துரைராசா ரவிகரனின் கோரிக்கைக்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் இணக்கம்

மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவிலுள்ள சிவபுரம், குத்துப்பாலத்தினை அமைக்குமாறு வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜயபாலவிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் குறித்த சிவபுரம் குத்துப் பாலத்தினை அமைப்பதற்கு 500 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆனந்த விஜயபால தகவல் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தம் தொடர்பான விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் பேசப்பட்டுள்ளது.

இதுதொடர்பில்  பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில், வவுனிக்குளத்தின் கீழ்வரும் சிவபுரம் குத்துப் பாலம் நிர்மாணிக்கப்பட வேண்டும் என்றும் வெள்ள அனர்த்தம் ஏற்படும்போது இந்த சிவபுரம் குத்துப் பாலத்தினூடான வீதிப்போக்குவரத்து முற்றாகத் தடைப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
இதனால் மாந்தைகிழக்கு தனித் தீவாக மாறுகின்ற நிலைமை ஏற்படுகின்றது.

குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டம் மிகவும் பின்தங்கிய மாவட்டமாகக் காணப்படுகின்றது. அத்தகைய முல்லைத்தீவு மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய பிரதேசமாக மாந்தைகிழக்குப் பிரதேசம் காணப்படுகின்றது என்றும் பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்நிலையில் பொதுமக்கள் பாதுகாப்பு  மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜயபால இதன்போது பதிலளிக்கையில், குறித்த சிவபுரம் குத்துப்பாலத்தினை அமைப்பதற்கு 500 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுவிட்டது என்று கூறியுள்ளார்.