உணவு பாதுகாப்பின்மை குறித்து அறிந்து கொள்வதற்காக உலக உணவு திட்டத்தின் மூத்த அதிகாரி இலங்கைக்கு பயணம்

இலங்கை தொடர்ந்தும் அதிகளவான உணவுபாதுகாப் பின்மையை எதிர்கொண்டுள்ளது என  உலக உணவு திட்டம் தெரிவித்துள்ளது.

உலக உணவு திட்டத்தின் இலங்கைக்கான பதில் இயக்குநர் ஜெராட் ரெபெலோ  இதனை தெரிவித்துள்ளார்.

உலக உணவு திட்டத்தின் மனிதாபிமான உதவிகளிற்கான பணியகத்தின் ஆசிய இலத்தீன் அமெரிக்கா ஆகிய நாடுகளிற்கான இயக்குநர் ஸ்டீபனி வில்கொக்கின் விஜயம் குறித்து  வெளியிட்டுள்ள அறிக்கையில்  ஜெராட் ரெபெலோ இதனை தெரிவித்தார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை தொடர்ந்தும் மிகவும் அதிகளவான உணவுபாதுகாப் பின்மையை எதிர்கொள்கின்றது என தெரிவித்துள்ள அவர் 30 வீதமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் குறிப்பாக வறிய மக்கள் மத்தியிலேயே இந்த பாதிப்பு அதிகமாக காணப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அரசாங்கமும் மக்களும் வழங்கி வரும் உதவிகள் குறித்து பெரும் நன்றியுடையவர்களாக காணப்படுவதாக தெரிவித்துள்ள அவர் இந்த உதவிகள் உலக உணவு திட்டம் அவசர உதவிகளை வழங்குவதற்கு உதவியாக அமைந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் உதவிகள் உலக உணவுதிட்டம் மனிதாபிமான உதவிகளை வழங்கவும் உணவுபாதுகாப்பின்மை மோசமான நிலையை அடைவதை தவிர்ப்பதற்கும் உதவும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.