ஓமானில் இருந்து நாடு திரும்புவதற்கு இலங்கை பெண்கள் கோரிக்கை

83 Views

இலங்கையைச் சேர்ந்த குறைந்தது 90 பெண் பணியாளர்கள் ஓமானில் நிர்க்கதியாகியுள்ளதாக மஸ்கட்டில் உள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

ஓமானின் மஸ்கட்டில் உள்ள இலங்கைத் தூதரகத்துக்கு செல்லும், இலங்கையைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களிடமிருந்து நாளாந்தம் அதிகமான முறைப்பாடுகள் கிடைத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவர்களில் பெரும்பாலோர் வருகை அல்லது சுற்றுலா வீசாவைப் பணி வீசாக்களாக மாற்றும் நோக்கத்தில் ஓமானுக்கு சென்றுள்ளவர்களாவர்.

அவர்களில் பலர் பதிவு செய்யப்படாத முகவர்களால் மனிதக்கடத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் பல்வேறு துன்புறுத்தல்கள் உட்பட பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். தற்போது, ​​சுமார் 90 இலங்கைப் பெண் வீட்டுப் பணியாளர்கள் ஓமானில் இருந்து நாடு திரும்புவதற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாடு திரும்புவதற்கான வீசா,விமான அனுமதிச்சீட்டு, முகவர் கட்டணம், மற்றும் அந்தந்த அனுசரணையாளர்கள் கோரும் ஆட்சேர்ப்பு செலவு போன்ற செலவுகளை அவர்களால் தாங்க முடியவில்லை என்று மஸ்கட்டில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட இந்த பெண்கள் பாதுகாப்பு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர், அதற்கான செலவுகளை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஏற்றுள்ளது.

இந்த பெண் தொழிலாளர்களுக்கு மருத்துவ உதவி உள்ளிட்ட நலன்புரி வசதிகளை தூதரகம் வழங்குகிறது. இந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களை திருப்பி அனுப்புவதற்கு ஓமான் அதிகாரிகளுடன் தொடர்ந்து செயலாற்றி வருகிறது இலங்கை தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக இந்த ஆண்டில், 240 க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்களை நாடு திரும்புவதற்கு தாம் உதவியுள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply