பயங்கரவாத தடைச்சட்டத்தை தொடரும் அநுர அரசாங்கம்: அம்பிகா சற்குணநாதன் கேள்வி

பயங்கரவாத தடைச்சட்டம் சர்வதேச மனித உரிமை தராதரங்களை பின்பற்றியதாக காணப்படவில்லை என ஐக்கிய நாடுகள்,இலங்கை மனித உரிமை ஆணைக்குழு உட்பட பலவற்றின் ஆய்வுகள் தெரிவித்துள்ளதை அனுரகுமாரதிசநாயக்க மறக்க முடியாது என  இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்

மனித உரிமைகள் விடயத்தில் குறைபாடுள்ள சட்டத்தை தேசிய மக்கள் சக்தி தக்கவைக்கவிரும்புகின்றது என அந்த கட்சியால் தெரிவிக்க முடியுமா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்

சமூக ஊடக பதிவில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது. பயங்கரவாத தடைச்சட்டத்தில் பிரச்சினையில்லை,மாறாக அது தவறாக பயன்படுத்தப்படுவதே  பிரச்சினை என தேசிய மக்கள் சக்தி தெரிவிக்கின்றது – பயங்கரவாத தடைச்சட்டத்தை தொடர்ந்து தக்கவைப்பதற்கான காரணமாக தேசிய மக்கள் சக்தி இதனை தெரிவிக்கின்றது.

பயங்கரவாததடைச்சட்டம் பத்திரிகையாளர்கள் சிவில் சமூகத்தினருக்கு எதிராக பயன்படுத்தப்பட்டதே பிரச்சினைக்குரிய விடயம் என தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளதுடன் எதிர்காலத்தில் அது இடம்பெற அனுமதிக்கமாட்டோம் என  குறிப்பிட்டுள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டம் சர்வதேச மனித உரிமை தராதரங்களை பின்பற்றியதாக காணப்படவில்லை என ஐக்கிய நாடுகள் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு உட்பட பலவற்றின் ஆய்வுகள் தெரிவித்துள்ளதை அனுரகுமாரதிசநாயக்க நீங்கள் மறக்க முடியாது.

இலங்கை இந்த சர்வதேசசட்டங்கள் உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டுள்ளது.இதன் காரணமாக அதனை கடைப்பிடிக்கவேண்டிய கடப்பாடு உள்ளது.

இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் சிறைச்சாலை ஆய்வு உட்பட பல ஆய்வுகளில் கிடைத்த ஆதாரங்கள் பயங்கரவாத தடைச்சட்டம் தமிழர்கள் முஸ்லீம்களிற்கு எதிராக பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் இவர்கள் பத்திரிகையாளர்களே அல்லது சிவில் சமூகத்தினரோஇல்லை என்பதையும் வெளிப்படுத்தியுள்ளது.

ஆகவே இது பழிவாங்குவது குறித்தது இல்லை மாறாக ஆனால்  ஆழமாக வேரூன்றிய இனமதரீதியான பாகுபாடுகளை அடிப்படையாக கொண்டது.

பயங்கரவாததடைச்சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்போம் என அரசாங்கம் தெரிவிக்கின்ற அதேவேளை பொலிஸார் உரிய நடைமுறைகளை புறக்கணித்தே அதிகளவில் செயற்படுகின்றனர் என்பது வெளிப்படையாக தெரியும் விடயம்.

பயங்கரவாத தடைச்சட்டம் மூலம் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள பரந்துபட்ட அதிகாரங்கள்  துஸ்பிரயோகங்களையும் தண்;டனையின் பிடியிலிருந்து விலக்களித்தலையும் அதிகரிக்கின்றன தீவிரப்படுத்துகின்றன.

மனித உரிமை மீறல்களை அதிகரிக்க கூடிய ஏனையபல ஏற்பாடுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தில் காணப்படுகின்றன.

அடிப்படை உரிய செயல்முறைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதால்  சட்டமே ஒரு பிரச்சினையாக காணப்படுகின்றது,

மனித உரிமைகள் விடயத்தில் குறைபாடுள்ள சட்டத்தை தேசிய மக்கள் சக்தி தக்கவைக்கவிரும்புகின்றது என அந்த கட்சியால் தெரிவிக்க முடியுமா?