அமெரிக்கா நாடுகடத்திய இலங்கையர் உட்பட பலர் பனாமாவில் தடுத்துவைப்பு

அமெரிக்காவினால் பனாமாவிற்கு நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட குடியேற்றவாசிகள் அங்கு  தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வேறு நாட்டிற்கு நாடு கடத்தப்படலாம் என பனாமா தகவல்கள் தெரிவித்துள்ளன.

பனாமா கோஸ்டரிகா குவாத்தமாலா ஆகிய நாடுகள் அமெரிக்கா நாடு கடத்தும் ஏனைய நாட்டவர்களை ஏற்பதற்கும் அவர்கள் நாடு கடத்தப்படும் வரை தங்கள் நாட்டில் வைத்திருப்பதற்கும்  இணங்கியுள்ளன.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பனாமா கால்வாயை கைப்பற்றப்போவதாக எச்சரித்த சூழ்நிலையில் சமீபத்தில் அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் இந்த நாடுகளிற்கு விஜயம் மேற்கொண்ட நிலையில் அமெரிக்க நாடுகள் இதற்கு இணங்கியுள்ளன.

கடந்த பல நாட்களாக 300 குடியேற்றவாசிகள் அனேகமாக ஆசியாவை சேர்ந்தவர்கள் பனாமாவின் தலைநகரில் உள்ள  விடுதி ஒன்றில்  தங்கவைக்கப்பட்டிருந்தனர்.

இதுவரை 97 பேரை டாரியன் மாகாணத்தில் உள்ள சான் வின்சென்டே நிலையத்திற்கு மாற்றியுள்ளதாக  பனாமாவின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அமெரிக்கா இதுவரை நாடுகடத்தியுள்ள 199 குடியேற்றவாசிகளில் 175 பேர் சுயவிருப்புடன் தங்கள் நாடுகளிற்கு திரும்புவதற்கு இணங்கியுள்ளனர்.இவர்கள் இன்னமும் பனாமாவின் தலைநகரில் உள்ள  விடுதியில் உள்ளனர்.

இதுவரை 41 பேர் விமானபயணச்சீட்டுகளை வாங்கியுள்ளனர் இவர்களில் 17 பேர் இந்தியர்கள் என பனாமாவின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

குடியேற்றவாசிகளை அவர்களின் விருப்பத்திற்கு மாறாக தடுத்துவைத்திருக்கவில்லை என பனாமா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை நாங்கள் இந்த நாட்டில் பாதுகாப்பாக இல்லை என கையால் எழுதப்பட்ட அட்டையை தாங்கியவாறு சிலர் ஜன்னல்களில் காணப்படும் படங்கள் வெளியாகியுள்ளன.