அரசியல் கைதிகளின் விடுதலை : தியாகி திலீபனின் கோரிக்கை இன்னும் நிறைவேற்றப் படவில்லை-அருட்தந்தை மா.சத்திவேல்

397 Views

அரசியல் கைதிகளின் விடுதலை

“அரசியல் கைதிகளின் விடுதலை என்பது கானல் நீரே எனத் தெரிவித்த அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல், தமிழ் தலைமைகளும் ஆட்சியாளர் பக்கமே நிற்கின்றனர் என்று குற்றம் சுமத்தியுள்ளார்.

34 வருடங்களுக்கு முன்னர் தியாக தீபம் திலீபன் அவர்கள் முன்வைத்த  5 அம்ச கோரிக்கையில் “சிறைக் கூடங்களிலும், இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும்” என கூறியிருக்கிறார். இந்த கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது. இதனை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் இலங்கை அரசியலில்..? என இலக்கு செய்தி நிறுவனம் தொடர்பு கொண்டு வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் மட்டுமல்ல, முழு உலகிற்கும் அகிம்சையை உண்ணாவிரதத்தால் போதித்து உயிர் தீபமாய் திகழும் தியாகி திலீபனின் உயிர்த்தியாக 34 ஆம் அகவையிது. புத்தன் கிறிஸ்து நபியின் வாழ்வு போதனைகளையும், சமயங்களின் அடிப்படை தத்துவமான மனித மாண்பையும் கொலை செய்த கொடுங்கோன்மை, பெரும்பான்மை இன மத ஆட்சியாளர்களே திலீபனின் உண்ணா விரதத்தை அவமதித்ததோடு உண்ணாவிரத கோரிக்கையையும் நிறைவேற்றத் தவறினர்.

சிறைச்சாலைகளிலும், இராணுவ முகாம்களிலும் அடைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படல் வேண்டும், அவசரகால சட்டத்தை நீக்க வேண்டும் எனும் கோரிக்கைகள் உட்பட முன்வைத்த ஐந்து கோரிக்கைகளை இலங்கை ஆட்சியாளர்கள் மிக இலகுவில் நிறைவேற்றி இருக்க முடியும். இந்திய இராணுவம் அன்று இலங்கையில் இருந்த காலகட்டத்தில் அதனை நோக்கி, இலங்கை அரசு இந்திய ஆட்சியாளர்கள் தள்ளி இருக்கவும் முடியும். அதனை செய்யத் தவறியமைக்கு முக்கிய காரணம் புத்த நாடு என்று கூறும் இலங்கை ஆட்சியாளர்கள் புத்தனை கொன்று சிங்கள புத்தனை சிங்கக் கொடியில் உயர்த்தி நின்றமையாகும். அதுவே இன்றும் தொடர்கிறது.

அதுமட்டுமல்ல தமிழ் அரசியல் கைதிகளை அரசியல் கைதிகளாக ஏற்காது, தமிழரின் தாயக கோட்பாட்டுக்கும், சுயநிர்ணய உரிமை அரசியல் செயல்பாட்டுக்கும் வாழ்நாள் தண்டனை கொடுப்பதே பேரினவாத ஆட்சியாளர்களின் நோக்கமாகும். இதன் மூலம் அடுத்த இளம் தலைமுறையினரை அவ் அரசியல் சிந்தனையில் இருந்து நீக்கம் செய்வதே அடுத்த இலக்காகும். இதற்காக அரசியல் கைதிகளை விடுதலை செய்யாதது மட்டுமல்ல, இதற்காகவே பயங்கரவாத தடைச் சட்டத்தினை இன்றும் இறுக்கமாக பற்றி பிடித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இதுவே இந்திய மற்றும் மேற்கத்திய நாடுகளில் அரசியல் தேவையாகவும் இருக்கின்றது. அரசியல் கைதிகளை அரசியல் தீர்மானம் எடுத்து விடுவிப்பதன் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அது அங்கீகாரமாக அமைந்துவிடும் எனவும் நினைக்கின்றனர். இதனையே இவர்களுக்கு கைக்கூலிகளாக செயற்படும் ஒரு சில தமிழ் அரசியல் தலைமைத்துவங்களும் பின்பற்றுகின்றனர்.

தேர்தல் காலங்களில் பொது இடங்களிலும், தேர்தல் பிரச்சார மேடைகளிலும் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படல் வேண்டும் என தேர்தல் வாக்கு அரசியலை நடத்தி மக்களின் வாக்குகளை கொள்ளையடித்துவிட்டு அதிகாரத்திற்கு வந்த பின்னர் அமைதி காப்பதே இவர்களின் அரசியல் நாகரீகமாக உள்ளது என்பதையும் நாம் அவதானிக்கலாம்.

இது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமைத்துவத்தோடு எனக்கு நேரடி அனுபவம் உள்ளது. நல்லாட்சி முகம் கொண்ட மைத்திரி- ரணில் ஆட்சிக்காலத்தில் அரசியல் கைதிகளுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் எத்தனையோ. தங்கள் விடுதலைக்காக உண்ணாவிரத போராட்டம், சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டம் என தொடர்ந்த போதெல்லாம் இவர்கள் சிறைச்சாலைக்கு சென்று கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியமை இதற்கு நல்ல சான்றாகும். அன்று மீண்டும் ரணிலை பிரதமர் பதவிக்கு அமர்த்துவதற்கு அரசியல் கைதிகளின் விடுதலையையும் பத்து கோரிக்கைகளில் ஒன்றாக வைத்திருப்பதாக என்னிடம் கூறினார் தலைவர் சம்பந்தன். ஆனால் ஒரு அரசியல் கைதியையும் இவர்களின் அரசியல் சாணக்கியத்தால் விடுதலை செய்ய இயலவில்லை என்பதைவிட விடுதலை செய்யும் நோக்கம் அவர்களுக்கு இருக்கவில்லை என்றே கூறலாம்.

அன்று ஒரு கட்டத்தில் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்பதாக கூறிய மைத்திரி தமிழ் தேசிய கூட்டமைப்பின் ரணில் ஆதரவு கொள்கையால் அதுவும் நிகழவில்லை. அதுவும்கூட மைத்திரியின் தனிப்பட்ட அரசியல் ஏமாற்று வார்த்தைகளே. அவருடைய ஆட்சிக் காலத்திலேயே நீதி அமைச்சராக இருந்த விஜயதாச ராஜபக்ச அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை இருப்பது பயங்கரவாதிகளே என்றார்.இதனையே மைத்திரியும் தொடர்ந்து உச்சரிக்க தொடங்கினார். இதுவே பேரினவாத அரசியல்.

தற்போதைய ஆட்சியாளர்கள் நாட்டில் இருப்பது இனப் பிரச்சினை அல்ல. இருப்பது பொருளாதார மற்றும் அபிவிருத்தி பிரச்சினை மட்டும்தான் என கூறியே பதவிக்கு வந்ததோடு தொடர்ந்து பயங்கரவாத தடைச்சட்டத்தை பாதுகாப்பதோடு தற்போது கொரோனாவை காரணம் காட்டி அவசர கால சட்டத்தையும் அமுல் படுத்தியுள்ளனர். இவர்களும் அரசியல் கைதிகள் இன்று எவரும் இல்லை என்று குறிப்பிடுவதோடு, நாம் அரசியல் கைதிகள் என்று கூறுபவர்களை குற்றவாளிகளாக்கவே முற்படுகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன் பொது மன்னிப்பு என 16 பேர் நீதிமன்ற நடவடிக்கையால் சுதந்திரமாக வெளியில் வர இருந்தவர்களை பொதுமன்னிப்பின் கீழ் குற்றம் குற்றவாளிகளாக்கியே தமது வீடுகளுக்கு செல்ல அனுமதித்தனர்.

பேரினவாதத்தின் உச்சத்தில் நின்று இராணுவ மயமாக்கலை விரிவுபடுத்தி கொண்டிருக்கின்ற இக் காலகட்டத்தில் அரசியல் தீர்மானம் எடுத்து நிபந்தனையற்ற ரீதியில் அரசியல் கைதிகளின் விடுதலை என்பது கானல் நீரே. இதுவிடயத்தில் தமிழ் தலைமைகளும் ஆட்சியாளர் பக்கமே நிற்கின்றனர்.

இத்தகைய கொள்கை உள்ள அரசியல் தலைமைத்துவங்கள் திலீபனுக்கு ஏற்றுகின்ற தெய்வம் இறைவனின் கொள்கைக்கும், உண்ணாவிரத கோரிக்கைகளுக்கும் வைக்கின்ற தீயாகவே கொள்ளல் வேண்டும். இது முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையுடனான இன அழிப்பை விட பயங்கரமானது” என்றார்.

ilakku-Weekly-Epaper-146-September-05-2021

Leave a Reply