சமஷ்டியோ, பிராந்திய ஒன்றியமோ மக்கள் ஏற்கும் தீர்வை முதலில் முன் வையுங்கள்-சித்தார்த்தன்

சமஷ்டி முறையோ பிராந்திய ஒன்றிய முறையோ எதுவானாலும் மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய இனப்பிரச்சினைக்கான தீர்வொன்றை அரசாங்கம் முன்வைக்க வேண்டுமென, தமிழ் தேசியக் கூட்டமைப்பு  பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான சிறந்த தருணம் இதுவே என, சபையில் சுட்டிக்காட்டிய அவர், இப்போதாவது அரசாங்கம் தீர்வுக்கான முயற்சிகளை முன்னெடுக்காவிட்டால் நாடு இதைவிட மோசமான நிலைமைக்கு தள்ளப்படுவதை தவிர்க்க முடியாமல் போகுமென்றும் அவர் தெரிவித்தார். கடந்த காலங்களைப் போன்று, குழுக்களையும் பிரயோசனமற்ற பல கட்டப் பேச்சு வார்த்தைகளையும் நடத்தி பெருமளவு நிதியை மீண்டும் செலவிட முற்படக் கூடாது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க முன்வைத்த தீர்வுத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு இனப் பிரச்சினைக்கான தீர்வொன்றை அரசாங்கம் முன்வைக்க முடியும் என்றும் அவர் சபையில் தெரிவித்தார்.

சுதந்திரத்துக்குப் பின்னர் மலையக மக்களின் குடியுரிமை பிரச்சினையுடன் ஆரம்பிக்கப்பட்ட பிரச்சினை இதுவென சுட்டிக்காட்டிய அவர், அது பின்னர் யுத்தத்துக்கு வழி வகுத்து நாடு பெரும், செலவையும் அழிவுகளையும் எதிர்கொள்ள நேர்ந்தொகவும் அவர் தெரிவித்தார்.

இப்போதாவது இதற்கு நியாயமான தீர்வு ஒன்றை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரவு செலவுத் திட்டம் மீதான மூன்றாம் நாள் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

அடுத்து வரும் சுதந்திர தினத்துக்கு முன்பதாக இனப்பிரச்சனைக்கான தீர்வு ஒன்றை முன் வைப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.இது வரவேற்கக் கூடிய விடயம்.

1956 இல்,சிங்களம் மட்டும் சட்டத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டதே இனப் பிரச்சினை. இதனால் யுத்தமே ஆரம்பமானது. அதற்கு அரசாங்கம் பில்லியன் கணக்கான நிதியை செலவிட்டு பொருளாதாரத்திலும் பின்தங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

நாட்டில் இனப்பிரச்சினை இருக்கும் வரை நல்லிணக்கம் ஏற்படாது.இது தீர்க்கப்பட நியாயமான அரசியல் தீர்வொன்று அவசியமாக உள்ளது.

கடந்த காலங்களில் இதற்காக பலவாறு முயற்சிக்கப்பட்டன.பலன் ஒன்றும் ஆகவில்லை. பெருமளவு நிதி செலவிடப்பட்டதே ஒழிய தீர்வு பெற்றுக் கொள்ளப்படவில்லை.

இந்த நிலையில் ஜனாதிபதியின் அறிவிப்பு மகிழ்ச்சி தந்து, பெரும் எதிர்பார்ப்பையும் தோற்றுவித்துள்ளது.

அதேவேளை,நாட்டில் இந்தளவு பிரச்சினைகள் உள்ளபோதும் வடக்கில் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளும் நடவடிக்கைகளை கைவிட்டதாக தெரியவில்லை.

வடக்கில் காணி பிரச்சினைகள், திருக்கோணேஸ்வரம் பிரச்சினை போன்றவற்றை இதில் குறிப்பிட முடியும். இதுபோன்று பல பிரச்சனைகளுக்கு எமது மக்கள் முகம் கொடுத்து வருகின்றார்கள். அந்தப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.