ஐரோப்பிய ஒன்றியத் தூதுவருடன் ரிஷாட் பதியுதீன் சந்திப்பு!

202 Views

ஐரோப்பிய ஒன்றியத் தூதுவருடன் ரிஷாட் பதியுதீன்
ஐரோப்பிய ஒன்றியத் தூதுவருடன் ரிஷாட் பதியுதீன்: அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் டெனிஸ் செய்பி ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று அண்மையில் இடம்பெற்றது.

ஐரோப்பிய ஒன்றியத்திற்கும், இலங்கைக்குமான நீண்டகால உறவு குறித்து பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் இச்சந்திப்பின் போது நினைவு படுத்தியதுடன், கடந்த காலங்களில் இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவியதற்காக தனது நன்றிகளையும் தெரிவித்தார்.

மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,

“பயங்கரவாதத் தடைச் சட்டம் மூலம் கைது செய்யப்பட்டுள்ள, சிறைக் கைதிகளுடைய விடுதலை தொடர்பில், ஐரோப்பிய ஒன்றியம் அதிக அக்கறை செலுத்துகின்றது. பயங்கரவாத தடைச் சட்டத்தின் மூலம் அநியாயமாக கைது செய்யப்பட்டு, சிறையிலிருக்கின்ற தமிழ், முஸ்லிம் இளைஞர்கள் பலர் தமது கைதை எதிர்த்து சட்ட நடவடிக்கை எடுப்பதற்குக் கூட பொருளாதார வசதிகள் இன்றி மிகவும் சிரமப்படுகின்றனர்.

பொருளாதார ரீதியில் அவர்களது குடும்பங்கள் கஷ்டப்படுகின்றன. இதனால் அவர்களுக்கான நியாயம் கிடைப்பது கூட அரிதாகவுள்ளது. எனவே கடந்த காலங்களைப் போன்று ஐரோப்பிய ஒன்றியம், பாதிக்கப்பட்டுள்ள கைதிகளின் நலனுக்கு தமது ஒத்துழைப்பை தொடர்ந்தும் வழங்க வேண்டும்” எனவும் வேண்டிக் கொண்டார்.

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் உட்பட இன்னும் பல அறிஞர்கள், புத்திஜீவிகள், மாணவர்கள் என பலரும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் மூலம் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பதையும் ரிஷாட் பதியுதீன் தூதுவரிடம் சுட்டிக்காட்டினார்.

இதன் போது கருத்து தெரிவித்த ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் டெனிஸ் செய்பி, ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதிப்பங்களிப்பில் நீதியமைச்சின் ஊடாக, நீதிமன்றங்களின் திறனை அதிகரிக்கும் மூன்று வருட செயற்றிட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன் ரிஷாட் பதியுதீனின் கைது தொடர்பிலும் ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் டெனிஸ் செய்பி கேட்டறிந்து கொண்டார்.

Tamil News

Leave a Reply