இலங்கையிலிருந்து படகில் வெளியேறும் அகதிகளும் அவுஸ்திரேலியாவின் நாடுகடத்தல் கொள்கையும்

177 Views

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்சேவை நாட்டிலிருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளி அவரை பதவியிலிருந்து விலக வைத்திருக்கிறது.

இந்த நிலையில் தற்போது அவர் சிங்கப்பூரில் தஞ்சமடைந்திருக்கிறார். இது ஒருபுறம் நிகழ இலங்கையில் வாழக்கூடிய மக்கள் அவுஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைய முயலும் பல சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன, இன்னும் நிகழ்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கருதப்படுகிறது.

இறுதியாக, கடந்த ஜூலை 10ம் திகதி அவுஸ்திரேலியா செல்ல முயன்று புயலில் சிக்கிக்கொண்ட 55 பேரை அம்பாந்தோட்டை கடல் பகுதியிலிருந்து  இலங்கை கடற்படை மீட்டிருக்கிறது. கடந்த மூன்று மாதங்களில் அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முயன்ற சுமார் 500க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் அவுஸ்திரேலியாவின் கடல் பகுதியில் இடைமறிக்கப்பட்டு மீண்டும் இலங்கைக்கே நாடுகடத்தப்பட்டிருக்கின்றனர்.

அவுஸ்திரேலியாவின் நாடுகடத்தல் கொள்கை 

கடந்த 2013 ஆண்டு முதல் கடுமையான எல்லைப் பாதுகாப்பு கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வரும் அவுஸ்திரேலிய அரசு, கடல் வழியாக வரும் அகதிகளை ஒருபோதும் நாட்டினுள் குடியமர்த்த மாட்டோம் எனத் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது. இந்த சூழலில், கடந்த மே மாதம் அவுஸ்திரேலியாவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் படகு வழியாக வரும் அகதிகளை அவுஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தும் என்ற பார்வை இருந்தது. ஆனால், புதிதாக ஆட்சிக்கு வந்த அவுஸ்திரேலியாவின் தொழிற்கட்சி படகு வழியாக சட்டவிரோதமாக வருபவர்களை நாடுகடத்தும் கொள்கை தொடரும் என்பதை தனது நடவடிக்கைகளின் மூலம் எடுத்துக் காட்டியுள்ளது.

இலங்கையில் நிகழ்ந்த போர் மற்றும் இனரீதியான அச்சுறுத்தல் காரணமாக கடந்த காலங்களில் ஆயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் அவுஸ்திரேலியா, இந்தோனேசியா, மலேசியா போன்ற நாடுகளில் படகு வழியாக தஞ்சமடைந்திருக்கின்றனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அவ்வாறான தஞ்சக்கோரிக்கை பயணங்கள் அவுஸ்திரேலிய அரசின் உந்துதலால் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டதாக சொல்லப்பட்ட நிலையில், இலங்கையில் நிலவும் மோசமான பொருளாதார நெருக்கடியால் அவ்வாறான பயணங்கள் மீண்டும் தொடங்கியுள்ளது.

இலங்கைக்கு 4,200 ஜி.பி.எஸ் கருவிகள்  அவுஸ்திரேலியாவில் படகு வழியாக  தஞ்சம் கோரும் இலங்கை மக்களை தடுக்கும் விதமாக இலங்கை மீன்பிடி படகுகளுக்கு 4,200 ஜி.பி.எஸ் கருவிகளை வழங்குவதாக அவுஸ்திரேலிய அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது. கடந்த ஜூன் மாதம் இலங்கை தலைநகர் கொழும்புவில் கடற்தொழில் கண்காணிப்பு மையத்தை திறந்து வைத்த அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் கிளாரி ஓ’நீல் இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார். 5 மில்லியன் அவுஸ்திரேலிய டாலர்கள் மதிப்பிலான கருவிகள் சுமார் 4 ஆயிரம் படகுகளுக்கு வழங்கப்படுவதன் மூலம் கண்காணிப்பு மையத்திலிருந்து படகு பயணிக்கும் இடம் கண்காணிக்கப்படும் எனக் கூறப்பட்டது.

கடல்சார் விழிப்புணர்வு, ஆட்கடத்தல் தடுப்பு, சட்டவிரோத அல்லது அறிவிக்கப்படாத மீன்பிடி செயல்கள், தீவிரவாத செயல்கள் தடுப்பு, குற்ற கும்பல்கள் படகுகளை பயன்படுத்துவதை தவிர்க்க இந்த கண்காணிப்பு அமைப்பு (monitoring system) இலங்கை அரசுக்கு உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இலங்கையின் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு 50 மில்லியன் அவுதிரேலிய டொலர்கள் நிதியுதவி வழங்குவதாக அவுஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் பென்னி வாங் அறிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Leave a Reply