இந்தியாவுக்கு வெளியே நிபா வைரஸ் பரவுவதற்கான ஆபத்து குறைவு – உலக சுகாதார ஸ்தாபனம்

இந்தியாவில் கண்டறியப்பட்ட நிபா வைரஸ் தொற்று சர்வதேச நாடுகளுக்குப் பரவும் அபாயம் மிகவும் குறைவாகவே உள்ளதாக  உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. இதனால், இந்தியாவுடனான வர்த்தகம் அல்லது பயணங்களுக்குத் தடை விதிக்க வேண்டிய அவசியமில்லை எனவும் அந்த அமைப்பு பரிந்துரைத்துள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தின் பரசாத் பகுதியில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் பணிபுரியும் இரண்டு தாதியர்களுக்கு (ஒரு ஆண், ஒரு பெண்) கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் நிபா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்த இருவருடன் தொடர்பில் இருந்த சுமார் 196 பேர் கண்டறியப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் தொற்று இல்லை (Negative) என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

“இந்த இரண்டு பாதிப்புகளிலிருந்து மேலும் தொற்று பரவுவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு. இத்தகைய பாதிப்புகளைக் கையாளும் திறன் இந்தியாவிற்கு உள்ளது” என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

நிபா வைரஸ் என்பது விலங்குகளிலிருந்து மனிதர்களுக்குப் பரவும் ஒரு கொடிய வைரஸ் ஆகும்.