இலங்கைக்கு தமிழகத்தில் இருந்து 16ம் திகதி அரிசி, மருந்து அனுப்பப்படுகிறது: பொதி செய்யும் பணிகள் தீவிரம்

317 Views

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்க

முதல் கட்டமாக வருகிற 16ம் (திங்கட்கிழமை) தமிழகத்தில் இருந்து நிவாரணப் பொருட்கள் இலங்கைக்கு அனுப்பப்படவுள்ளது. சென்னை துறைமுகத்தில் இருந்து கப்பலில் அரிசி, மருந்து பொருட்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளன.

இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்க இந்தியா, சீனா உள்பட பல்வேறு நாடுகள் உதவிகள் செய்து வருகின்றன. என்றாலும் மக்களின் துயரம் நீங்குவதற்கு இன்னும் சில நாட்கள் தேவைப்படும் என்று நிபுணர்கள் கணித்து உள்ளனர்.

இந்த நிலையில் இலங்கை மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கொடுத்து உதவுவதற்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன் வந்துள்ளார். இலங்கை மக்களுக்கு ரூ. 80 கோடி மதிப்புள்ள 40 டன் அரிசி, ரூ. 28 கோடி மதிப்புள்ள 137 வகை மருந்துகள், ரூ. 15 கோடி மதிப்புள்ள 500 டன் பால் பவுடர் ஆகியவை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதற்காக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து மத்திய அரசும் இதற்கு அனுமதி வழங்கியது. இதையடுத்து இலங்கை மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்க 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.

இந்த குழு இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் நிவாரணப்பொருட்களை அனுப்பும் பணியை மேற்கொண்டு வருகிறது. தற்போது நிவாரணப் பொருட்களை பொதி செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த பொதியில் தமிழ்நாட்டு மக்களிடமிருந்து அன்புடன் என்று அச்சிடப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக வருகிற 16ம் திகதி (திங்கட்கிழமை) தமிழகத்தில் இருந்து நிவாரணப் பொருட்கள் இலங்கைக்கு அனுப்பப்படவுள்ளது. சென்னை துறைமுகத்தில் இருந்து கப்பலில் அரிசி, மருந்து பொருட்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளன. முதல் கட்டமாக 10 ஆயிரம் டன் அரிசி மற்றும் பால் பவுடர், மருந்து வகைகள் கொண்டு செல்லப்பட உள்ளது. அதன் பிறகு மீண்டும் 22ம் திகதி 2-வது கட்டமாக இலங்கைக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது.

Tamil News

Leave a Reply