இன்று உலக உள நல நாள்: உறவுகள், உணர்வுகள், உளநலம் – ச.எ.றெஜினோல்ட்

main qimg 8f3fbe1bf606e635446bd03ba5aa0f91 lq இன்று உலக உள நல நாள்: உறவுகள், உணர்வுகள், உளநலம் - ச.எ.றெஜினோல்ட்

உண்மையில் ஒருவரை அன்புசெய்தல் என்பது அவர் இருக்கின்ற நிலையில் அவரை ஏற்றுக்கொள்வதாகும்.

எமது உளநலம் மிகவும் முக்கியமாக எமது உள்ளத்தில் கணத்துக்குக் கணம் மாறுபடுகின்ற உணர்வுகளை நாம் எவ்வாறு கையாளுகின்றோம், எவ்வாறு வெளிப்படுத்துகின்றோம் என்பதில் பெருமளவில் தங்கியிருக்கிறது. எமது உணர்வுகளைப் பொறுத்த வரையில் எமது உறவுகள் எமது உணர்வுகளில் அதிக தாக்கம் செலுத்துவதை உணரலாம். ஒவ்வொரு கணமும் ஏதோ ஒரு உணர்வை நாம் அனுபவித்துக் கொண்டு தான் இருக்கின்றோம். சில வேளைகளில் எமது உணர்வுகள் நேர்முகமானவையாக இருக்கின்றன. இன்னும் சில வேளைகளில் அவை எதிர்மறையானவையாக இருக்கின்றன.

அவ்வப்போது எமக்கு ஏற்படும் உணர்வுகளை உரிய முறையில் கையாளவும் வெளிப்படுத்தவும் நாம் அறிந்திருக்க வேண்டும். இன்னும் குறிப்பாக கோபம், கவலை, ஏமாற்றம், விரக்தி போன்ற எதிர்மறையான உணர்வுகள் எம்மில் ஏற்படும் போது, அந்த உணர்வுகளை உரிய முறையில் வெளிப்படுத்த நாம் அறிந்திருக்க வேண்டும். எமது உணர்வுகளை உரிய முறையில் வெளிப்படுத்தாது, அவற்றை உள்ளத்தில் அமுக்கிப் புதைக்கும் போது, அது எமது உள்ளத்தில் மிகவும் ஆழமான பாதிப்புகளை ஏற்படுத்திவிடுகின்றது. அவ்வாறான பாதிப்புகள் நாளடைவில் எமது உளநலத்தையும் பாதிக்கும் விடயமாக மாறிவிடுகின்றது.

எமது நாளாந்த வாழ்வில் உறவுகள் மிகவும் முக்கியமானவை. உறவுகள், எமது குடும்பத்துக்குள் குடும்ப உறவுகளாகவும் எமது குடும்பத்துக்கு வெளியே நட்பின் அடிப்படையில் அமைந்த உறவுகளாகவும் நீண்டு செல்லலாம். எமது உறவுகள் ஆரோக்கியமானவையாக இருக்கின்ற போது, அந்த உறவுகளின் நடுவே நேர்முகமான அன்றேல் எதிர்மறையான உணர்வுகள் ஏற்படும் போது, அந்த உணர்வுகளை அந்த உறவுகளில் வெளிப்படுத்துவது எமக்கு இலகுவாகின்றது. உதாரணமாகத் தனது கணவன் கவலையாக இருக்கிறார் என்பதை தனது கணவனின் உணர்வுகளை நன்கு புரிந்துகொள்ளும் ஒரு மனைவியால் இலகுவாக இனங்காண முடியும். அது போலவே தனது மனைவி மகிழ்வாக இல்லை என்பதை அந்த மனைவியை நன்கு புரிந்த ஒரு கணவனால் இலகுவாகப் புரிந்துகொள்ள முடியும்.

அதே நேரம் உறவுகள் ஆரோக்கியமற்றவையாக அமையும் போது, அந்த உறவுகளுக்கு நடுவில் அடிக்கடி எதிர்மறையான உணர்வுகள் ஏற்படும் போது, அந்த உணர்வுகளை உரிய முறையில் இனங்கண்டு வெளிப்படுத்த நாம் தவறுவதால், எமது உறவுகளில் படிப்படியாக விரிசல்கள் ஏற்படத் தொடங்குகின்றன. உதாரணமாகப் புதிதாகத் திருமணம் முடிப்பவர்கள் தமது உணர்வுகளை ஒருவர் ஒருவருக்கு அடிக்கடி வெளிப்படுத்த வேண்டும். அவை நேர்முகமானவையாக இருக்கலாம். அன்றேல் எதிர்மறையான உணர்வுகளாக இருக்கலாம். உணர்வுகள் உரிய முறையில் வெளிப்படுத்தப்படும் போது அங்கே புரிதல்கள் அதிகமாக ஏற்படும். உதாரணமாகக் கணவன் தங்கள் திருமண நாளை மறந்துவிடுகின்ற போது, மனைவிக்கு அது இயல்பாகவே ஒரு பாதிப்பை ஏற்படுத்திவிடுகிறது. கவலை, கோபம், ஏமாற்றம் போன்ற உணர்வுகள் மனைவியின் உள்ளத்தில் ஏற்படலாம். தனது உணர்வை உரிய முறையில் மனைவி தனது கணவனிடம் வெளிப்படுத்தும் போது, கணவன் தனது தவறைத் திருத்திக் கொள்ளும் வாய்ப்பு ஏற்படுகிறது. இதற்கு மாறாக தனது உணர்வை நேரடியாக, வெளிப்படையாகச் சொல்லாது, தனது நடத்தைகள் வாயிலாக மறைமுகமாக, மனைவி அந்த உணர்வை வெளிப்படுத்த முனைந்தால், அவர்களது உறவை அது நிச்சயம் பாதிக்கின்ற ஒரு விடயமாக அமைந்துவிடும்

எமது உறவுகளில் அடுத்தவரது உணர்வுகளைப் புரிந்துகொள்ள நாம் முயலவேண்டும். நாம் ஒவ்வொருவரும் எமது சொந்த நிலையில் இருந்து அடுத்தவரைப் பார்க்கும் போது, அடுத்தவரது உணர்வுகளைப் புரிந்துகொள்வது எமக்குக் கடினமான ஒரு விடயமாக மாறிவிடுகின்றது. அதனை விடுத்து உளவியலாளர் காள் றொஜர்ஸ் கூறுவது போன்று, அடுத்தவரது நிலையில் நின்று அவரது உணர்வுகளைப் புரிந்துகொள்ள நாம் முயற்சிக்க வேண்டும். இதனைத் தான் ’ஒத்துணர்வு’ என்று காள் றொஜர்ஸ் அழைக்கிறார். அடுத்தவரது உணர்வை மிகவும் துல்லியமாகப் புரிந்துகொள்ளும் ஆற்றலையே ஒத்துணர்வு என்று அவர் அழைக்கிறார். ஒருவரது உணர்வை சரிவர நாம் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் அவர் வெளிப்படுத்தும் வார்த்தைகளை மட்டுமல்ல அவரது உடல்மொழியையும் நாம் அவதானித்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக ஒரு சந்தர்ப்பத்தில் ஒருவர் ஏதோ ஒரு காரணத்தினால் கோப உணர்வை அனுபவிக்கின்றார் என்று வைத்துக்கொள்வோம். ”எனக்குக் கோபம் இல்லை” என்று அவர் தனது வார்த்தைகளாலே கூற முடியும். ஆனால் அவரது குரல் அவர் உண்மையில் கோபமாகத் தான் இருக்கிறார் என்பதைக் காட்டிக்கொடுத்துவிடும். எனவே தான், ஒருவரை ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் அவர் வெளிப்படையாகச் சொல்கின்ற வார்த்தைகளில் மட்டும் நாம் தங்கியிருக்க முடியாது. பல்வேறு விதமாக வெளிப்படும் அவரது உடல்மொழியையும் நாம் கூர்மையாக அவதானிக்க வேண்டும்.

அதுமட்டுமன்றி எமது உறவுகளில் அடுத்தவரை அப்படியே அவனது அல்லது அவளது நிறைகுறைகளோடே ஏற்றுக்கொள்ள நாம் தவறிவிடுகின்றோம். உண்மையில் ஒருவரை அன்புசெய்தல் என்பது அவர் இருக்கின்ற நிலையில் அவரை ஏற்றுக்கொள்வதாகும். சில வேளைகளில் எமது உறவுகளில் எமது தேவைகளுக்காக அடுத்தவரைப் பயன்படுத்திக்கொள்ள நாம் முயற்சிக்கின்றோம். அவ்வாறு பயன்படுத்தப்படுபவரின் ஆளுமையை அந்த உறவு சிதைத்துவிடுகிறது. உறவுகள் ஆரோக்கியமானவையாக அமைய எமது உறவுகளில் பகிர்வுகள் அதிகமாக இருக்க வேண்டும். ஒருவர் உண்மையில் தன்னை வெளிப்படுத்தும் போது தான் மற்றவரால் அவரை ஆழமாகப் புரிந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படுகிறது.

சுருங்கச் சொல்வதாயின் கணத்துக்குக் கணம் எமக்கு ஏற்படும் உணர்வுகளை அதிவிசேடமாக எமக்குள்ளே அமுக்கிப்புதைத்துவிடாது அந்த உணர்வுகளை வெளிப்படையாகச் சொல்லி அந்த உணர்வுகளின் தாக்கங்களிலிருந்து விடுபட நாம் முயற்சிக்க வேண்டும். உணர்வுகள் உரிய முறையில் வெளிப்படுத்தப்படாதபோது, எமது ஆழ்மனத்திலே அந்த உணர்வுகள் சென்று தேங்கிவிடுகின்றன. இதன் காரணமாக எமது உளநலம் பாதிப்புக்குள்ளாகும் ஆபத்து  இருக்கிறது.

எனவே தான் எமது உறவுகளில் எமது உணர்வுகளைச் சரிவர நாம் புரிந்துகொள்வது மட்டுமன்றி அடுத்தவரது உணர்வுகளையும் துல்லியமாகப் புரிந்துகொள்ள நாம் கற்றுக்கொள்ள வேண்டும். ஒருவரை ஆழமாகப் புரிந்துகொள்வதற்கு அவர் கூறுகின்ற கதையை ஆழமாகச் செவிமடுத்துக் கேட்பது மிகவும் அவசியமாகும். தற்போதைய எமது வாழ்க்கை முறைகளைப் பார்க்கும் போது, பல சந்தர்ப்பங்களில் ஆற அமர இருந்து, அடுத்தவரின் கதையைக் கேட்க எமக்கு நேரமில்லாமல் போய்விடுகின்றது. எம்மில் சிலர் எமது வேலைப்பளுவின் காரணமாக எமது வாழ்க்கைத் துணையின் அல்லது பிள்ளைகளின் கதைகளை ஆழமாகச் செவிமடுக்கத் தவறிவிடுகின்றோம்.

எமது உணர்வுகளைச் சரிவரக் கையாள்வதன் மூலம் எமது உள ஆரோக்கியத்தை நாம் பேணிப்பாதுகாக்க முடியும். ஒத்துணர்வைக் கடைப்பிடிப்பதன் மூலம் எமது உறவுகளை ஆரோக்கியமானவையாக நாம் மாற்ற முடியும். உணர்வுகளையும் உறவுகளையும் உரியமுறையில் நெறிப்படுத்துவதன் மூலம் எமது உள நலனையும் அடுத்தவரது உளநலனையும் நாம் பேணிப்பாதுகாத்துக்கொள்ள முடியும்.