இடைக்கால ஜனாதிபதியின் குறுகியகாலச் சாதனைகள் | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு இதழ் 194

308 Views

இடைக்கால ஜனாதிபதியின் குறுகியகாலச் சாதனைகள்

சிறிலங்காவின் இன்றைய இடைக்கால ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உலக அரசியல் வர லாற்றில் எதிராக எழும் மக்கள் பேரெழுச்சியை அந்த எழுச்சிக்கு இலக்காக உள்ள ஒரு அரசியல் வாதியும், மக்கள் பேரெழுச்சிக்கு இலக்காக்கப்படும் ஒரு அரசாங்கமும், அதனைத் தம் எழுச்சியாகவே மாற்றலாம் என்பதில் ஓரே நேரத்தில் இரட்டைக் கின்னஸ் சாதனைகள் புரிந்த பெருமைக்குரியவராக குறுகிய காலத்துள் பெரும்புகழ் ஈட்டிக் கொண்டிருக்கிறார்.

ஒருநாள் கிரிக்கெட் விளையாட்டில் எத்தகைய முறையில் பந்துவீச்சு அமைந்தாலும் மட்டையடி அடித்து நூறு ஓட்டங்கள் சேகரித்துத் தனது வெற்றியை நோக்கி முன்னேறும் கிரிக்கெட் துடுப்பாட்டக்காரர் போல குறுகிய காலத்தில் படைபலம் என்னும் மட்டை கொண்டு மகிந்த கோட்டபாயராசபக்ச குடும்பங்களுக்கு எவர் எவர் எல்லாம் அச்சத்தைக் கொடுத்தார்களோ – கொடுப்பவர்களாக உள்ளார்களோ, அவர்கள் தனக்கும் அச்சத்தைத் தருவார்கள் என்ற எண்ணத்தில், அவர்களை எல்லாம் ஓட ஒட அடித்து விரட்டும் பெரும் அரசியல் ஒருநாள் கிரிக்கெட் விளையாட்டை அவர் அபாரமாக விளையாடிக் கொண்டிருக்கிறார்.

இந்த இவரின் இனக்காணக்கூடிய அச்சத்தை படைபலத்தால் உருவாக்கி மக்களின் அரசியல் பணிவைப் பெறும் பெரும் விளையாட்டின் வெற்றிக்கு அச்சாரமாகக் காலிமுகத்திடல் கடற்கரையில் இதுவரை நான்கு இளையவர்களுடைய உடலங்கள் மிதந்து இவரது ஆட்சியில் இலங்கை எப்படி இருக்கப்போகிறது என்பதற்கு இலங்கை மக்களுக்கு முற்காட்சி வழங்கியிருக்கின்றன. ஒரு மாதத்துள் இருபத்தொரு துப்பாக்கிச் சூட்டு நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன என்ற இலங்கைப் பொலிசாரின் புள்ளிவிபரம் இவரின் அரசியல் கிரிக்கெட் விளையாட்டின் “ஸ்கோர் போட்” எவ்வளவு வேகமாக ஏறிக்கொண்டு போகப் போகிறது என்பதற்கு எதிர்வு கூறியுள்ளது.

1977இல் ஜே ஆரால் அரசியலுக்கு அறிமுகப்படுத்திய காலம் முதல் இன்று வரை ஈழத்தமிழரை படைபலம் கொண்டு இன அழிப்பு கிரிக்கெட் விளையாட்டால் நாட்டைவிட்டே ஓட ஒட விரட்டும் சிறிலங்கா அரச கிரிக்கெட் அணிக்கு தலைசிறந்த கப்டனாக ஆறு முறை இருந்து, சீருடை அணிந்த, முப்படைகளுடன் நிர்வாக நீதித்துறைக் கட்டமைப்புக்களுடன் ஈழமக்களின் நடைமுறை அரசாக 1978 முதல் 2009 வரை இருந்த அரசையே உண்மை அரசாக உலகம் ஏற்கவிடாது, அனைத்துலக நாடுகளின் உதவியால் பின்வாங்கச் செய்த ரணிலுக்கு இந்த சில மாத காலிமுகத்திடல் மக்கள் போராட்டத்தை ஊதித்தள்ளுவது ஒரு வேலையா? என்ற மமதையிலேயே அவர் செயற்படுகிறார். சிறிலங்காவின் படையினருக்கு அதிகாரங்களைப் பெருக்குவதிலும், சர்வகட்சி அரசாங்கம், தேசிய சபை, மக்கள் சபை என்கிற அரசியல் சுலோகங்கள் வழி ஏதோ நடக்கும் என்கிற மயக்கத்தை மக்களுக்கு அளித்து மக்களின் போராட்ட மனநிலையைத் தளர்த்துவதிலும் குறுகிய காலத்திலேயே ரணில் வெற்றிகரமாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார். ஈழத்தமிழர்கள் ஏமாறாமல் இருந்தால் சரி.

இந்த அரசியல் கிரிக்கெட் விளையாட்டில் ஜனாதிபதி என்னும் கப்டனாக ரணில் வந்ததும், முதல் ரசிகராக சீனா அவரைப் பாராட்ட, ரஸ்யா தொடர, விளையாடுவதற்கே பயிற்சி கொடுத்த நாங்கள் பிந்திவிட்டோமே என மேற்குலக நாடுகள் பலவும் நேரடியாகப் பாராட்டின. அமெரிக்கா தனது தூதுவரை இரு முறை ரணிலைச் சந்திக்கச் செய்து ஊக்கமும் ஆக்கமும் அளித்துள்ளது. இதற்கிடை தான் நேரடியாகப் பாராட்டக் கூடியநிலை இல்லாமல் மறைமுகமாகத் தனது இலங்கையில் உள்ள இருப்பைக் குலைக்கும் வேலைகளையே ரணில் தொடங்கியுள்ளார் என்பது தெரிந்தும் விட்டுக் கொடுக்காமல் விழுந்தும் மீசையில் மண்ணொட்டவிடக் கூடாதென்று கடிதம் மூலமாக இந்தியாவும் பாராட்டியுள்ளது. இந்தப் பொருளாதார நெருக்கடிக் காலத்திலும் மக்கள் நலனைப் பேணாமல் உலகநாடுகள் தம் தம் நலனைமையப்படுத்தும் அரசியலையே தொடரப் போகின்றன என்பதை மீள் உறுதி செய்துள்ளது.

இந்தக் கிரிக்கெட் விளையாட்டு ஈழத்தமிழருக்கு எதுவும் தரும் என்பதில் நம்பிக்கையில்லாத கஜேந்திரக்குமார் பொன்னம்பலம், கஜேந்திரன் தவிர்ந்த ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் பலநிலைகளில் பங்கெடுக்க முயற்சிக்கின்றனர். நடுவராக நின்று விளையாட்டு ஒழுங்கமைப்பைச் செய்யமுயன்று இயலாது எனக் கண்ட சுமந்திரன் நீதிமன்ற முறையீடுகளாலும் விளையாட்டைத் தடுக்க இயலாது என்ற நிலையில், காலிமுகத்திடல் போராட்டக்காரர்களை கைதாக்குவதும், தடுத்து வைப்பதும் அதிகரித்தால் மக்கள் போராட்டம் வெடிக்கும் என்று எச்சரித்துக் கொண்டிருக்கிறார். தாத்தா சம்பந்தருக்கோ சில டெமோன்சியக்காரருக்கு இன்றைய நிகழ்வுகள் நினைவுக்கு வராது பழைய நினைவுகள் நினைவுக்கு வருவது போல முன்னர் 1965இல் திருச்செல்வம் டட்லி பேச்சுவார்த்தை என்ற யூ. என்.பி தமிழரசுத் தேனிலவுக் கால நினைவு மீண்டு சர்வகட்சி மாநாட்டுக்குப் பச்சைக்கொடி காட்டினால், டட்லியை அன்று யாழ்ப்பாணத்தில் தேரில் வைத்து இழுத்தது போல இன்று திருகோணமலையில் ரணில் தன்னைத் தேரில் வைத்து இழுத்துச் சிங்கக் கொடியைப் பொன்னாடையாகப் போர்த்துப் பாராட்டுவார்; இதனால் சிங்கக் கொடியை தான் தலைக்குமேல் நேற்று போல் இன்று தூக்கிப் பிடிக்க இயலாது என்ற தன் தள்ளாமை வெளியே தெரியாது என அமைதி அடைந்து கொண்டிருக்கிறார். அவரை நிம்மதியாக நித்திரை கொள்ளவிடாது செல்வம் அடைக்கலநாதன் தமிழ்த்தேசியக் கூட்டணியின் தலைமைத்துவ மாற்றம் இந்தக் கிரிக்கெட் விளையாட்டுக்குள் இந்தியா சரியான ஒரு பந்து வீச்சாளரை அனுப்பி ரணிலை அவுட்டாக்க உதவும் என நம்பி தலைமைத்துவ மாற்றத்தைக் கோருகின்றார். விக்னேஸ்வரன் தமிழ் மக்களுக்கு உதவுவதற்கு வேண்டுமா? வேண்டாமா? என்று சர்வகட்சி அரசின் அமைச்சர் பதவி குறித்து பூவாதலையா விளையாடிக் கொண்டிருக்கிறார்.

இவ்வாறாக இந்தக் கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்டுத் தப்பிப் பிழைக்கும் பொறிமுறைகளால் ஈழத்தமிழ் அரசியல் வாதிகள் ஈழமக்களைக் காப்பாற்ற முயற்சிப்பது நடைமுறைத் தேவையாக இருந்தாலும் ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் தங்களுடைய மக்களின் தாயகம் தேசியம் தன்னாட்சி என்ற விட்டுக் கொடுப்பில்லா கோட்பாட்டில் எந்த நெகிழ்ச்சிக்கும் இடமளிக்கக் கூடாதென்பதும், உலகத் தமிழர்கள் இந்தச் சூழல்களில் மயங்காது தொடர்ந்தும் ஈழமக்களின் நாளாந்தத் தேவைகளைக் கண்டறிந்து உதவும் திட்டங்களை வேகப்படுத்தி, ஈழமக்களைப் பலப்படுத்தி இந்த இக்கட்டான காலத்தை வெற்றிகரமாக அவர்கள் கடக்க உதவ வேண்டுமென்பதும் இலக்கின் இவ்வார எண்ணம்.

ஆசிரியர்

Tamil News

Leave a Reply