அவுஸ்திரேலியா அருகே மூழ்கிய அகதிகள் படகு: 20 ஆண்டுகளுக்கு முன் நடந்த பெருந்துயரம் 

188 Views

20 ஆண்டுகளுக்கு முன் நடந்த பெருந்துயரம்

அவுஸ்திரேலியாவில் தஞ்சமடையும் முயற்சியில் ‘தனது மனைவி மற்றும் மூன்று பெண் குழந்தைகள்’ கடலில் மூழ்கி உயிரிழந்த செய்தியை கேட்ட கணத்தை தன்னால் எண்ணிப் பார்க்க கூட முடியவில்லை என்கிறார் அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் ஈராக்கியரான அலி சோபி மஹதி. 

கடந்த 2001ம் ஆண்டு SIEV X எனும் இந்தோனேசிய மீன்பிடி படகில் வந்த இவரது குடும்பத்தினர் உள்ளிட்ட 353 அகதிகள் படகு கவிழ்ந்ததில் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் வெறும் 45 அகதிகள் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டனர். இது ஆஸ்திரேலிய வரலாற்றில் நிகழ்ந்த படுமோசமான படகு விபத்து எனப்படுகின்றது.

கடந்த 1999ம் ஆண்டு இந்தோனேசியாவிலிருந்து ஈராக்கிய அகதியான அலி சோபி மஹதி படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு சென்றடைந்திருக்கிறார். இதே போலவே, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரது குடும்பத்தினரும் இவ்வாறான படகு பயணத்தை 2001ம் ஆண்டில் மேற்கொண்ட பொழுது உயிரிழந்திருக்கின்றனர். 20 ஆண்டுகளுக்கு முன் நடந்த பெருந்துயரம் இச்சம்பவமாகும்.

தற்போது ஆஸ்திரேலியாவாசியாக உள்ள அலி சோபி மஹதிக்கு வயது 63 ஆகியிருந்தாலும் 20 ஆண்டுகளுக்கு முன்பு இழந்த தனது மனைவியையும் குழந்தைகளையும் மறக்க இயலாமல் அவர் தவிக்கிறார.

எங்களது குடும்பத்தினர் வந்த படகிற்கு அருகாமையில் இருந்த 4 அவுஸ்திரேலிய கப்பல்கள் அகதிகள் தத்தளித்துக் கொண்டிருந்த பொழுது உதவ முன்வரவில்லை எனக் கூறும் சோபி மஹதி, “அவர்கள் படகு உடைந்து மூழ்குவது வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருந்திருக்கின்றனர். மூழ்கிக்கொண்டிருந்த எனது மனைவி, குழந்தைகள், மற்றும் இன்னும் பிற அகதிகளுக்கு அக்கப்பல்கள் உதவவில்லை,” என்கிறார்.

“இந்தோனேசிய மீன்பிடி படகுகளே தங்களை காப்பாறியதாகவும் அவுஸ்திரேலிய கப்பல்கள் வேடிக்கை மட்டுமே பார்த்ததாகவும் இந்த விபத்திலிருந்து தப்பிய எனது உறவினர்கள் தெரிவித்தனர்,” எனக் கூறுகிறார் மஹிதி.

மஹிதிக்கு மறுமணம் நடந்து புதிய ஒரு குடும்பம் உருவாகியிருந்தாலும்,

இழந்த தனது பாசத்திற்குரியவர்களின் நினைவுகளிலிருந்து அவரால் மீள முடியவில்லை. கடலைக் கண்டால் கண்ணீர் விடும் நிலையை இன்றும் அவர் எதிர்கொள்கிறார்.

இந்த சம்பவத்தினால் உங்களுக்கு ஏதேனும் வெறுப்பு ஏற்பட்டுள்ளதா என எஸ்பிஎஸ் ஊடகம் எழுப்பிய கேள்விக்கு, “இல்லை, அவுஸ்திரேலியாவுக்கு எதிராக எந்த வெறுப்பும் இல்லை. ஆனால் இதற்கு காரணமான ஜான் ஹவார்ட் அரசாங்கத்தின் மீது உள்ளது,” எனக் கூறியுள்ளார் மஹிதி.

இந்த சம்பவம் தொடர்பாக அப்போது பேசிய தாராளவாத கட்சியைச் சேர்ந்த அவுஸ்திரேலிய பிரதமர் ஜான் ஹவார்ட், “இந்த படகு இந்தோனேசிய கடற்பரப்பில் மூழ்கியது. இதற்கு நாங்கள் பொறுப்பல்ல,” என்றார்.

ஆனால், இந்த சம்பவம் தொடர்பான விவரங்களை அம்பலப்படுத்திய முன்னாள் அவுஸ்திரேலிய தூதர் டோனி கெவின், “இப்படகு இந்திய பெருங்கடலில் மூழ்கியது. அதுவும் அவுஸ்திரேலிய கடல்சார் கண்காணிப்பு வலயத்திற்குள் மூழ்கியது. மூழ்கிய படகினை மீட்க ஆஸ்திரேலிய கப்பல்கள் எளிமையாக சென்றிருக்க முடியும்,” என தெரிவித்திருக்கிறார்.

இந்த சம்பவம் நவம்பர் 2001 ஆஸ்திரேலிய தேர்தல் முன்பு நிகழ்ந்ததாகவும் அப்போது ஆட்சியிலிருந்த தாராளவாத- தேசிய கூட்டணி அரசாங்கம் அகதிகள் படகு வருகைகள் தொடர்பான கொள்கைகளை கடுமையாக்கி இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக அவுஸ்திரேலிய மேலவை குழு நடத்திய விசாரணையில், ஆப்ரேஷன் Relex என்ற பெயரில் அவுஸ்திரேலிய கடல் பரப்பிற்குள் அகதிகள் படகுகளை வர விடாமல் சர்வதேச கடல் பரப்பிலேயே அப்படகுகளை தடுக்கும் நடவடிக்கையில் அவுஸ்திரேலிய படை ஈடுபட்டது அம்பலமாகியது. ஆனால், இவ்விசாரணையில் எந்த இறுதியான முடிவும் எட்டப்படவில்லை.

அதே சமயம், கடல் வழியாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல நினைப்பவர்களுக்கு சொல்ல முன்னாள் அகதியான அலி சோபி மஹதியிடம் ஒரு செய்தி இருக்கிறது. “படகு வழியாக செல்வதை முயற்சி செய்யாதீர்கள். ஆட்கடத்தல்காரர்களை நம்பாதீர்கள். ஏனெனில், பணம் பெறுவது மட்டுமே அவர்களது முதல் நோக்கம்.”

ilakku Weekly Epaper 152 october 17 2021 Ad அவுஸ்திரேலியா அருகே மூழ்கிய அகதிகள் படகு: 20 ஆண்டுகளுக்கு முன் நடந்த பெருந்துயரம் 

Leave a Reply