தமிழ் தரப்புடன் ஜனாதிபதி ரணில் பேச்சுவார்த்தை: அதிகாரப்பரவலாக்கம் குறித்து இணக்கமில்லை

தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்த பேச்சுவார்த்தைகளின் நீட்சியாக அதிகாரப்பரவலாக்கம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தரப்புக்கும் வட, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் திங்கட்கிழமை (15) நடைபெற்ற இரண்டாம் நாள் பேச்சுவார்த்தை இணக்கமின்றி முடிவுக்குவந்தது.

இப்பேச்சுவார்த்தையின்போது மாகாணசபைகளைத் தற்காலிகமாக நிர்வகிக்கும் வகையிலான இடைக்கால நிர்வாகமுறைமை தொடர்பில் தமிழ் மக்கள் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்கினேஸ்வரனால் யோசனையொன்று முன்வைக்கப்பட்டபோதிலும், அதற்கு எதிர்ப்பை வெளியிட்ட தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு புதிய அரசியலமைப்பை உருவாக்கும் அதேவேளை, மாகாணசபைத்தேர்தல்களை உடனடியாக நடத்தவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

நல்லிணக்கம் மற்றும் அதிகாரப்பகிர்வு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் மக்கள் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துக்கும் இடையிலான தொடர் பேச்சுவார்த்தையின் இரண்டாம் நாள் சந்திப்பு திங்கட்கிழமை (15)நடைபெற்றது.

ஜனாதிபதி செயலகத்தில்  நடைபெற்ற இப்பேச்சுவார்த்தையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஆளுந்தரப்பில் அமைச்சர்களான விஜயதாஸ ராஜபக்ஷ, நஸீர் அஹமட், பிரசன்ன ரணதுங்க இராஜாங்க அமைச்சர்களான எஸ்.வியாழேந்திரன், சிவநேசதுரை சந்திரகாந்தன், பாராளுமன்ற உறுப்பினர் திலீபன் ஆகியோரும் ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் ஆலோசகர் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர்.

அதேபோன்று வட, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த்தரப்பில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி, பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன், சாள்ஸ் நிர்மலநாதன், கலையரசன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். ஜனநாயக தமிழ்த்தேசியக்கூட்டணியின் சார்பில் பங்காளிக்கட்சிகளின் பாராளுமன்ற பிரதிநிதிகளான ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி, செயலாளர் நாயகம் கோவிந்தன் கருணாகரம் எம்.பி ஆகியோரும் புளொட் தலைவர் சித்தார்த்தன் எம்.பியும் பங்கேற்றிருந்தனர்.

மேலும் தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச்செயலாளரும் யாழ்மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரனும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் யாழ்மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனும் ஜனாதிபதியுடனான இச்சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது அரசாங்கத்தரப்பின் சில தமிழ்ப்பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூகப்பிரதிநிதிகளின் கையெழுத்துடனான ஓர் ஆவணத்தை தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் முன்மொழிந்துள்ளார்.

அதில் மாகாணசபை முறைமையில் நிலவும் நிர்வாகச்சிக்கல்களைத் தீர்த்தல் மற்றும் இடைக்கால நிர்வாக முறைமையொன்றை உருவாக்கல் பற்றிய விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. அந்த ஆவணம் தொடர்பில் ஜனாதிபதி நேர்மறையான பிரதிபலிப்பை வெளிக்காட்டிய போதிலும், தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினர் அதனை முழுமையாக எதிர்த்துள்ளனர்.

மேலும் அந்த ஆவணம் தொடர்பில் கலந்துரையாடும் நோக்கில் தெரிவுக்குழுவொன்றை அமைக்கும் ஜனாதிபதியின் யோசனையையும் நிராகரித்த கூட்டமைப்பினர், அக்குழுவில் தாம் அங்கம்வகிக்கப்போவதில்லை என்றும் அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து சி.வி.விக்கினேஸ்வரன்  கூறுகையில்,

ஜனாதிபதியுடனான சந்திப்பின்போது நான் மாகாணசபைகளுக்கான இடைக்கால நிர்வாக முறைமை, மாகாணசபைத்தேர்தல் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளல் என்பன தொடர்பில் ஆவணமொன்றைத் தயாரித்து வாசித்தேன். இடைக்கால நிர்வாக முறைமை என்பது சட்டத்துக்கு முரணானதொன்றல்ல. மாறாக சட்டத்தில் உள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஏதுவானதொரு கட்டமைப்பேயாகும்.

இருப்பினும் இதுபற்றிக் கருத்து வெளியிட்ட சுமந்திரன், புதிய அரசியலமைப்பை உருவாக்கவேண்டும் என்றும் மாகாணசபைத்தேர்தல்களை நடாத்தி முழுமையான அதிகாரங்களை வழங்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார். ஆனால் புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதற்குக் காலம் எடுக்கும் என்பதாலும், மாகாணசபைத்தேர்தல்களை நடத்துவதற்கு முன்னதாகப் பல்வேறு செயன்முறைகளைக் கடக்கவேண்டியிருப்பதாலும் ஜனாதிபதி எனது யோசனையை ஏற்றுக்கொண்டார். இதுபற்றிக் கலந்துரையாடுவதற்காகக் குழுவொன்றை நியமிப்பதாகவும் அவர் கூறியிருக்கின்றார் என்றார்.

ஜனாதிபதியுடனான சந்திப்பு தொடர்பில் எம்.ஏ.சுமந்திரன் கூறியதாவது:

15 ஆம் திகதி திங்கட்கிழமை சந்திப்பில் விக்கினேஸ்வரன் ஆவணமொன்றை சமர்ப்பித்தார். அந்த ஆவணம் ஏற்கனவே எம்மிடம் கையளிக்கப்பட்டிருந்த போதிலும், நாமனைவரும் அதனை நிராகரித்திருந்தோம். ஜனாதிபதியும் அந்த ஆவணத்தைக் கையில் வைத்திருந்தார்.

மாகாணசபைகளுக்கான இடைக்கால நிர்வாகம் மற்றும் நிர்வாகச்சிக்கல்கள் பற்றி அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருந்த யோசனைகளுக்கு நாம் இணங்கவில்லை. அதுபற்றிக் கலந்துரையாடும் நோக்கில் குழுவொன்றை நியமிப்பதற்கான ஜனாதிபதியின் யோசனைக்கும் நாம் இணங்கவில்லை.

மாறாக புதிய அரசியலமைப்பை உருவாக்கவேண்டும் என்று நாம் வலியுறுத்தினோம். ஆனால் அதனை உடனடியாகச் செய்யமுடியாது என்று கூறிய ஜனாதிபதி, அதற்கு இணங்கவில்லை. இரண்டாவதாக மாகாணசபைத்தேர்தலை உடனடியாக நடத்துமாறும், அதுகுறித்து பாராளுமன்றத்தில் நான் சமர்ப்பித்த தனிநபர் பிரேரணைக்கு ஆதரவளிக்குமாறும் வலியுறுத்தினோம். இருப்பினும் அதுகுறித்துப் பாராளுமன்றத்திலேயே ஆராயவேண்டும் என்று கூறப்பட்டது. எனவே எமது கோரிக்கைகளுக்கு அவர்கள் இணங்கவில்லை என்று குறிப்பிட்டார்.