யுத்தத்தின்போது இடம்பெற்ற இரகசிய செயற்பாட்டை வெளியிட்ட சரத் பொன்சேகா!

உள்நாட்டு யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் புலனாய்வு அமைப்பினருக்கு இடையே இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் காணொளி முன்னாள் இராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகவினால் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த விடயம் தெற்கு அரசியலில் முக்கிய பேசு பொருளாகவும் மாறியுள்ளது. கொழும்பில் நேற்று (18) ஊடக சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்து இந்த காணொளியை வெளியிட்ட அவர், அப்போது ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்ச மற்றும் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச போன்றோர் மீது முக்கிய குற்றச்சாட்டுகளையும் முன்வைத்துள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின்போது மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச மற்றும் வசந்த கரன்னாகொட உள்ளிட்டோர் 2008ஆம் ஆண்டு வரை இராணுவ நடவடிக்கைகளை சீர்குலைக்க முயன்றதாக சரத் பொன்சேகா குற்றம் சுமத்தியுள்ளார்.

ஜனவரி 2008இல் இடம்பெற்ற, பாதுகாப்பு கூட்டத்தில், ராஜபக்சக்கள் தனது சொந்த போர்க்கள உத்திக்கு முரணான ஒரு திட்டத்தை முன்வைத்ததாக பொன்சேகா கூறியுள்ளார். இதன்படி சரத் பொன்சேகா வெளியிட்ட காணொளியில் பாதுகாப்புச் செயலாளரிடமிருந்து சவேந்திர சில்வாவுக்கு வந்த அழைப்பு மற்றும் அதன் போது இடம்பெற்ற கருத்து பரிமாற்றங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

இராணுவ தளபதியாக இருந்த தமக்கு அறிவிக்கப்படாமல் மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச உள்ளிட்டோர் பல திட்டங்களை தீட்டியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பசில் ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் விடுதலைப்புலிகள் அமைப்பில் உள்ள பிரிவுகளின் தலைவர்கள் உள்ளிட்டவர்களை சரணடைய வாய்ப்பு வழங்குவது குறித்து விவாதித்துள்ளனர் என்றும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

அத்துடன் “வெள்ளைக் கொடி” சரணடைவு சம்பவம் குறித்த பிரபலமான கதைப்போக்கை சில ஊடகத்தினர்கள் உருவாக்கினர்.  அவர்களே சரணடைய வந்த விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டனர் என்றும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.