள தமிழ் மீனவர்களின் சில வாடிகளை அடாவடித்தனமாக அகற்றிவிட்டு, அந்த இடத்தில் தென்னிலங்கையைச் சேர்ந்த சிங்கள மீனவர்கள் அத்துமீறி வாடி அமைக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.

அந்தவகையில் கடந்த வருடமும் அத்துமீறி குறித்த பகுதியில் வாடி அமைப்பதற்கு சில பெரும்பான்மையின மீனவர்கள் முயற்சி மேற்கொண்டிருந்தனர். இந்நிலையில் அப்பகுதி மீனவர்கள் மற்றும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆகியோர் இணைந்து குறித்த அத்துமீறல் நடவடிக்கையைத் தடுத்து நிறுத்தியிருந்தனர்.

இத்தகைய சூழலில் மீளவும், புலிபாய்ந்தகல் பகுதியில் தென்னிலங்கையைச் சேர்ந்த சில சிங்கள மீனவர்கள், முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்திடமோ, கரைதுறைப்பற்று பிரதேச செயலக காணிப் பிரிவிடமோ எவ்வித அனுமதிகளையும் பெறாது அத்துமீறி வாடிகளை அமைத்துள்ளனர்.
அத்துடன் அவர்களின் மீன்பிடிப் படகொன்றும் அனுமதி பெறப்படாமல் அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொக்குத்தொடுவாய் கடற்றொழிலாளர் சங்கத்தின் அழைப்பை ஏற்று அப்பகுதிக்குச் சென்ற வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், தென்னிலங்கை மீனவர்களால் அத்துமீறி வாடி அமைக்கப்பட்டமை தொடர்பில் கரைதுறைப்பற்று காணி உத்தியோகத்தருக்கு தெரியப்படுத்தியதுடன் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார்.

இதன்படி, அனுமதிகள் எவையும் பெறப்படாமல் அத்துமீறி அடாவடியாக தென்னிலங்கை மீனவர்களால் அமைக்கப்பட்டுள்ள வாடிகளை உடனடியாக அங்கிருந்து அகற்றுமாறு கரைதுறைப்பற்று பிரதேச செயலக் காணிப் பிரிவால் அப்பகுதியில் துண்டுப்பிரசுரம் காட்சிப்படுத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.