‘பாலத்தீனம் தனிநாடு அங்கீகாரம்’ பிரதமர் நெதன்யாகு கருத்து

பாலத்தீனை தனி நாடாக அங்கீகரிப்பதாக பிரிட்டன், கனடா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள்   அறிவித்துள்ளன. அதற்கு முன்னர் போர்ச்சுகலும் பாலத்தீனை தனி நாடாக அங்கீகரித்திருந்தது.

சில மாதங்களுக்கு முன்பு செட்பம்பருக்குள் போர் நிறுத்தம் மற்றும் அமைதி ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புக்கொள்ளவில்லை என்றால் பாலத்தீனை தனி நாடாக அங்கீகரிப்போம் என அந்த நாடுகள் கெடு விதித்திருந்தன.

அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் ஐநாவில் நடைபெற உள்ள பொதுச்சபை கூட்டத்திற்கு முன்பாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இதனை தொடக்கத்தில் இருந்தே எதிர்த்து வருகின்றன.

இந்த அறிவிப்பை தொடர்ந்து பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனி பாலத்தீன நாடு உருவாகாது எனத் தெரிவித்துள்ளார். இதனை அங்கீகரித்த தலைவர்களுக்கு நான் தெளிவான செய்தி அனுப்பியிருந்தேன் என்று கூறும் நெதன்யாகு “நீங்கள் தீவிரவாதத்திற்கு மிகப்பெரிய வெகுமதியை வழங்குகிறீர்கள்” எனத் தெரிவித்தார்.

ஆனால் பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டாமர் இதனை மறுத்துள்ளார். “இது ஹமாஸுக்கு வழங்கப்படும் வெகுமதி இல்லை. ஹமாஸுக்கு எதிர்காலம் இல்லை, அரசாங்கம் மற்றும் பாதுகாப்பில் எந்தப் பங்கும் இல்லை.” எனத் தெரிவித்துள்ளார்.