அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட தடுப்புக்காவல் உத்தரவு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என்று கொழும்பு கோட்டை நீதவான் இன்று (22) உத்தரவிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகளின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அவர் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
சந்தேகநபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, சம்பவம் தொடர்பில் நீதவான் முன்னிலையில் வாக்குமூலம் ஒன்றை வழங்க மூன்றாவது சந்தேகநபரான தமது சேவை பெறுநர் சுரேஷ் சலே விரும்புவதாக நீதிமன்றில் அறிவித்தார்.
இதற்கு பதிலளித்த நீதவான், வாக்குமூலமொன்றை வழங்குவதற்கு அனுமதி கோரும் சந்தேகநபருக்கு நியாயமான கால அவகாசம் வழங்கப்படுவதாக குறிப்பிட்டார். இதன்படி, மூன்றாவது சந்தேகநபர் அவ்வாறு வாக்குமூலத்தை வழங்க விரும்புகின்றாரா? என்பதை தீர்மானிக்க ஒரு மாத கால அவகாசத்தை நீதவான் வழங்கினார்.
சந்தேகநபரின் தீர்மானம் தொடர்பில் எதிர்வரும் மே மாதம் 20ஆம் திகதி நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறும், அவரை திறந்த நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டார்.



