தமிழர்களுக்கு இலங்கையில் பிரச்சினையிருக்கின்றது என்பதை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளவேண்டும்-கோவிந்தன் கருணாகரம்

462 Views

தமிழர்களுக்கு இலங்கையில் பிரச்சினையிருக்கின்றது

தமிழர்களுக்கு இலங்கையில் பிரச்சினையிருக்கின்றது என்பதை ஜனாதிபதி முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதன் பின்னரே அரசியல் தீர்வு விடயம் தொடர்பில் பேசவேண்டும் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

இன்று மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.இதன்போது கருத்து தெரிவித்த அவர், “எதிர்வரும் 15ஆம் திகதி தமிழ் தேசிய கூட்டமைப்புடனான சந்திப்புக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளதாக அறிகின்றோம்.தமிழ் தேசிய கூட்டமைப்பின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் சந்திப்பதற்கு முயற்சிக்கின்றார்.

கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னரும் பேச்சுவார்த்தைக்கு அழைத்து பின்னர் அவரே அதனை இரத்துச்செய்து வேறு திகதியை வழங்குவதாக உறுதியளித்திருந்தார்.அதன் பின்னர் எந்த அழைப்பும் விடுக்கப்படவில்லை.

இருந்தபோதிலும் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் வடகிழக்கில் நடைபெறும் காணி அபகரிப்பு தொடர்பில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக தமிழ் தேசிய அரசியல் பரப்பில் இயங்கும் 13பாராளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தபோது ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றினை கையளிக்க முயற்சித்தோம்.ஆனால் அந்த நேரத்தில் ஜனாதிபதி இல்லை,பிரிதொரு திகதியை தருகின்றோம் என ஜனாதிபதி செயலகத்தினால் அன்று கூறப்பட்டிருந்தது.

அந்த வகையில் காணி அபகரிப்பு தொடர்பில் பேசவேண்டுமாகயிருந்தால் அவர் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் மாத்திரமல்லாமல் அந்த போராட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் அவர் பேசவேண்டும்.

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இனப்பிரச்சினை தொடர்பாக அவர் பேசவேண்டுமாகயிருந்தால் சில விடயங்களை அவர் மக்களுக்கு கூறவேண்டும்.இந்த ஜனாதிபதி எங்கு சென்றாலும் தான் 69இலட்சம் சிங்கள மக்களினால் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதி,தான் சிங்கள மக்களுக்காக கடமையாற்றிக்கூடிய ஜனாதிபதி என்று கூறிவருகின்றார்.

கடந்த 18ஆம் திகதிய பாராளுமன்ற சிம்மாசன உரையில்கூட தமிழ் மக்களுக்கு ஒரு இனப்பிரச்சினையிருக்கின்றது,அதற்கு ஒரு அரசியல் தீர்வு வேண்டும் என்றுகூட கூறமுடியாதவர்தான் இந்த ஜனாதிபதி. இன்று ஐக்கிய நாடுகள் சபை உட்பட பல இடங்களில் தமிழ் மக்களுக்கு இனப்பிரச்சினையில்லை,அவர்களுக்கு பொருளாதார பிரச்சினையென அவரின் பிரதிநிதிகள் கூறிவருகின்றனர்.

முதலில் அரசியல் தீர்வு,இனப்பிரச்சினை தொடர்பாக ஜனாதிபதி தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேசவேண்டுமாகவிருந்தால் தமிழினத்திற்கு ஒரு பிரச்சினையிருக்கின்றது,அவர்களுக்கு ஒரு அரசியல் தீர்வு வேண்டும் என்று என்பதை இந்த ஜனாதிபதி முதலில் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு அவர்களுக்கு தேவையில்லை,பொருளாதாரம் சார்ந்த தீர்வுதான் தேவையென்று கூறிக்கொண்டு அரசியல் தீர்வு தொடர்பாக பேசவேண்டிய தேவையில்லை” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Tamil News

Leave a Reply