ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் குழுவை வழிநடத்துகிறாரா பிரசாந்தன்?

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊடகவியலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பி அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மட்டக்களப்பு பொலீஸ் தலைமயகத்தில் முறைப்பாடு ஒன்றை செய்திருந்தது.

குறித்த முறைப்பாடு தொடர்பாக வாக்குமூலங்களைப் பெற்றுக் கொண்ட பொலீஸ் அதிகாரிகள் ஊடகவியலாளர்களுக்கு எதிராக அவதூறு பரப்பி அச்சுறுத்தல் விடுத்த நபர்களுக்கு எதிராக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் ஊடகவியலாளர்கள் மீதும் அவர்களது குடும்பங்கள் குறித்தும் அவதூறு பரப்பி அச்சுறுத்தல் விடுத்த குறித்த குழுவை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் தான் வழிநடத்துகிறார் என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கும் தங்களது கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை அவர்களுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறிய தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பிரசாந்தன் நேற்று முன்தினம் 25 திகதி குறித்த நபர்களுடன் நடாத்திய ஆலோசனை கூட்டம் தொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது.

ஏற்கனவே அவர்களுக்கும் தங்களது கட்சிக்கும் தொடர்பில்லை என ஊடகவியலாளர்களிடம் பொய் உரைத்து விட்டு தற்போது அவர்களை அழைத்து கூட்டம் நடத்தும் பிரசாந்தன் தான் குறித்த குழுவை வழிநடத்துகிறார் என்பது ஆதாரபூர்வமாக தெரியவந்துள்ளது.

இவர்கள் ஆளும் கட்சியின் பங்காளிகள் என்பதால் தான் இது வரைக்கும் இவர்களை காவல்துறையினர் கைது செய்யவில்லையா? காவல்துறையினரை  நடவடிக்கை எடுக்க விடாமல் பிரசாந்தன் அழுத்தம் கொடுத்து வருகிறாரா? என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளதாக பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மே 09ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுக்காக மக்களைச் சேர்க்கப் பயன்படுத்தப்பட்ட 59 சமூக ஊடகக் குழுக்கள் அடையாளம் காணப்பட்டு அவற்றின் admins களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலீஸ்மா அதிபர் கூறியுள்ளார். ஆனால், பாராளுமன்றத்தில் மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்கள் மீது பிள்ளையான் குழுவினர் முகநூலின் ஊடாக மேற்கொண்ட அவதூறு மற்றும் அச்சுறுத்தல்கள் தொடர்பாக உடனடி விசாரணை நடத்த பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் கூறியும் சம்பந்தப்பட்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.

Tamil News