அரசியல் கைதிகள் விவகாரத்துக்கு விரைவில் தீர்வு! – நீதி அமைச்சர் உறுதி

441 Views

கைதிகள் விவகாரத்துக்கு விரைவில் தீர்வு

நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகள் விவகாரத்துக்குப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தங்களை செய்வதன் மூலம் கைதிகள் விவகாரத்துக்கு விரைவில் தீர்வு காண அரசு தயாராக இருக்கின்றது.” என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

இன்று தொடக்கம் எதிர்வரும் 30 ஆம் திகதி வரையில் வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள நடமாடும் நீதிக்கான அணுகல் சேவை வேலைத்திட்டம் தொடர்பில்  நீதி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சிறைக்கைதிகளும் மனிதர்களே என்ற வாசகத்தை மாத்திரம் எழுதிவைப்பதால் சிறைக்கைதிகள் பாதுகாக்கப்படப்போவதில்லை. கடந்த காலங்களில் சிறைச்சாலைகளில் இடம்பெற்ற தாக்குதல்கள், அச்சுறுத்தல் செயற்பாடுகள் குறித்து நாம் எமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளோம். இதனை ஒருபோதும் நாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. அதேபோல் இவ்வாறான ஒரு சில சம்பவங்கள் இடம்பெறுகின்ற காரணத்துக்காக ஒட்டுமொத்த சிறைச்சாலை கட்டமைப்பையும் தவறாகச் சித்தரிக்கவும் முடியாது.

சகல நாடுகளிலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. மாறாக இலங்கையில் மாத்திரம் இவை இடம்பெறுவதாகக் கூறவும் முடியாது. எவ்வாறு இருப்பினும் எதிர்காலத்தில் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறாத வகையில் சகல தரப்பினருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒரு சிலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டும் வருகின்றன.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தைத் திருத்துவதற்கு அரசு தற்போது முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்வது குறித்து ஆராயும் விதமாக ஜனாதிபதியால் நிபுணர்கள் குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது. 42 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. அது குறித்து விரைவில் தீர்மானம் எடுக்கப்படும்” – என்றார்.

Tamil News

Leave a Reply