பதுளையில் இந்திய வீட்டுத்திட்டத்தின் 4ஆம் கட்டப் பணிகள் ஆரம்பம்!

இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடனும் இலங்கை அரசாங்கத்தின் அனுசரணையுடனும் செயல்படுத்தப்படும் ‘இந்திய வீட்டுத் திட்டத்தின்’ 4-ஆம் கட்டத்தின் கீழ், பதுளை மாவட்டத்தில் புதிய வீடுகள் அமைக்கும் பணி ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதன்படி, பதுளை மாவட்டம் ஊவபரணகம பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அலகொல்லை தோட்டத்தில் 51 புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நாளை செவ்வாய்க்கிழமை (29) காலை 9.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்தியாரத்ன மற்றும் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ஆகியோரின் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதிநிதிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.

மலையக சமூகத்திற்கு பாதுகாப்பான, தரமான மற்றும் கௌரவமான வீட்டு வசதிகளை வழங்கும் நோக்கில் இந்த வீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதில் மண்சரிவு அதி உயர் அபாய வலயத்தில் வாழ்ந்து 13 வருடங்களுக்கும் மேலாக பாதுகாப்பற்ற நிலைமைகளை எதிர்கொண்ட 51 குடும்பங்களுக்கான புதிய வீடுகளின் நிர்மாணப் பணிகள் இங்கு ஆரம்பிக்கப்படுகிறது.

நீண்ட காலமாக மண்சரிவு அபாயம் காரணமாக கடினமான சூழ்நிலையில் வாழ்ந்து வந்த இந்த குடும்பங்களுக்கு, பாதுகாப்பான வீட்டுச் சூழலையும் கௌரவமான வாழ்க்கைத் தரத்தையும் உருவாக்கிக் கொடுப்பதே இந்த திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும். இதில் ஒரு வீட்டு அலகுக்கு இந்திய அரசாங்கத்தால் ரூபா 28 இலட்சம் நிதி ஒதுக்கீடு வழங்கப்படுகிறது,

மேலதிக உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக இலங்கை அரசாங்கத்தால் ஒரு வீட்டுக்கு ரூபா 4 இலட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.