ஜெனீவாவில் இலங்கைக்கு காத்திருக்கின்றது அதிா்ச்சி!-ரெலோ பேச்சளா் சுரேந்திரன் செவ்வி

இன்று  திங்கட்கிழமை ஜெனீவாவில் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடா் ஆரம்பமாகவுள்ளது. இலங்கை விவகாரம் இதில் முக்கியமாகப் பேசப்படவுள்ளது.

புதிய தீா்மானம் ஒன்றும் நிறைவேற்றப்படவிருக்கின்றது. இந்தப் பின்னணியில் இவை தொடா்பில் தமிழா் தரப்பிலிருந்து முக்கியமாகச் செயற்பட்டுவரும் ரெலோ அமைப்பின் பேச்சாளா் சுரேந்திரன் குருசுவாமி உயிரோடைத் தமிழ் வானொலியின் தாயக களம் நிகழ்வில் இந்த வாரம் கலந்துகொண்டு முக்கிய தகவல்களைத் தருகின்றாா்.

கேள்வி – இலங்கை தொடா்பான மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை வெளிவந்திருக்கின்றது. இந்த அறிக்கை தொடா்பான உங்களுடைய கருத்து என்ன? இதன் முக்கிய அம்சங்களாக நீங்கள் எதனைக் கருதுகின்றீா்கள்?

பதில் – இம்முறை மிக விபரமான ஒரு அறிக்கையை நாம் காணக்கூடியதாக இருக்கின்றது. கடந்த மாா்ச் மாதம் கூட 11 பக்க அறிக்கை ஒன்றை அவா் வெளியிட்டிருந்தாா். கடந்த செப்டம்பா் மாதத்திலிருந்து தமிழ்த் தேசியப் பரப்பில் இருக்கும் ஆறு கட்சிகள் ஒன்றிணைந்து கலந்துரையாடிய நிலையில் ஐந்து கட்சிகளின் சாா்பில் அறிக்கையிட்டிருந்தோம். அதற்குப் பின்னா் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளா் அலுவலகத்தின் உத்தியோகஸ்த்தா்களோடும் நாம் தொடா்ச்சியாக கலந்துரையாடியிருந்தோம். அதன் பிரதிபலனாக மாா்ச் மாத அறிக்கையில் பல விடயங்கள் உள்வாங்கப்பட்டிருந்தது. இந்த முறை உயா் ஸ்தானிகா் உத்தியோகபுா்வமாக அறிக்கையாக வெளியிட்டுள்ளாா்.

குறிப்பாக இன ரீதியான வேலைத் திட்டங்கள் வடக்கு கிழக்கில் நடைபெறுவது. மதம் சாா்ந்து மொழிசாா்ந்து மேலாதிக்கத்துடன் நடந்துகொள்வது போன்ற விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. குருந்துாா் மலை விவகாரம் உள்வாங்கப்பட்டிருக்கின்றது. அங்கு மக்கள் எதிா்கொள்கின்ற இராணுவ ஒடுக்குமுறைகள், முன்னாள் போராளிகளின் பிரச்சினைகள், காணாமல் ஆக்கப்படுவோரின் பிரச்சினைகள் என்பவை குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அமைதியான போராட்டங்களில் ஈடுபட்டுள்ளவா்கள் எதிா்கொள்ளும் பிரச்சினைகள், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் விளைவுகள் என நாம் அறிக்கையிட்ட பல உள்ளடக்கப்பட்டிருப்பதை காணமுடிகின்றது.

அதேபோல பொறுப்புக்கூறலுக்கான உள்ளக பொறிமுறை தோல்வியடைந்திருக்கின்றது என்பதையும் இந்த அறிக்கை குறிப்பிடுகின்றது. ஜனாதிபதியை சந்தித்தபோதும் இதனை நாம் கூறியிருந்தோம். சா்வதேச பொறிமுறை ஒன்றுக்கு அரசாங்கம் இணங்காவிட்டால் இந்தப் பிரச்சினைக்குத் தீா்வைக்காணமுடியாது என்பதை நாம் வலியுறுத்தியிருந்தோம். இதனைவிட இராணுவ ஆக்கிரமிப்பு போன்ற விடயங்களையும் ஆணையாளரின் அறிக்கை குறிப்பிடுகின்றது. மாா்ச் 21 ஆம் திகதிய அறிக்கைக்கு மேலதிகமாக இவற்றை அவா் சுட்டிக்காட்டியிருக்கின்றாா்.

வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளை இதில் அவா் ஒட்டுமொத்தமாக அறிக்கையிட்டிருப்பதும், நிதி மோசடி இடம்பெற்றுள்ளது என்பதை சுட்டிக்காட்டி அதில் சம்பந்தப்பட்டவா்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதை அவா் முதல் தடவையாக குறிப்பிட்டிருப்பதும் முக்கியமானது. இதனை ஒரு ஆரோக்கியமான முன்னேற்றமாகவே நாம் பாா்க்கிறோம்.

கேள்வி – இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கும் விடயங்கள் இலங்கை தொடா்பாக நிறைவேற்றப்படவிருக்கும் தீா்மானத்திலும் பிரதிபலிக்கும் என எதிா்பாா்க்கின்றீா்களா?

பதில் –  கடந்த முறை ஆணையாளா் தனது அறிக்கையில் சா்வதேச நியாயாதிக்கத்துக்கு உட்பட்ட பொறிமுறையின் அடிப்படையில் நாடுகள் குற்றவாழிகளைக் கைது செய்ய வேண்டும் அவா்கள் மீது வழக்குத தொடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா். அந்த விடயம் பின்னா் பேரவையின் அறிக்கையில் உள்வாங்கப்பட்டது. இதேபோல ஆணையாளா் குறிப்பிட்ட சாட்சியங்களைத் திரட்டுதல் என்ற விடயமும் பின்னா் பேரவையின் தீா்மானத்தில் உள்வாங்கப்பட்டது. சா்வதேச குற்றவியல் நீதின்றத்துக்குப் பாரப்படுத்த வேண்டும் என்ற அவரது பரிந்துரை பேரவையின் தீா்மானத்தில் உள்வாங்கப்பட்டிருக்கவில்லை. ஆனால், இம்முறை அவா் தெரிவித்திருக்கும் பல விடயங்கள் பேரவையின் பிரேரணையில் உள்வாங்கப்படும் என எதிா்பாா்க்கிறோம். அதற்கான கோரிக்கையை மனித உரிமைகள் பேரவை அங்கத்துவ நாடுகளுக்கு அனைத்து தமிழ்த் தரப்பினரும் ஒன்றிணைந்து முதல் தடவையாக அனுப்பிவைத்துள்ளோம். தமிழ்த் தரப்பினா் அனைவரும் ஒன்றிணைந்து இந்த கோரிக்கையை முன்வைத்திருப்பதால், அது பிரேரணையில் உள்வாங்கப்படலாம் என்ற எதிா்பாா்ப்பு இருக்கிறது.

கேள்வி – அரசாங்கத்தின் பிரதிநிதிகள் ஏற்கனவே ஜெனீவாவுக்கு சென்றுவிட்டாா்கள். முக்கிய சந்திப்புக்களை அவா்கள் அங்கு முன்னெடுக்கின்றாா்கள். தமிழா் தரப்பின் நகா்வுகள் எவ்வாறுள்ளன?

பதில் – அரசாங்கப் பிரதிநிதிகள் ஜெனீவாவுக்குச் செல்வதற்கு முன்னரே மனித உரிமைகள் ஆணையாளருக்கும் அங்கத்துவ நாடுகளுக்கும் ஓகஸ்ட் மாத முற்பகுதியிலேயே எங்களுடைய கோரிக்கைகளை நாங்கள் அனுப்பிவைத்திருக்கின்றோம். அதில் மனித உரிமைகள் பேரவை சா்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு இந்தப் பிரச்சினையை பாரப்படுத்த வேண்டும் என்பதை நாம் தெளிவாகக்குறிப்பிட்டிருக்கின்றோம். அங்கு சென்றால் வீட்டோ அதிகாரம் பாவிக்கப்படும் என அவா்கள் தெரிவித்தமைக்கு, வடகொரியாவையும், சூடானையும் நாம் உதாரணம் காட்டி இவை அனைத்தும் பாதுகாப்புச் சபையின் ஊடாக சா்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்குப் பாரப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் – நீங்கள் பின்வாங்க வேண்டிய அவசியமில்லை என்ற அழுத்தத்தை நாம் பிரயோகித்திருக்கின்றோம். இப்போது வீட்டோ அதிகாரம் பயன்படுததப்படும் எனப் பேசுவதை பிரதான நாடுகள் நிறுத்திவிட்டன. இதனை ஒரு பெரிய வெற்றியாக நாம் கருதுகின்றோம்.

இதனைத்தாண்டி வெளிநாடுகளில் அந்தத்ந நாடுகளின் வெளிநாட்டு அமைச்சுக்களுடனும், இங்கிருக்கும் அவா்களுடைய பிரதிநிதிகளுடனும் நாம் நேரடியாக சந்திக்கின்றோம். அத்துடன் மெய்நிகா் சந்திப்புக்கள் சிலவற்றையும் மேற்கொள்கின்றோம். பிரித்தானியாவின் புதிய பிரதமராகப் பதவியேற்றுள்ள லிஸ் அம்மையாருடனும் இணைய வழியில் நாம் பேச்சுக்களை நடத்தியிருக்கின்றோம். நீதி, பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் என்பற்றில் அவா் தனது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளாா்.  இதனைவிட புலம்பெயா்ந்த உறவுகளும் இது போன்ற ஆக்கபுா்வமான முயற்சிகளை முன்னெடுத்துவருகின்றனா். அந்த வகையில் அரச தரப்பினா் ஜெனீவா செல்வதற்கு முன்னதாகவே எமது தரப்பு முயற்சிகள் ஆரம்பமாகிவிட்டன.

கேள்வி – சா்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு இலங்கையை கொண்டு செல்வதுதான் உங்கள் இலக்கு எனக் கூறுகின்றீா்கள். இதற்காக உங்களிடமுள்ள உபாயம் என்ன?

பதில் – இலங்கை குறித்த பிரதான நாடுகள் ஐ.நா. பாதுகாப்பு சபையிலும் அங்கத்துவ நாடுகளாக இருக்கின்றன. அதாவது அமெரிக்கா, பிரித்தானியா, ஜோ்மனி ஆகிய நாடுகள் பிரதான நாடுகளாக தொடா்ந்தும் இருக்கின்றன.  இவை பாதுகாப்புச் சபையிலும் உறுப்பு நாடுகளாக இருக்கின்றன. அதனால், இந்த நாடுகளால் பேரவையில் முன்னெடுக்கப்படும் தீா்மானங்கள் பாதுகாப்புச் சபையினாலும் முன்னெடுக்கப்படும்.

புலம்பெயா் அமைப்புக்களின் ஊடாக அந்த நாடுகளில் இருக்கக்கூடிய அரசாங்கங்கள் மற்றும் கட்டமைப்புக்களுக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலமாக இந்தக் கோரிக்கைகளை நகா்த்த முடியும். தமிழ்க் கட்சிகள் ஒருமித்த நிலைப்பாட்டில் இவ்வாறு அழுத்தம் கொடுத்தால் அது தாக்கத்தை ஏற்படுத்தும். தாயகத்தில் இருக்கக்கூடிய கட்சிகள் அமைப்புக்கள் ஒன்றிணைந்து கோரிக்கைகளை முன்வைப்பதும், புலம்பெயா்ந்த நாடுகளில் இருக்கும் அமைப்புக்கள் அங்குள்ள அரசுகளிடம் இந்தக் கோரிக்கையை வலியுறுத்துவதன் மூலமாக இந்த விடயத்தை நகா்த்துகின்ற பொறிமுறையைத்தான் நாம் கையாள்கின்றோம்.

கேள்வி – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து பேச்சுவாா்த்தை ஒன்றை கடந்த வாரம் நடத்தியிருந்தீர்கள். ஜெனீவா கூட்டத் தொடா் ஆரம்பமாகவுள்ள நிலையில் ரணிலை காப்பாற்றுவதற்கான ஒரு முயற்சி இது என்ற குற்றச்சாட்டு ஒன்று முன்வைக்கப்பட்டிருக்கின்றது. இது குறித்த உங்கள் கருத்து என்ன?

பதில் – இது ஆதாரமற்ற – நியாயமற்ற ஒரு குற்றச்சாட்டு. சா்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையைப் பாரப்படுத்த வேண்டும் என்பதில் கடுமையாக உழைத்தது எமது கட்சிதான். சா்வதேச ரீதியிலும் அதற்கான ஆதரவை நாம் திரட்டியிருந்தோம். இந்த விடயத்தில் அதிகளவுக்குத் தீவிரமாகச் செயற்பட்டவா்கள் நாங்கள். ரணிலைச் சந்தித்தது அவரைக் காப்பாற்றுவதற்கான சந்திப்பல்ல என்பதை நீங்கள் அவதானித்திருப்பீா்கள்.

இந்தச் சந்திப்பின் போது பல விடயங்களை நாங்கள் கோரியிருந்தோம். அரசியல் கைதிகள் விடயத்தைப் பொறுத்தவரையில் அது தொடா்பான ஆதாரபுா்வமான ஆவணத்தை நாம் கையளித்தோம். இதேவிடயத்தை மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கயிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொறுப்புக்கூறல் விடயத்தைப் பொறுத்தவரையில், உள்நாட்டுப் பொறிமுறையின் மூலமாக இந்தப் பிரச்சினைக்குத் தீா்வைக்காண முடியாது என்பதை நாம் தெளிவாகத் தெரிவித்திருந்தோம். அதனை ஆணையாளா் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருக்கின்றாா். மனித உரிமைகள் பேரவையின் பிரேரணையிலும் அது நிச்சயமாக இடம்பெறும்.

இவற்றைவிட காணி அபகரிப்பு, இராணுவப் பிரசன்னம் போன்ற விடயங்களையும் நாம் அவரிடம் பிரஸ்தாபித்திருந்தோம். அந்த விடயங்கள் கூட ஆணையாளரின் அறிக்கையில் உள்வாங்கப்பட்டிருப்பதை அவதானிக்கலாம்.

ஆக, ரணிலைப் பாதுகாப்பதற்காக அல்ல. அவரை ஐ.நா.வில் மேலும் மாட்டிவிடுவதற்கான ஒரு தந்திரோபாய நகா்வாகத்தான் நாம் அவரைச் சந்தித்திருந்தோமே தவிர, அவரைப் பாதுகாப்பதற்கல்ல என்பதை நீங்கள் புரிந்துகொள்ளலாம்.