ரணிலின் இந்திய பயணத்தை மையப்படுத்தி இருதரப்பு ஒப்பந்தங்களை கைச்சாத்திட தீர்மானம்

இருநாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் வியாழக்கிழமை (20) இந்தியா செல்கிறார். இந்த விஜயத்தை மையப்படுத்தி ஐந்து இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட உள்ளன.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தாணிகர் கோபால் பாக்லே மற்றும் ஜனாதிபதி அலுவலக பிரதானி சாகல ரத்நாயக்க ஆகியோருக்கு இடையில் இவ்வார இறுதியில் மீண்டும் இடம்பெற்ற சந்திப்பின் போது ஒப்பந்தங்கள் குறித்த இறுதி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு கடந்த திங்கட்கிழமை விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய வெளிவிவகார செயலர் வினய் மோகன் குவத்ரா குறித்த 5 ஒப்பந்தங்கள் குறித்து ஜனாதிபதியிடம் குறிப்பிட்டிருந்ததுடன், இலங்கை – இந்திய நட்புறவை மேலும் வலுப்படுத்தும் வகையிலும் இருதரப்பு பொருளாதாரத உறவுகளை மேம்படுத்தும் வகையிலுமே இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படுவதாகவும் தெரிவித்திருந்தார்.

இதனடிப்படையில்  புதுப்பிக்கதக்க ஆற்றல் சக்தி ஒப்பந்தம், இரு நாடுகளுக்கு இடையில் கடலூடான எரிபொருள் குழாய் மற்றும் மின்சார கேபில் இணைப்புகளை ஏற்படுத்துவதற்கான ஒப்பந்தம் மற்றும் திருகோணமலையில் பொருளாதார வலயத்திற்கான ஒப்பந்தம் ஆகியன கைச்சாத்திடப்பட உள்ளன.

மேலும் இலங்கைக்கு தேவையான மருந்து பொருட்களை நேரடியாக கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தம் மற்றும் பால் உற்பத்தி தொடர்பான இருதரப்பு ஒப்பந்தம் ஆகியனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்திய விஜயத்தை மையப்படுத்தி கைச்சாத்திடப்பட உள்ளன.

அத்துடன்  இந்திய ஜனாதிபதி  திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் ஆகியோரையும்  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது டெல்லி விஜயத்தின் போது சந்தித்து கலந்துரையாட உள்ளமை குறிப்பிடத்தக்கது.