யாழ்ப்பாணம் – தையிட்டி விஹாரையில், எதிர்வரும் ஜனவரி மாதம் 3ஆம் திகதி மீண்டும் ஒரு புத்தர் சிலையினை நிறுவுதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதால், அன்றைய தினமும் பாரிய போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தையிட்டியில் நேற்று (21) நடைபெற்ற கைது நடவடிக்கையினை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த, பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் இதனைத் தெரிவித்துள்ளார். இதேவேளை யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு – தையிட்டி பகுதியில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்டவர்கள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, குறித்த ஐவரும் ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் குறித்த வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 26ஆம் திகதி மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
முன்னதாக நேற்று முற்பகல் குறித்த பகுதியில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது, வேலன் சுவாமி உள்ளிட்ட 05 பேர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



