உயிர்த்த ஞாயிறு தாக்குதலை முஸ்லீம்கள் செய்யவில்லை என்பதை மக்கள் தற்போது புரிந்து கொண்டுள்ளனர்-அப்துல்லா மஹ்ரூப்

தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற அசாதாரண சூழ் நிலை அத்தியவசிய பொருட்கள், எரிபொருள், அந்நியச் செலவாணி, டொலர் பிரச்சினை என்பன  சாதாரண பொது மக்கள்  முதல் அனைத்து மக்களையும் நேரடியாக பாதித்துள்ளது என முன்னாள் பிரதியமைச்சரும் மக்கள் காங்கிரசின் தேசிய அமைப்பாளருமான அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார்.

கிண்ணியாவில் இன்று (17) அவரது இல்லத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில்,

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியையடுத்து அரசாங்கத்திற்கு எதிராக  எந்தவொரு அரசியல் பிண்ணனியும் இன்றி தொடர்   போராட்டங்களை மக்கள் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஈஸ்டர் தாக்குதலை ஒரு சமூகத்தின் மீது பழி சுமத்தி ஆட்சியை கைப்பற்றியது  போன்று, ஜனாதிபதியின் வாசஸ்தளத்தில் இடம் பெற்ற மக்கள் போராட்டத்தை அரபு வசந்தம் என அதே சமூகத்தின் மீது வீண் பழி சுமத்தி  மீண்டும் ஆட்சியை தக்கவைத்த அரசாங்கம் முயற்சித்தது.

இதன் காரணமாக பௌத்த கிறிஸ்தவ உயர் பீடங்கள் ஏனைய சமூகங்கள் முஸ்லிம் சமூகம் அப்படிப்பட்ட துரோகங்களை செய்யவில்லை. உயிர்த்த ஞாயிறு தாக்குதலை முஸ்லீம்கள் செய்யவில்லை என புரிந்து கொண்டுள்ளனர்.

மேலும் அம்பாறை பேருவளை குருணாகல் போன்ற இடங்களில் இனக்கலவரத்தை உருவாக்கிய ஆட்சியாளர்களில், பொதுபல சேன போன்ற அமைப்பின் தலைவர் ஞானசார தேரர் போன்றோர்களுக்கும் இனவாதிகளுக்கும் இங்கு இடமில்லை என்பதை போராட்டம் மூலமாக சகல இனங்களும் இணைந்து ஒருமித்த நிலைப்பாட்டில் ஆட்சியாளர்களுக்கு எதிராக கோசமிட்டு  காட்டியுள்ளார்கள் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Tamil News