பட்டலந்த அறிக்கையை நிராகரித்தார் ரணில்

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையினை நிராகரிப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (16) விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அதன்படி, ‘1987 ஆம் ஆண்டு இலங்கை – இந்திய ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டதன் பின்னர் மக்கள் விடுதலை முன்னணி நாடு முழுவதும் பயங்கரவாதத்தை விதைக்க நடவடிக்கை எடுத்தது’.’அந்த நேரத்தில், ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன நாட்டின் முக்கியமான இடங்களைப் பாதுகாக்கும் அதிகாரத்தை அமைச்சரவை அமைச்சர்களிடம் ஒப்படைத்தார்’ என்று ரணில் விக்ரமசிங்க விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘பியகம பகுதியில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், டீசல் மின் உற்பத்தி நிலையம், மகாவலியிலிருந்து கொழும்புக்கு மின்சாரம் வழங்கும் மையம் மற்றும் வர்த்தக மண்டலம் போன்ற பல பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் காணப்பட்டன’.’அந்தப் பகுதிகளை பாதுகாப்பதற்காக இராணுவத்தினர் அழைக்கப்பட்டனர்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

‘இதன்படி, பாதுகாப்புப் படையினர் தங்குவதற்காக இலங்கை உர உற்பத்தி கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான கைவிடப்பட்ட கட்டடங்கள் மற்றும் வீடுகளை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது’ என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

‘1994 ஆம் ஆண்டுக்குப் பிறகு, பட்டலந்த பகுதியில் சித்திரவதைக் கூடம் இருந்ததா? என்பதை விசாரிக்க முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆணைக்குழு ஒன்றை ஸ்தாபித்தார்.
‘அதற்குப் பலர் அழைக்கப்பட்டிருந்தனர். நான் சாட்சியாக மாத்திரமே அழைக்கப்பட்டிருந்தேன். அந்த நேரத்தில், நான் நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றிக்கொண்டிருந்தேன்’ என்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எனவே ‘முழுமையான அரசியல் அவதூறு பிரசாரத்தை நோக்கமாகக் கொண்டு பட்டலந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டதாகவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்

இதேவேளை, பட்டலந்த ஆணைக்குழு தொடர்பான விவாதத்தை அடுத்த மாதம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, குறித்த அறிக்கை மீதான முதல் நாள் விவாதம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி நடத்தப்படவுள்ளது.

அத்துடன், இரண்டாவது நாள் விவாதம் எதிர்வரும் மே மாதத்தில் நடத்தப்படவுள்ளதாகவும், அதற்கான உரிய திகதி இறுதி செய்யப்படவுள்ளதாகவும் பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.