அரசு மக்களுக்கு வழங்கிய எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை – சாணக்கியன்

IMG 9936 அரசு மக்களுக்கு வழங்கிய எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை - சாணக்கியன்

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றாத இந்த அரசாங்கம் தோல்வியடைந்த அரசாங்கமாகவே பார்க்கவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

அரசுடன் இணைந்திருப்பவர்கள் வெறுமனே  பாதைகளை புனரமைப்பது அபிவிருத்தி அல்ல மக்களின் வாழ்வாதாரத்தினை பலப்படுத்துவதுடன் உண்மையான அபிவித்தி எனவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கூழாவடி பகுதியில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை தொடர்பில் கண்டறியும் வகையில் அப்பகுதிக்குச் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் சென்றிருந்தார்.

இந்நிலையில், அப்பகுதியில் தினமும் யானைகளினால் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து மக்கள் கவலை தெரிவித்தனர். அத்துடன் குறித்த பகுதியில் திலீபன் ஞாபகார்த்த வைத்தியசாலை கிராமிய வைத்தியசாலையாக பயன்படுத்தப்படுகின்றபோதிலும் அதனை தினமும் பயன்படுத்தக்கூடியவாறு ஏற்பாடுசெய்துதருமாறும் மாணவர்களுக்காக பாடசாலை வசதிகளை ஏற்படுத்தி தருமாறு  மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், கருத்து தெரிவித்த சாணக்கியன்,

“விசேடமாக இந்த அரசாங்கமானது தெரிவுசெய்யப்பட்ட காலப்பகுதியில் ஒரு இலட்சம் கிலோமீற்றர் யானை வேலியை போடுவதாகவும் மனிதர்களுக்கும் யானைகளுக்கும் இடையிலான மோதல் இல்லாமல்செய்யப்படும் எனவும் வாக்குறுதிகளை வழங்கியிருந்தது.

ஆனால் ஆட்சிக்கு வந்த பின்னர் கிழக்கு மாகாண ஆளுனர்,கிழக்கினை மீட்போர் என்போர் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் காட்டுப்பகுதியை தூய்மைப்படுத்தி பெரும்பான்மையினத்தவர்களை குடியேற்றமுற்பட்டதனால் இன்று மக்கள் குடியிருப்புகளை நோக்கி யானைகள் படையெடுக்கும் நிலையேற்பட்டுள்ளது.

இதற்கு அரசாங்கத்துடன் இருப்பவர்கள் வெட்கப்படவேண்டும்.ஒன்றரை வருடத்தில் ஐந்து மீற்றர் யானைவேலிகூட போடவில்லை. மக்களுக்கு வழங்கிய வாக்குறுதி எதனையும் பூர்த்திசெய்யாமல் இந்த அரசாங்கம் ஒரு தோல்வி அடைந்த அரசாங்கமாகவே பார்க்கப்படவேண்டும்.
அரசுடன் இணைந்திருப்பவர்கள் வெறுமனே   பாதைகளை புனரமைப்பது அபிவிருத்தி அல்ல மக்களின் வாழ்வாதாரத்தினை பலப்படுத்துவதுடன் உண்மையான அபிவிருத்தி.

நாங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற வகையில் நாங்கள் எதிர்க்கட்சியிலிருந்தாலும் கூட மக்களுடன் இருந்து மக்களின் பிரச்சினைகளுக்கா தொடர்ந்து குரல்கொடுப்போம்” என்றார்.