தழும்புகள்-துரைசாமி நடராஜா

பெருந்தோட்டத் தொழிற்றுறையில் நிலவும் பல்வேறு சீர்கேடுகள் அம்மக்களின் இயல்பு வாழ்க்கையை பெரிதும் பாதித்துள்ளதோடு அம்மக்களின் அபிவிருத்திக்கும் இடையூறாக இருந்து வருகின்றது என்பது தெரிந்த விடயமாகும்.

இதிலிருந்தும் இவர்களை மேலெழும்பச் செய்வதில் அரசாங்கத்தின் வகிபாகம் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் இருந்து வருகின்றன. அத்தோடு மலையக மக்கள் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் புறக்கணிக்கப்படுகின்றார்களா? இனவாத நோக்கில் அவர்கள் மீதான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றனவா? என்றெல்லாம் பலரும் பல்வேறு கோணங்களில் தனது விசனம் பார்வையை செலுத்தி வருகின்றனர்.

உலகளாவிய ரீதியில் பல சமூகங்களும் இன்று தேசிய நீரோட்டத்தில் இணைந்து கொள்வதற்கு முண்டியடித்துக் கொண்டு ஆக்கப்பூர்வமான செயற்பாடுகளை விரிவுபடுத்தி வருகின்றன.உலகமயமாக்கல் (globalization) நிலைமைகளை எவ்வாறு வெற்றி கொள்வது? அதற்கேற்ப எவ்வாறு தயார் செய்து கொண்டு  ஈடுகொடுப்பது? என்றெல்லாம் சமூகங்களின் சிந்தனைகள் பரந்து விரிந்து காணப்படுகின்றன.

இவ்வாறாக மேலெழும்புவதற்கான கருத்துப் பகிர்வுகளில் கற்றறிவாளர்களின் வகிபாகம் அதிகமாகவுள்ள நிலையில் ஆட்சியாளர்களும் இதற்கென தம்மாலான உச்ச கட்ட பங்களிப்பினை வழங்கி வருகின்றனர்.இந்த வகையில் பெருந்தோட்ட சமூகமும் சகல துறைகளிலும் முன்னேறிச் சென்று அபிவிருத்தி இலக்கினை அடைந்து கொள்ள வேண்டிய ஒரு தேவை காணப்படுகின்றது.எனினும் பல்துறைசார் புறக்கணிப்பு, ஆட்சியாளர்களின் ஓரங்கட்டல்கள் என்பன இதற்கு குந்தகமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிலை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனும் அண்மையில் தனது நிலைப்பாட்டினை கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதி, சிரேஷ்ட மனித உரிமை ஆலோசகர் ஜுஹன் பெர்னாண்டஸின் கவனத்துக்கு கொண்டு வந்திருந்தார்.

பெருந்தோட்ட மக்கள் நவீன கூலி அடிமைத் தொழிலாளர்களாகவும் தமிழ் சிறுபான்மை இனத்தவராகவும் இலங்கையில் ஒடுக்கப்படுகின்றார்கள்.இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டிய மனோ கணேசன்,ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் விசேட அறிக்கையாளர் டோமோயா ஒபோகாடாவின் அறிக்கையின் முக்கியத்துவம் குறித்தும் கருத்து தெரிவித்திருந்தார்.

மனிதர் வாழத் தகைமையற்ற வாழ்விடங்கள், சுகாதார சீர்கேடுகள், போஷாக்கின்மை,  வறுமை, பெண்கள் மீதான அதீத சுமை, சிறுவர் தொழிலாளர்கள்,வேலைத்தளத்தில் ஏற்படும் விபத்துக்களுக்கு முறையாக நட்ட ஈடு வழங்கப்படாமை , கல்வி வாய்ப்பின்மை,மொழி ரீதியான பிரச்சினைகள் மற்றும் சுரண்டல்கள் உள்ளிட்ட பல விடயங்களும் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளன.

உண்மையில் மலையக மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வு இழுத்தடிக்கப்பட்டு வரும் நிலையில் ஆட்சியாளர்களின் பாராமுகம் இதில் முக்கியமானதாக கருதப்படுகின்றதுஆட்சியாளர்களின் நடவடிக்கைகளைப் பார்க்கையில்.” இலங்கையர்” என்ற பொது வரையறைக்குள் பெருந்தோட்ட மக்கள் உள்ளீர்க்கப்பட்டுள்ளார்களா? என்ற சந்தேகம் மேலெழும்பும் நிலையில் அண்மையில் ஜனாதிபதியின் கருத்து இச்சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துவதாகவுள்ளது.

மலையகத் தமிழ் மக்களை இலங்கை சமூகத்துடன் மேலும் எவ்வாறு இணைப்பது என்பது தொடர்பில் ஆராய குழுவொன்று நியமிக்கப்படும் என்ற ஜனாதிபதியின் கருத்து  மலையக மக்கள் பூரணமாக இன்னும் இலங்கை சமூகத்துடன் கை கோர்கவில்லை என்பதையே  எடுத்துக் காட்டுகின்றது.

மலையக மக்கள் நீண்ட காலமாகவே இனரீதியாக ஒடுக்கப்பட்ட அல்லது புறந்தள்ளப்பட்ட வரலாறுகள் அதிகமுள்ளன.இலங்கையின் வரலாறு இதற்கு சான்று பகர்வதாக அமையும்.டொனமூர் ஆணைக்குழுவினர் இந்திய வம்சாவளியினருக்கு வாக்குரிமை வழங்க சிபாரிசு செய்ததைக் கண்டித்து பேரினவாதிகள் போர்க்கொடி உயர்த்தி இருந்தனர்.

சட்ட நிர்வாக சபையில் சிங்களவரின் பிரதிநிதி ஒருவரைத்தவிர ஏனைய அங்கத்தவர்கள் அனைவரும் இந்தியருடைய வாக்குரிமையால் அரசியல் ரீதியாக செயலற்றுப் போய்விடுவோம் என்று வெளிப்படையாகவே கூறியிருந்ததாக அறிய முடிகின்றது.டொனமூர் ஆணைக்குழுவினருடைய சிபாரிசில் அபாய அறிவித்தலாக அமைந்தது இந்தியத் தொழிலாளருக்கு வாக்குரிமையளிக்கும் பிரேரணை என்று டீ.எஸ்.சேனநாயக்காவும் தனது எதிர்ப்பினை வெளிப்படுத்தினார்.இந்தியரின் வாக்குரிமையை எதிர்க்காதவர்கள் துரோகிகள் என்று சி.டபிள்யூ.டபிள்யூ.கன்னங்கரா தெரிவித்திருந்தார்.

 -அடக்கு முறைகள்-

இந்நிலையில் பெருந்தோட்ட மக்கள் கல்வியறிவு பெற்றுவிடக் கூடாது என்பதிலும் பேரினவாதிகள் குறியாக இருந்தனர்..”இலங்கை அரசின் கொள்கைகள் பால், வகுப்பு, இனம் என்பவற்றின் அடிப்படையில் பாரபட்சம் காட்டவில்லை.ஆனால் இதற்கு ஒரேயொரு புறநடை உண்டு.அதாவது தென்னிந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்டு பெருந்தோட்டங்களில் வேலைக்கமர்த்தப்பட்ட தொழிலாளர்களின் கல்வி காலனித்துவவாதிகளின் தேவைகளுக்கு அடிபணிந்திருந்தது.சுதந்திரத்துக்குப் பின்னரான சமூக அபிவிருத்திக் கொள்கைகளும் கூட அவர்களை கவனத்தில் கொள்ளவில்லை ” என்று பேராசிரியர் சுவர்ணா ஜயவீர (1983) கூறுவதிலிருந்து இதனை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள முடிகின்றது.

“தமது சொந்தநாட்டிலேயே  ல் மிகவும் இழிவான நிலையில் பிறந்து வளர்ந்த தமிழ்க்கூலிக்கு எதனையும் விளங்கிக் கொளா்ளக்கூடியஉள ஆற்றல் இல்லை… கொஞ்சம் கூடக்குறைய கல்வியை இவர்களுக்கு வழங்கிவிட்டால் அது இவர்களை தோட்டத் தொழிலுக்கு மட்டுமல்ல வேறு எதற்குமே லாயக்கற்றவர்களாக்கிவிடும்.

கல்வி என்பது அவர்களுக்கு பரிச்சயமில்லாத ஆடம்பரப்பொருள்” என்ற சிந்தனைகளே மலையகக் கல்வி குறித்து வேரூன்றி காணப்பட்டன.இவையெல்லாம் மலையக மக்களை மேலெழும்பவிடாது முன்னெடுக்கப்பட்ட அடக்குமுறையின் வடிவங்கள் என்பதைத்தவிர வேறில்லை. இதேவேளை இரு நூற்றாண்டு காலமாக தொடர்ச்சியாக சுரண்டலுக்கும் ஒடுக்குமுறைக்கும் உட்படுத்தப்பட்டு வருகின்ற ஒரு மக்கள் கூட்டத்தின் கல்வி முறைமையும் அத்தகைய ஒடுக்கு முறையின் அடையாளங்களையும் காலனித்துவ மிச்ச சொச்சங்களையும் கொண்டிருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை என்று புத்திஜீவிகள் சுட்டிக்காட்டியுள்ளமையும் நோக்கத்தக்கதாகும்.

இலவசக் கல்வியின் தந்தையாக இலங்கையில் போற்றப்படுகின்ற சி.டபிள்யூ.டபிள்யூ.கன்னங்கராவும் பெருந்தோட்ட மக்களின் கல்வி குறித்து மாற்றாந்தாய் மனப்பான்மையுடனேயே செயற்பட்டார் என்பதில் இருவேறு கருத்துக்களுக்கு இடமில்லை.

1948 இல் இந்திய வம்சாவளி மக்களின் வாக்குரிமை மற்றும் பிரசாவுரிமை பறிப்பும் இனவாத வெளிப்பாடுகளின் ஒரு அங்கமேயாகும். .இம்மக்களை சகல துறைகளிலும் வேரறுக்கும் நடவடிக்கையாக அது அமைந்த நிலையில் அதன் தழும்புகளில் இருந்தும் இன்னும் இம்மக்கள் மீண்டெழவில்லை என்பதும் உண்மையாகும்.பெருந்தோட்ட மக்கள் தேயிலையின் செழுமைக்காக உழைத்து களைத்தபோதும் ஒளிமயமான வாழ்க்கையினை அவர்களால் பெற்றுக் கொள்ள முடியவில்லை.உழைப்புக்கேற்ற ஊதியம் என்பது தொடர்ச்சியாகவே அவர்களுக்கு மறுக்கப்பட்டு வந்திருக்கின்றது.

1944 க்கு முன்னர் பெருந்தோட்ட நாளாந்த வேதனங்கள் பின்வருமாறு அமைந்திருந்தன.இதனடிப்படையில் ஆண்களுக்கு 41 சதமும், பெண்களுக்கு 37 சதமும், சிறுவர்களுக்கு 25 சதமும் கூலியாக வழங்கப்பட்டது.1954 இல் ஆண்களுக்கு 2.43, பெண்களுக்கு 1.93, சிறுவர்களுக்கு1.63 என்றவாறும், 1977 இல் ஆண்களுக்கு 4.56, பெண்களுக்கு 3.70, சிறுவர்களுக்கு 3.23 என்றவாறும் வேதன நிலைமைகள் அமைந்திருந்தன.1984 இல் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட 44 வீதமான சம்பள அதிகரிப்பு முக்கியமானதாகக் கருதப்படுகின்றது.

இந்நிலையில் சமகாலத்தில் தொழிலாளர்கள் 1000 ரூபாய் சம்பளத்தை பெற்றுக் கொள்வதில் பல்வேறு இழுபறிகளையும் எதிர்கொண்டு வருகின்றனர்.சம்பள வழங்கலில் ஒரு அடக்குமுறையான போக்கு இடம்பெற்று வருவதையே அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

ஒரு சமூகம் பல்வேறு துறைகளிலும் வெற்றி நடை போடுவதற்கு பொருளாதார பலம் மிகவும் இன்றியமையாதாகக் கருதப்படுகின்றது. பொருளாதாரத்தில் மேலெழும்பிய சமூகங்களின் தேசிய நீரோட்ட நகர்வுகளும் துரிதப்படுத்தப்படும் என்பதனை மறுப்பதற்கில்லை.எனினும் மலையக சமூகத்தைப் பொறுத்தவரையில் பொருளாதார அபிவிருத்தி என்பது எட்டாக்கனியாகவே இருந்து வருகின்றது. இத்தகைய நிலைமைகள் அச்சமூகத்தின் வீழ்ச்சிக்கே அடித்தளமாகின்றன.

இதேவேளை பெருந்தோட்ட நிறுவனங்கள் தொழிலாளர்களின் மீது கட்டவிழ்த்து விட்டுள்ள அடக்குமுறைகள் தொழிலாளர்களினதும் தோட்டங்களினதும் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி வருகின்றது.புதுப்புது வடிவங்களில் அரங்கேறும் இந்த அடக்குமுறைகள் தொழிலாளர்களின் ஆணிவேரை அசைத்து வருகின்றன.இந்நிலையில் பெருந்தோட்ட நிறுவனங்களால் மக்களுக்கும் நன்மையில்லை.

அரசாங்கத்துக்கும் நன்மையில்லை.இந்நிலையில் ஊழியர்களுக்கு நியாயமாக நடந்து கொள்ளாததால் மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனத்துக்கு எதிராக தாம் ஆரம்பித்த தொழிற்சங்கப் போராட்டத்தை எதிர்காலத்தில் ஏனைய பெருந்தோட்ட கம்பனிகளுக்கு எதிராகவும் மேற்கொள்ளவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் அண்மையில் தெரிவித்திருந்தமையும் இங்கு நினைவுகூறத்தக்கதாகும்.

அபிவிருத்தி என்னும் போர்வையிலான காணிச் சுவீகரிப்பு, திட்டமிட்ட குடியேற்றங்கள் எனப்பலவும் மலையக மக்களின் இருப்புக்கு வேட்டுவைத்து வருகின்றன.இதனால் அரசியல் பிரதிநிதித்துவ மழுங்கடிப்பு  ஏற்படக்கூடிய அபாயமுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.

மலையக சமூகத்தின் பின்னடைவுக்கு இனவாதம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் வலுசேர்த்துவரும் நிலையில் இவற்றைக் களைந்து இம்மக்களின் மேலான வாழ்வுக்கு ஒத்துழைக்க சகலரும் குரல் கொடுக்க வேண்டும்.

அரசியல் கட்சி பேதங்கள் இதற்கு ஒருபோதும் தடையாக இருக்கக் கூடாது.இதேவேளை ஆட்சியாளர்கள் ” இலங்கையர்” என்ற பொதுவரையறைக்குள் மலையக மக்களையும் உள்ளீர்த்து சேவையாற்றுபவர்களாக விளங்க வேண்டும்.இதைவிடுத்து இனம், மதம்,மொழி என்பன செயற்பாடுகளில் செல்வாக்கு செலுத்துமானால் விளைவுகள் விபரீதமாகலாம் என்பதையும் மறுப்பதற்கில்லை.