பிரித்தானியாவின் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் பதவி விலகுவதாக கடந்த ஜூலை மாதம் அறிவித்ததை அடுத்து, அடுத்த பிரதமராக ஆளும் கன்சர்வேடிவ் கட்சிக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இருப்பதால், அக்கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்படுபவரே, பிரித்தானியாவின் பிரதமராக இருக்க முடியும். இதனால், கட்சித் தலைவருக்கான தேர்தலில் ஜான்சன் அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்த ரிஷி சுனக்கும் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த லிஸ் ட்ரசும் போட்டியிட்டனர்.
பல கட்டங்களாக நடைபெற்ற இந்த தேர்தலில் லிஸ் ட்ரஸ் வெற்றி பெற்றார். இதையடுத்து, இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
45 நாட்கள் பிரதமராக இருந்த நிலையில் லிஸ் ட்ரஸ் பிரதமர் பதவியை ராஜினமா செய்வதாக பிரித்தானியாவின் புதிய மன்னர் சார்லசிடம் கடந்த வியாழக்கிழமை தெரிவித்தார். இதையடுத்து, புதிய கட்சித் தலைவருக்கான தேர்தல் தொடங்கியது. இந்த தேர்தலில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், பின்னர் போட்டியில் இருந்து விலகிக்கொண்டார். ரிஷி சுனக்கிற்கு மற்றொரு போட்டியாளராக இருந்த பென்னி மார்டன்ட்டும் போட்டியிடும் முடிவை கைவிட்டார். இதையடுத்து, கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக ரிஷி சுனக் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து, அவர் விரைவில் பிரதமராக பதவி ஏற்க உள்ளார். அவருக்கு கன்சர்வேட்டி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், மன்னர் சார்லஸ் ரிஷி சுனக்கிற்கு முறைப்படி அழைப்பு விடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, பிரதமர் பதவி ஏற்கும் திகதி முடிவு செய்யப்பட்டு ரிஷி சுனக் பிரதமராக பதவி ஏற்பார். அவருக்கு மன்னர் சார்லஸ் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். ராணி இரண்டாம் எலிசபெத் தனது பதவிக்காலத்தில் 15 பேருக்கு பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். லிஸ் ட்ரஸ்தான் அவர் பதவிப் பிரமாணம் செய்து வைத்த கடைசி பிரதமர் என்பது குறிப்பிடத்தக்கது.