இந்திய ஆசியுடன் இன நல்லிணக்கம்! கொள்கை விளக்க உரையில் ஜனாதிபதி நாளை அறிவிப்பார்?

இந்திய ஆசியுடன் இன நல்லிணக்கம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாளை பாராளுமன்றில் புதிய ஆண்டுக்கான கொள்கை விளக்க உரையை ஆற்றவுள்ளார். இந்த உரையில், இந்திய ஆசியுடன் இன நல்லிணக்கம் ஏற்படுத்தும் செயல்திட்டத்தை ஆரம்பிப்பதற்கான உறுதிமொழியும் இடம் பெறும் என்று கொழும்பு ஆங்கில பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டு டிசெம்பர் 12 ஆம் திகதி பாராளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டது. அரசமைப்பு சட்டத்தின்படி ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையுடன் (சிம்மாசன உரை) பாராளுமன்றம் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பிக்கப்பட வேண்டும்.

இதன்படி, நாளை பாராளுமன்றம் ஆரம்பமாகும்போது ஜனாதிபதியின் உரை இடம்பெறும். இதில், 13ஆவது திருத்தம் குறித்து கவனம்
செலுதப்படும் என்றும் இந்த சட்டத்தின் உருவாக்கத்துக்குக் காரணமாக இருந்த இந்தியாவின் ஆசிர்வாதம் பெறப்படும் என்றும் ஜனாதிபதியின் உரையில் தெரிவிக்கப்படும் என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன என்று கொழும்பில் இருந்து வெளியாகும் ஆங்கில இதழான சன்டே ரைம்ஸ் தெரிவித்துள்ளது.

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக இந்தியா ஏற்கனவே உதவி திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. இந்த உதவிகளை வழங்கும்போது, தமிழ்நாட்டில் எழும் விமர்சனங்களை தவிர்க்கக்கூடிய சாதகமான நிலைகள் குறித்து புதுடில்லி ஆராய்கிறது.

ஏனெனில், மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு சட்ட மன்றத் தேர்தலில் 4 ஆசனங்கள் கிடைத்தன. ஈழத் தமிழர்களின கோரிக்கைகளை வென்றெடுப்பது அந்தக் கட்சியின் நிலையை தமிழ்நாட்டில் மேலும் வலுப்படுத்தும் என்று மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி நம்புகிறது. வடக்கு – கிழக்கு தமிழ் கட்சிகள் பொது வான நிலைப்பாட்டை முன்வைக்க வேண்டும் – 13 ஆரம்பப் புள்ளியாகக் கருதலாம் என்று கோரிக்கை முன்வைக்கு மாறு புதுடில்லி தமிழ்க் கட்சிகளுக்கு வேண்டுகோள் விடுத்திருப்பதற்கும் இதுவே காரணம் என்று கூறப்படுகின்றது. இத்தகவல்களை அரச உயர்மட்டத்தை மேற்கோள்காட்டி சண்டே டைம்ஸ் தெரி வித்துள்ளது.

Tamil News