கொழும்பில் களவு நகை தொடர்பிலான விசாரணை ஒன்றின்போது, காவல்துறையினருக்கு மொழிபெயர்த்து உதவ முயன்ற இளைஞர் ஒருவர் காவல்துறையினரால் தாக்கப்பட்டதில் பலத்த காயமடைந்து மயக்கமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு – செட்டியார் தெரு பகுதியில் களவு நகை தொடர்பான விசாரணைக்காக காவல்துறையினர் சென்றிருந்த வேளையில், மொழிப்பிரச்சினை ஏற்பட்டதுடன் விசாரணை நடவடிக்கைகளை இரு தரப்பினருக்கும் இடையே முன்னெடுப்பதற்காக குறித்த இளைஞர் மொழிபெயர்ப்பில் ஈடுபட்டார்.
இதன்போது, ஏற்பட்ட குழப்பகரமான நிலையில் ஆத்திரமடைந்த மூன்று காவல்துறையினர் இணைந்து, குறித்த இளைஞரை மிகக் கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.
காவல்துறையினரின் இத்தாக்குதலில் காயமடைந்த இளைஞர், சம்பவ இடத்திலேயே மயக்கமடைந்து விழுந்துள்ளார்
இதனைத் தொடர்ந்து, அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை அவசர சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
பொதுமக்களுக்கு சட்டத்தின் வழியில் உதவ முன்வந்த இளைஞர் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதலைக் கண்டித்து அங்கு பொதுமக்கள் மற்றும் நகை வியாபாரிகள் ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டதால், செட்டியார் தெரு பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது.
இதேவேளை, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற புறக்கோட்டை காவல்நிலைய பொறுப்பதிகாரி நிலைமையைச் சீராக்கியதோடு, தாக்குதலில் ஈடுபட்ட உத்தியோகத்தர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
அவரது உறுதிமொழியைத் தொடர்ந்து அங்கு கூடியிருந்தவர்கள் கலைந்து சென்றனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தீவிரமாக நடத்தப்படும் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.



