மயிலத்தமடு – மாதவனை பிரச்சினைக்கு தீர்வுக் கோரி மீண்டும் நீதிமன்றத்தை நாடிய சாணக்கியன்!

மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரைப் பிரச்சினை தொடர்பான வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கோரி இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் புதிய சட்ட நடவடிக்கையை முன்னெடுத்துள்ளார்.

மேய்ச்சல் தரைகளிலிருந்து சட்டவிரோத ஆக்கிரமிப்பாளர்களை அகற்றுவதாக முன்னர் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் உரிய முறையில் நிறைவேற்றப்படவில்லை என்றும், ஆக்கிரமிப்புகள், மேய்ச்சல் நிலங்கள் அழிக்கப்படுதல் மற்றும் கால்நடை வளர்ப்பாளர்களின் வாழ்வாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்வதாகவும் தெரிவித்து இந்த விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் நீதிமன்றத்தின் வழிகாட்டல்களுக்கு அமைய அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் இது குறித்து சம்பந்தப்பட்ட பிரதிவாதிகளுக்கு அறிவித்தல்கள் அனுப்பப்படவுள்ளன. முன்னைய மேன்முறையீட்டு நீதிமன்ற வழக்கில் இராசமாணிக்கம் சாணக்கியன் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், மீண்டும் முன்னிலையாகி அவரைப் பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர், ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர், கிழக்கு மாகாண ஆளுநர், இலங்கை மகாவலி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம், மட்டக்களப்பு மாவட்ட வன அலுவலர், கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளர், மாவட்ட நிர்வாகம், காணி முகாமைத்துவம், வனப் பாதுகாப்பு, மாகாண நிர்வாகம் மற்றும் கால்நடைத் துறை உள்ளிட்ட பொறுப்புகளைக் கொண்ட நிறுவனங்களைச் சேர்ந்த அதிகாரிகள் இந்த மனுவில் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்

பாரம்பரிய மேய்ச்சல் நிலங்களில் இடம்பெறும் சட்டவிரோத ஆக்கிரமிப்புகளைத் தடுத்து நிறுத்துதல், சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் மற்றும் பாதிக்கப்பட்ட கால்நடை வளர்ப்பாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துதல் ஆகியவற்றில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உள்ள பொறுப்புகள் தொடர்பிலும் இந்த வழக்கு கவனம் செலுத்துகிறது.

நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் எந்த அளவுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன, நிர்வாகத் தலையீடுகள் எவ்வளவு பயனுள்ளதாக அமைந்துள்ளன, பாரம்பரிய வாழ்வாதாரங்களைப் பாதுகாப்பதில் அரச நிறுவனங்கள் தமது பொறுப்புகளை முறையாக நிறைவேற்றுகின்றனவா போன்ற கேள்விகளை இந்தப் புதிய சட்ட நடவடிக்கை எழுப்பியுள்ளது.

தமது பாரம்பரிய வாழ்வாதாரத்திற்கு ஆதாரமாக விளங்கும் நிலங்களைப் பாதுகாப்பதற்காகக் கால்நடை வளர்ப்பாளர்கள் மீண்டும் மீண்டும் போராடவேண்டியோ, அரசியல் தலையீட்டைக் கோரவேண்டியோ அல்லது நீதிமன்றத்தை நாடவேண்டியோ இருக்கக்கூடாது என்பதே சாணக்கியனின் நிலைப்பாடாகும்.