இலங்கையில் சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிராக அதிகாரம் மிக்க சமயத் தலைவர்களால் இழைக்கப்படும் பாலியல் ரீதியான அநீதிகள் அதிகரித்து வரும் நிலையில், அதற்கு எதிராக கண்டனத்தையும் நீதிக்கான கோரிக்கையையும் வெளிப்படுத்தும் வகையில் மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியம் ஏற்பாடு செய்த கண்டனப் பேரணி வெள்ளிக்கிழமை (29) மன்னார் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக நடத்தப்பட்டது.
மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தின் இணைப்பாளர் கே.மகாலட்சுமி தலைமையில் பெற்ற குறித்த கண்டனப் பேரணியில் பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், மெசிடோ நிறுவன பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டதோடு, புத்தளம் மாவட்ட முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கை நிதியத்தின் பணிப்பாளர் யுகைதியா முகைதீனும் கலந்துகொண்டிருந்தார்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு ஈடுபட்டனர்.
“சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் அநீதிகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்”, “பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி மற்றும் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்”, “குற்றவாளிகள் யாராக இருந்தாலும் பக்கசார்பற்ற சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்”, “பெண்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்”, “சட்டமும் நீதி முறையும் சமமாகவும் வெளிப்படையாகவும் செயல்பட வேண்டும்” என்ற வாசகங்கள் குறித்த பதாதைகளில் குறிப்பிடப்பட்டிருந்தது.



