திருகோணமலை நகர் பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினரால் வேலியிடப்பட்டுப் பராமரிக்கப்பட்டு வரும் நிலப் பகுதியில் தாய்லாந்திலிருந்து வரும் பெளத்த துறவிகளின் பங்கேற்புடன் சட்டவிரோதமாகப் புத்தர் சிலை ஒன்று நாளை பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து குறித்த பகுதியில் இன்று காலை முதல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்தப் போராட்டத்தில் அக்கட்சியின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் திருகோணமலை மாவட்ட பொதுமக்கள் எனப் பலரும் பங்கேற்றுள்ளனர்.
“திருமலை எங்கள் தலைநகரம், எமது நிலம் எமக்கு வேண்டும், எமது கடல் எமக்கு வேண்டும், தமிழர் தேசத்தில் பௌத்த விகாரை எதற்கு?, மண் துறந்த புத்தனுக்கு தமிழ் மண் மீது ஆசையா?, பௌத்தமயமாக்கலை நிறுத்து” – என்று போராட்டக்காரர்கள் கோஷம் எழுப்பி வருகின்றனர்.
போராட்ட இடத்துக்குச் சென்ற திருகோணமலை மாவட்ட அரச அதிபர், போராட்டக்காரர்களுடன் பேசினார்.
எனினும், “போராட்டம் செய்வது எமது உரிமை; அதற்கு யாரும் தடை போடக்கூடாது” என்று போராட்டக்காரர்கள் கூறியதையடுத்து மாவட்ட அரச அதிபர் அவ்விடத்திலிருந்து வெளியேறிவிட்டடார்.