ஜெனீவா – தற்காப்பு நிலையில் இலங்கை? – அகிலன்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத் தொடர்  திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில், இலங்கை விவகாரம் சூடுபிடித்துள்ளது. இலங்கை அரசாங்கத்தின் சாா்பில் இரண்டு சிரேஷ்ட அமைச்சா்கள் ஜெனீவா விரைந்துள்ளாா்கள். இலங்கை குறித்த கடுமையான பிரேரணை ஒன்று வருவதைத் தடுப்பதற்கான இராஜதந்திர நகா்வுகளை அவா்கள் மேற்கொண்டுள்ளாா்கள்.

மனித உரிமைகள் பேரவை ஆணையாளரின் காட்டமான அறிக்கை வெளியாகியுள்ளது. முதல் தடவையாக பொருளாதாரக் குற்றங்களுக்கு பொறுப்புக் கூறல் என்ற விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை காலை ஆணையாளரின் அறிக்கை உத்தியோகபுா்வமாக வெளியிடப்படும். மாலையில் இலங்கை அதற்குப் பதிலளிக்கப்போகின்றது.

ஆணையாளரின் அறிக்கை காட்டமானதாக இருப்பதால், வரப்போகும் பிரேரணையும் காட்டமானதாக இருக்கும் என எதிா்பாா்க்கப்படுவதால், அதன் கடுமையைக் குறைப்பதற்கான நகா்வுகளை இலங்கை அரசு மேற்கொண்டிருப்பதாகத் தெரிகின்றது. ஆக, இலங்கை அரசு இந்த முறை ஜெனீவாவில் பெருமளவுக்கு ஒரு தற்காப்பு நிலையிலிருந்தே தடுத்தாடுகின்றது.

வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி வெளிநாட்டு பொறிமுறையை அரசு ஒருபோதும் ஏற்காது என்று குறிப்பிட்டுள்ளார். மறுபுறத்தே இதன்காரணமாக சர்வதேச சமூகமும் மனித உரிமை மீறல்கள் குறித்த இலங்கை மீதான குற்றச்சாட்டுகளை இலகுவில் ஒதுக்கிவிடப்போவதில்லை என்பதையும் இலங்கை தெரிந்துகொண்டுதான் உள்ளது. ஆதாரங்களைச் சேகரிப்பதற்கான சா்வதேச பொறிமுறையும் இலங்கைக்கு நெருக்கடியைக் கொடுக்கும் ஒன்றாக அமையப்போகின்றது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இலங்கையில் கடந்த காலங்களில் போர் குற்றச்சாட்டுகள் என்று கருதப்பட்டவை தொடர்பாக நீதி விசாரணைக்கான பொறிமுறை ணன்றை உருவாக்கி நல்லிணக்க செயல்பாடுகளை பலப்படுத்தும் விதத்திலேயே இலங்கை குறித்த தீர்மானங்களை நிறைவேற்றியிருந்தது. 2015 முதல் ஆட்சியிலிருந்த “நல்லாட்சி” எனப்படும் மைத்திரி – ரணில் அரசு அதனை ஏற்றுக்கொண்டிருந்தது. ஆனால், இப்போது அதனை ஏற்றுக்கொள்வதற்கு ரணில் தயாராகவில்லை. காரணம் – உள்நாட்டு அரசியல்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கே சவால்விடும் விதத்தில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, வெளிநாட்டு பொறிமுறையை இலங்கையின் போர் குற்றங்கள் என்று குறிப்பிட்டவை தொடர்பாக ஏற்கப்போவதில்லை என்று கூறியுள்ளார். சர்வதேச சமூகத்துடனும் இலங்கை சவால்விடும் வகையில் கருத்து வெளியிட்டுள்ளதையே காணமுடிகின்றது. உள்நாட்டு அரசியலில் உருவாகக்கூடிய சவால்களை சமாளிக்க அரசு இவ்வாறு செயற்படுகின்றது என்பது புரிந்துகொள்ளக்கூடிய ஒன்றுதான்.

நல்லிணக்கத்துக்கான யோசனைகள் உட்பட போர் குற்றங்கள் என்று கருதப்பட்டவை தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்கும் விதத்திலேயே நீதி விசாரணைக்கான சர்வதேச பொறிமுறை ஒன்றை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை தனது இலங்கை குறித்த தீர்மானங்களில் கொண்டு வந்திருந்தது.

ஆனால், இதுவிடயத்தில் முழுமையாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை தீர்மானங்களை இலங்கை நிறை வேற்றாதிருப்பதோடு போர்க் குற்றங்கள் என்று கருதப்பட்டவை தொடர்பாகவும் சர்வதேச பொறிமுறையோடு கூடிய விசாரணைகளை மேற்கொள்வதில் இலங்கை தாமதங்களுக்கு இடமளித்துள்ளது. இதன் மூலம் இலங்கை சர்வதேச சமூகத்தால் வெகுவாகவே குறைத்து மதிப்பிடப்படும் ஒரு நிலையை உருவாக்கி வருவதோடு நல்லிணக்க செயல்பாடுகளில் போதிய உத்வேகத்தை காட்டாதிருப்பதையும் சர்வதேச சமூகத்துக்கு வெளிப்படுத்தியுள்ளது.

மேற்குலகுக்குச் சாா்பான லிபரல் முகத்தைக் கொண்ட ரணில் விக்கிரமசிங்கவின் அணுகுமுறை இவ்விடயத்தில் வித்தியாசமானதாக இருக்கும் எனக் கருதப்பட்டாலும், உள்நாட்டில் உருவாகக்கூடிய நெருக்கடிகளைத் தாண்டிச் செல்வதற்கு அவா் துணியமாட்டாா். ராஜபக்சக்களின் தயவில் ஜனாதிபதிப் பதவியில் தொடரும் அவா், ஜெனீவாவில் லிபரல் முகத்தைக் காட்டுவதன் மூலமாக ராஜபக்சக்கள் மீண்டும் எழுச்சி பெறுவதற்கு இடமளிக்கத் தயாராகவில்லை. அடுத்த தோ்தலை இலக்கு வைத்து அவா் செயற்படுகின்றாா். அதனால் இவ்விடயத்தில் நிதானமாகவே அவா் செயற்படுவாா் என்பது எதிா்பாா்க்கக்கூடியதுதான். மேற்கு நாடுகளும் இந்த நிலைமையைப் புரிந்துகொண்டேயுள்ளன.  இவ்வாறான ஒரு அணுகுமுறையின் மூலமாக சிங்கள மக்கள் மத்தியில் தமது ஆதரவுத் தளத்தைப் ரணில் பலப்படுத்துவதை மேற்கு நாடுகளும் விரும்பலாம்.

இலங்கையின் ஆட்சியாளர்கள் நாட்டு மக்கள் அனைவராலும்  நம்பத்தகாதவர்களாக இருப்பதையும் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு அவர்களின் தவறான ஊழல், மோசடிகள் நிறைந்த அரச நிர்வாகங்களே முக்கிய காரணங்கள் என்பதுவும் சர்வதேச சமூகம் முன்பாக நிரூபணமாகியுள்ளது. இந்தப் பின்னணியில்தான் பொருளாதாரக்குற்றஞ்களுக்கு பொறுப்புக்கூறல் என்ற விவகாரத்தையும் மனித உரிமைகள் ஆணையாளா் இப்போது கைகளில் எடுத்திருக்கின்றாா்.

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இலஙகையில் போர்க் குற்றங்கள் என்று கருதப்பட்டவை தொடர்பாக சர்வதேச நீதிப் பொறிமுறையொன்றை இலங்கை ஏற்கப்போவதில்லை என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், இத்தகைய நீதிப்பொறிமுறை ஒன்றை இலங்கை ஏற்காத வரை சர்வதேச சமூகம் முன்பாக இலங்கை தனது செல்வாக்கை பெரிதும் இழக்கும் நிலையே உருவாகும் என விமா்சகா்கள் சுட்டிக்காட்டுகின்றாா்கள். இதனால்தான் ஒருவாரம் முன்கூட்டியே ஜெனீவா சென்று தமது நகா்வுகளை இலங்கைக்குழு ஆரம்பித்திருக்கின்றது.

தற்போதைய சர்வதேச நிலவரங்களைப் பொறுத்தவரை சர்வதேச சமூகத்தின் உதவி ஒத்தாசை என்பவற்றைப் பொறுத்தவரை அடிப்படை மனித உரிமைகள் சம்பந்தப்பட்ட விடயங்களும் முன்னிலைப்படுத்தப்பட்டவையாக இருக்கின்றன. சர்வதேச சமூகம் இலங்கையை அனுதாபகண்கொண்டு பார்க்கும் நிலையே காணப்படுகின்றது. இதன் காரணமாகவே இலங்கையின் மனித உரிமைகளை மேம்படுத்தும் விதத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் பல தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. ஆனால், இந்தத் தீர்மானங்களையும் இலங்கை புறக்கணிக்கும் பட்சத்தில் இலங்கை பொருளாதார ரீதியான மேம்பாடுகளையும் எதிர்பார்க்க முடியாமல் போகலாம் என்ற கருத்தும் உள்ளது.

தனது பொருளாதார உறுதிப்பாட்டுக்காக உலக நாடுகளில் வாழ்கின்ற புலம்பெயர்ந்த வடக்கு – கிழக்கு தமிழர்களையும் இலங்கை எதிர்பர்க்கின்ற நிலையும் ஏற்பட்டுள்ளது. புலம்பெயர்ந்த தமிழர்களைப் பொறுத்தவரை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை தீர்மானங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றே அவர்கள் எதிர்பார்ப்பார்கள். இரண்டாவது, அதிகாரப் பரவலாக்கல் மூலமாக மாகாண சபைகளுக்கு நிதி அதிகாரங்கள் வழங்கப்படுவதையும் அவா்கள் எதிா்பாா்க்கின்றாா்கள். அவை நடைபெறாத பட்சத்தில் மத்திய அரசாங்கத்தை நம்பி புலம்பெயா்ந்த மக்கள் முதலீடுகளை மேற்கொள்ள தயாராகவில்லை.

இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையில் நல்லிணக்கம் தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு உரிய முக்கியத்துவத்தை வழங்காதவரை நெருக்கடியை நோக்கியே  இலங்கை செல்லவேண்டியிருக்கும். ஜெனீவாவில் நிறைவேற்றப்படும் தீா்மானம் கடுமையானதாக இருந்தாலும், அதனை நடைமுறைப்படுத்தும் விடயத்தில் ரணிலைப் பாதுகாக்கும் வகையில் மனித உரிமைகள் பேரவை செயற்படும் என நம்புவதற்கே இடமுள்ளது.

ஜெனீவா பிரேரணை சிங்கள மக்கள் மத்தியில் ரணிலின் செல்வாக்கை அதிகப்படுத்தலாம். அதேவேளையில், மனித உரிமைகள் பேரவை நம்பகத்தன்மையுடன் செயற்பட்டுள்ளது எனத் தமிழ் மக்களுக்கும் சா்வதேச சமூகத்துக்கும் காட்டிக்கொள்ள முடியும். தமிழ் மக்களுடைய பிரச்சினைகள், நீதிக்கான கோரிக்கைகளுக்கு நியாயமான பதில் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கப்போகின்றது!