சர்ச்சைக்குரிய Ondansetron ஊசி இலங்கைக்கு அனுமதிக்கப்பட்டமை குறித்து கேள்வி

இலங்கையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ஒன்டன்செட்ரோன் (Ondansetron) ஊசி மருந்து மனித பாவனைக்கு உகந்தது அல்ல என குற்றம் சாட்டப்பட்ட விவகாரம் தொடர்பில், மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்திய சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் மருத்துவர் சமல் சஞ்சீவ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மனித பாவனைக்கு உகந்தது அல்ல என அடையாளம் காணப்பட்டு, தற்போது பாவனையிலிருந்து நீக்கப்பட்டுள்ள ஒன்டன்செட்ரோன் (Ondansetron) ஊசி மருந்தானது, இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுவதற்கு முன்னர் நடத்தப்பட்ட ஆய்வகப் பரிசோதனைகளில் எவ்வித பாதிப்பும் இல்லாத மருந்து என உறுதிப்படுத்தப்பட்டிருந்தாக மருத்துவர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலுள்ள மான் பார்மாசியூட்டிகல்ஸ் (Maan Pharmaceuticals) நிறுவனத்திடமிருந்து கடந்த 2024நவம்பர், 2025 மே மற்றும் ஓகஸ்ட் காலப்பகுதிகளில் இந்த மருந்துகள் தயாரிக்கப்பட்டதாகவும், பெப்ரவரி, ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களில் நான்கு தொகுதிகளாக இவை இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

ஒவ்வொரு முறையும் 67,600 குப்பிகள் (vials) வீதம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இவை இலங்கைக்கு அனுப்பப்படுவதற்கு முன்னர் இந்தியாவில் பத்து வெவ்வேறு தரக் கட்டுப்பாட்டுப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, தரமானது என உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே அனுப்பப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய தரநிலைகளின்படி, பக்டீரியா நச்சு அளவு ஒரு மில்லிகிராமிற்கு 9.9 சர்வதேச அலகுகளுக்குக் குறைவாக இருக்க வேண்டும். இந்த மருந்துகள் அந்த எல்லைக்குள் இருந்ததாகவே ஆரம்ப அறிக்கைகள் கூறுகின்றன.

இந்தநிலையில் இந்த விவகாரத்தினால் பொதுமக்களின் நம்பிக்கை சீர்குலைந்துள்ளது. இதற்குக் காரணமான அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் மருத்துவர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.

இலங்கையின் மருந்து ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையிடமுள்ள தரக்கட்டுப்பாட்டு ஆய்வகம், இலங்கை அங்கீகார சபையினால் சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஒன்று அல்ல எனவும், சுமார் 500 கோடி ரூபாய் செலவில் சர்வதேச தரத்திலான ஆய்வகம் ஒன்றை இலங்கையில் அமைக்க முடியும். ஜனாதிபதி நிதியத்திற்கு ஒதுக்கப்படும் தொகையுடன் ஒப்பிடுகையில் இது சிறிய தொகையாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், உரிய தரமான ஆய்வகம் இலங்கையில் இல்லாத பட்சத்தில், தரமற்ற மருந்துகளால் மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதுடன், மருந்து நிறுவனங்களுக்குச் செலுத்தப்பட்ட பொதுமக்களின் நிதியை மீளப் பெற முடியாமல் போவதால் நாட்டுக்கு பெரும் நிதி இழப்பும் ஏற்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.