அம்பாறை மாவட்டத்தில் தமிழர்கள் ஒருமித்து வாக்களிக்காவிட்டால் அரசியல் அநாதைகளாக்கப்படுவர்- இரா.சயனொளிபவன்

தமிழர்கள் ஒருமித்து இம்முறை தேர்தலில் வாக்களிக்காவிட்டால்,இருப்புக்களை இழந்து அயல் சமூகத்தவரிடம் கையேந்தும் அரசியல் அநாதைகளாக்கப்படுவரென, தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட வேட்பாளரும் ஊடகவியலாளருமான டாக்டர் இரா. சயனொளிபவன் கருத்து தெரிவித்தார்.

அம்பாறை மாவட்ட சமகால தேர்தல் களம்  தொடர்பில் கருத்து  வெளியிட்ட அவர் மேலும் தெரிவித்ததாவது:

இம்முறை பாராளுமன்ற தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில், ஏழு பேரைத் தெரிவு செய்ய 510வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.அம்பாறை மாவட்டத்தில் அண்ணளவாக ஜந்து இலட்சத்தி பத்தாயிரம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.இதில் 2,40,000முஸ்லிம்களும்1,80,000சிங்களவர்களும் 94,000தமிழர்களும் வாக்களிக்கவுள்ளனர்.

கடந்த காலத்தில் சிங்களவர்கள் 85வீதமும் முஸ்லிம்கள் 75வீதமும் தமிழர்கள் 60வீதமும் வாக்களித்தனர்.இந்நிலையில் இம்முறை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசிய கட்சி என ஆறு ஆசனங்களைப் பெற்றுக் கொண்டால் எஞ்சியுள்ள ஒரு ஆசனம் யாருக்கு என்பதே கேள்வியாகவுள்ளது. இந்த ஆசனத்தைப் பெறுவதற்கே தமிழர்கள் ஐக்கியப்பட வேண்டியுள்ளது. நாம் எமக்குள் வாக்கிற்காகவும் தனிப்பட்ட நன்மைகளுக்காவும் பிரிந்து நிற்பதால் எந்த சாத்தியமான விளைவுகளும் அடையப் போவதில்லை.

நிச்சயமாக இது தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடையே உருவாகியுள்ள பிரதிநித்துவப் போட்டியாகவே இதனை நாம்  பார்க்க வேண்டும்.

முஸ்லிம் கட்சிகள் பிரிந்து போட்டியிடுவதை  சாதகமான விடயமாகவே நாம் உற்று நோக்க வேண்டும்.இதனை  சாதகமாகப் பயன்படுத்தும் பகுத்தறிவே தற்போதைய சூழ்நிலையில் தமிழர்களுக்கு கால கட்டாயமாகியுள்ளது.

தமிழரின் வாக்குகளைப் பெறுவதற்காக பல்வேறு பட்ட கட்சிகளும் அதனுடைய வேட்பாளர்களும் களமிறங்கப்பட்டுள்ளனர்.  இக்கட்சிகளிடையே தமிழ் தேசிய கூட்டமைப் புத்தான்  பலம் வாய்ந்த கட்சியாக உள்ளது. குறிப்பாக இத் தேர்தலில் இளைஞர்கள் பலர் கூட்டமைப்பில் களம் இறங்கி உள்ளமை கட்சியின் பலத்தை மேலும் அதிகரித்துள்ளது.

அனைத்திற்கும் அப்பால் இனம் மீதான பற்றில் இருப்புக்களைப் காப்பாற்ற வேண்டிய கடப்பாடுகளுக்குள் தமிழர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.எனவே தமிழ் தேசிய கூட்டமைப்பை பலப்படுத்துவதுதான் உள்ள வழியாகும்.இதனூடாகவே தமிழர் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.