04. ‘நாட்டில் மக்களை வாழ வைக்க முடியாத அரசாங்கமே காணப்படுகின்றது’ என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அவிசாவளையில் இன்று (09) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ‘மலிவு விலையில் தேங்காய், அரிசி மற்றும் உப்பு வாங்க முடியாத நிலை நாட்டில் ஏற்பட்டுள்ளது’. ‘அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்க முடியாத அரசு எவ்வாறு மக்களை வாழ வைக்கப்போகிறது என்ற விடயத்தில் பிரச்சினை காணப்படுகிறது’.
‘தற்போது ஆட்சியில் இருப்பவர்கள் எதிர்க்கட்சியில் இருந்தபோது நெல்லுக்கு 150 ரூபா உத்தரவாத விலையைத் தருவதாக கூறினர்’. ‘ஆனால் அவர்கள் வயல்வெளிகளுக்குச் சென்று விவசாயியை சந்திப்பதற்கே பயப்படுகின்றனர்’ என்று எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
‘இவ்வாறான பொய்களை சொல்லி மக்களை ஏமாற்றும் செயல்களில் ஈடுபட்டு, ஆட்சிக்கு வந்த பின்னர் விவசாயிகளை கைவிட்டுள்ளனர்’.’அரச உத்தியோகத்தர்கள் விருப்பத்தின் பேரில் இடமாற்றம் செய்யப்பட்டு அவர்களுக்கு ஆதரவானவர்கள் மாத்திரம் பாதுகாக்கப்பட்டு வருகின்றனர்’.
‘இந்நாட்டு மக்களை நிர்க்கதியாக்கும் அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிராக முன்நிற்பது மட்டுமன்றி பாரபட்சம் மற்றும் அரசியல் பழிவாங்கல்களுக்கு ஆளாவோருக்கு நீதியை நிலைநாட்டும் வேலைத்திட்டமொன்றை ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுக்கும்’ என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இதேவேளை ‘எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம், மக்கள் மன்ற அலுவலகமாக மாற்றப்பட்டு தீர்வுகளை வழங்கும் வேலைத்திட்டத்தை விரைவில் ஆரம்பிப்போம்’ என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.



